Home பெண்கள் உடல் கட்டுப்பாடு எடை குறைய.. இடை மெலிய..

எடை குறைய.. இடை மெலிய..

45

illiyana4திருமணத்திற்கு முன்பு, கல்லூரி கதாநாயகியாக கொடி இடையுடன் வலம் வந்த பெண்கள் பலர், திருமணமான சில வருடங்களிலே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் பருமனாகி அவஸ்தைப்படுகிறார்கள். சிறுவயதில் இருந்தே நாட்டியம் கற்று டீன்ஏஜில் கட்டான உடலுக்கு எடுத்துக்காட்டாய் இருந்த பெண்கள் பலர் கல்யாணமாகி ஒன்றிரண்டு குழந்தைகள் பெற்ற பின்பு உடல் பருத்து, எப்படி எடையை குறைப்பது என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

உடல் எடை அதிகரிப்பு என்பது இன்று உலகையே அச்சுறுத்தும் பிரச்சினையாக உருவாகியிருக்கிறது. இந்தியாவில் ஆண்களில் 12 சதவீதம் பேரும், பெண்களில் 16 சதவீதம் பேரும் உடல் எடை அதிகரிப்பால் ஆரோக்கியத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள். மாநிலங்களைப் பொறுத்த வரையில் பஞ்சாபில் 30 சதவீத ஆண்களும், 38 சதவீத பெண்களும், தமிழ்நாட்டில் ஐந்தில் ஒரு ஆμம், நான்கில் ஒரு பெண்ணும் குண்டு உடலால் ஏகப்பட்ட நோய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

யாருடைய உடலும் திடீரென்று ஒரே நாளில் மேஜிக் போன்று பருத்துப்போய்விடுவதில்லை. அவர்கள் தேவைக்கு அதிகமாக சாப்பிட்டுக்கொண்டே இருந்ததால், பல மாதங்களாக சிறுகச் சிறுக எடை உயர்ந்து அவர்களை குண்டாக்கி இருக்கிறது. இன்று உடல் உழைப்பும்- உடற்பயிற்சியும் தனித்தனியாக பிரித்துப்பார்க்கப்படுகிறது. முற்காலத்தில் மக்கள் கடுமையாக உழைத்தனர்.

அதுவே அவர்களுக்கு உடற்பயிற்சியாக இருந்தது. அதனால் அவர்கள் உண்ட உணவின் கலோரி எரிக்கப்பட்டு, ஆரோக்கிய உடலுடன் வாழ்ந்தார்கள். இன்று உடல் உழைப்பே இல்லாமல், இருக்கைகளில் உட்கார்ந்த படியே வேலைபார்த்து, இஷ்டத்திற்கு சாப்பிட்டு, உடற்பயிற்சியும் இல்லாமல் உடலை குண்டாக்கிவிடுகிறோம். மன அழுத்தம் இல்லாதவர்கள் இன்று யாரும் இல்லை.

சமூகரீதியாகவோ, வேலை ரீதியாகவோ, குடும்ப ரீதியாகவோ, பொரு ளாதார ரீதியாகவோ, உறவு ரீதியாகவோ.. ஏதாவது ஒரு விதத்தில் மன அழுத்தம் உருவாகிவிடுகிறது. மன அழுத்தத்தை போக்கும் வடிகாலாக பலரும் உணவை கருதுகிறார்கள். மனஅழுத்தம் ஏற்படும்போதெல்லாம் சாப்பிட்டுக்கொண்டே இருப்பது அவர்கள் இயல்பாகிவிடுகிறது.

சாப்பாட்டின் அளவில் அவர்களுக்கு திருப்தியே ஏற்படாது. இதனை கம்போர்ட் ஈட்டிங் என்கிறோம். அது என்னவோ தெரியவில்லை. நம்மில் பலர் உடலை அசைக்கவே தயங்குகிறார்கள். மாடிப்படிகளில் ஏறி நடந்துசெல்வதற்கு பதில் லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகளை பயன்படுத்துகிறார்கள்.

பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பேசக்கூட, நடந்து அவரைத் தேடிச் செல்லாமல் இருந்த இடத்திலே போனை பயன்படுத்துகிறார்கள். அன்றாட வீட்டு வேலைகளைக்கூட செய்யாமல் அதற்கான கருவிகளை பயன்படுத்தி உடல் எடையை அதிகரிக்கச் செய்துவிடுகிறார்கள். மனோவியாதி, மூச்சுக்குழாய் தொடர்புடைய நோய்களுக்கான மருந்துகளாலும், ஸ்டீராய்டு வகை மருந்துகளை உட்கொண்டாலும் உடல் எடை அதிகரிப்பதுண்டு.

உடல் குண்டாகி அடிவயிறு, கை, தொடைப்பகுதி, பின்பகுதி போன்றவைகளில் கொழுப்பு அதிகம் படியும்போது அதை நம்மால் காணமுடியும். வெளியே காண முடியாத அளவுக்கு கொழுப்பு இதயம், சுவாசப்பகுதி, ஈரல் போன்ற உள் அவயங்களில் குஷன்போல் படியும். இதனால் உடல் இயக்கத்தை சீர்கெடுக்கும் மெட் டோபாலிக் பிரச்சினைகள் ஏற்படும்.

அதை தான் நாம் மெட்டோபாலிக் சிண்ட்ரோம் என்று கூறுகிறோம். இந்த சிண்ட்ரோம் ஏற்படும்போது ப்ரி பேற்றி ஆசிட் ரத்தத்தில் கலக்கும். அதனால் இன்சுலின் சமச்சீரின்மை ஏற்பட்டு, இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் தோன்றும். உடல் குண்டாவதால் ஏற்படும் நோய்கள் என்னென்ன என்று உங்களுக்குத் தெரியுமா? ஜீரணக்கோளாறு, ஈரல் வீக்கம், பித்தப்பை கல், தைராய்டு பிரச்சினை, நீரிழிவு, குறட்டை போன்றவை தோன்றக்கூடும்.

பெண்களுக்கு மார்பக புற்றுநோய், எண்டோமெட்ரியத்தில் புற்று தோன்றலாம். குழந்தையின்மை பிரச்சினை உருவாகும். உடல் குண்டானவர்களால் ஆழ்ந்து நிம்மதியாக தூங்க முடியாது. தூங்கும் போது சுவாச தடை ஏற்பட்டு மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைவதால், திடீர் திடீ ரென்று விழிப்பார்கள். சரியாக தூங்க முடியாமல் அவதிப்படுவார்கள்.

மறுநாள் அவர்களால் புத்துணர்ச்சியோடு உழைக்க முடியாது. வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போதே தூங்குவார்கள். அன்றாட பணிகளை செய்ய முடியாமல் தடுமாறுவார்கள். இதில் ஆபத்தான கட்டம் என்னவென்றால், சிலர் தூங்கும்போது மூளைக்கு செல்லும் ஆக்சிஜனில் நெருக்கடி ஏற்படும்போது தூக்கத்திலே உயிர் பிரிந்து விடும். மூட்டு நோய்கள், பாதங்கள் தட்டையாதல், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்ற பல பாதிப்புகள், உடல் குண்டாவதால் ஏற்படுகின்றன.

ஒருவரது உடல் எந்த அளவுக்கு பருமனாக இருக்கிறது என்பதை கண்டறிய பி.எம்.ஐ. அளவீடு பயன்படுத்தப்படுகிறது. உயரத்திற்கு தக்கபடி உடல் எடை எவ்வளவு இருக்கவேண்டும் என்பது பி.எம்.ஐ. மூலம் தீர்மானிக்கப்படுகிறது. பி.எம்.ஐ. 25 வரை இருந்தால் சாதாரணமானதாகவும், 30 வரை பிரச்சினைக்குரியதாகவும் கணக்கிடப்படுகிறது.

அதற்கு மேல் இருந்தால் தீவிர சிகிச்சை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கும். உடல் பருமனால் அவதிப்படு பவரின் பி.எம்.ஐயை பரிசோதித்த பின்பு, அவரை ஊட்டச்சத் தியல் நிபுணரும், மனோதத்துவ நிபுணரும் சந்திப்பார்கள். அவர்களது ஆலோசனைக்கு பிறகே அடுத்த கட்ட சிகிச்சை தீர்மானிக்கப்படும்.

அவருக்கு அறுவை சிகிச்சை தேவை என்று முடிவு செய்தால், நவீன லேப்ராஸ்கோபி சிகிச்சை சிறந்தது. இதனை டாக்டர்கள் நேரடியாகவோ, இயந்திர மனிதர்கள் மூலமோ செய்வார்கள். எடையை குறைப்பதற்காக அவரது ஜீரணக் குடலின் அளவை சுருக்குவதே பொதுவாக கையாளப்படும் சிகிச்சை. நமது ஜீரணக்குடல் ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்டது.

அதன் மெல்லிய ஒரு பகுதி, இந்த அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, ஜீரணக்குடல் கொள்ளளவு வெகுவாக குறைக்கப்படும். அப்போது, அழகான உணவுவகைகளைப் பார்த்து நம்மை ருசிக்கத்தூண்டும் கிரிலின் என்ற சுரப்பியும் அகற்றப்பட்டுவிடும். அதனால் உணவின் மீதான ஈர்ப்பும், உண்ணும் உணவின் அளவும் குறையும்.

தேவைக்கு மட்டுமே உண்ணும் நிலை ஏற்படும். இந்த வகை ஆபரேஷனுக்குப் பிறகு உடல் எடை குறைவதோடு, மன அழுத்தம், குறட்டை, ஆஸ்துமா, உயர்ரத்த அழுத்தம், இதயநோய், நீரிழிவு போன்ற பல்வேறு நோய்கள் குறையும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பும் நீங்கும். பெண்களைப் பொறுத்தவரையில் குழந் தைப் பேறுக்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவர உடற்பயிற்சி அவசியம். அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சியால் மட்டும் எடையை குறைத்துவிட முடியாது. உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வருவதில் 70 சதவீத பங்கு உணவிற்குரியது. 30 சதவீத பங்கே உடற்பயிற்சிக்கு இருக்கிறது. அதனால் உணவின் அளவைக் குறைக்காமல் உடற்பயிற்சியால் மட்டுமே உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவர முடியாது.

உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் உண்ண வேண்டிய உணவுகள்:-

இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் கலோரி குறைவு. அவைகளை சாப்பிடுவது நல்லது. தினமும் நீங்கள் சாப்பிடும் உணவில் 80 சதவீதம் வீட்டு உணவாக இருக்க வேண்டும். 20 சதவீதம் வெளி உணவாக இருக்கலாம். பேக்கரி உணவுகளில் கலோரி அதிகம். அதில் சேர்க்கப்படும் வனஸ்பதியில் இருக்கும் டிரான்ஸ்பாற்றி ஆசிட் கொழுப்பை அதிகரித்து உடலை குண்டாக்கும்.

– நார்ச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். காய்கறி, பழங்கள், தானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பிஸ்கெட், மைதா, வெள்ளை அரிசி உணவுகளை முடிந்த அளவு தவிர்த்திடுங்கள்.

– ஒரு உணவை சாப்பிடும் முன்பு அது ருசியா என்று மட்டுமே பார்க்கிறோம். அது ஆரோக்கியமானதா என்று பார்க்க பழகிக்கொள்ளுங்கள். – மாலை நேரத்தில் இனிப்பு, காரத்திற்கு பதில் காய்கறி- பழ சாலட் சாப்பிடுங்கள். மோர் பருகுங்கள்.

– ஐஸ்கிரீம், கொழுப்புள்ள பால், கேக் வகைகளை தவிர்த்திடுங்கள்.

– முடிந்த அளவு வீட்டு வேலைகளை செய்யுங்கள். வாரத்தில் நான்கு நாட்களாவது 45 நிமிடங்கள் வேகமான நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதை கடைபிடித்தால் எடை குறைந்து-இடை மெலிந்து ஆரோக்கியமாக வாழலாம்!