அவளுக்கு 3 வயதாக இருந்தபோது தாயார் இறந்து விட்டார். அடுத்த வருடம் தந்தை இன்னொரு திருமணம் செய்து கொண்டார். சித்தியிடம் அவள் வளர்ந்து வந்த நிலையில், சித்தியும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தாயில்லாத மூத்த சிறுமி, அழகு நிறைந்தவளாக வளர்ந்தாள். அவளுக்கு பள்ளிப்பருவத்திலே ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் இருந்தது. அவளுக்கு பத்து வயதானபோது திடீரென்று தந்தையும் மாரடைப்பில் இறந்துபோனார்.
சித்தி தனிமரமானார். குடும்பம் தத்தளித்தது. வீட்டின் அருகில் உள்ள ஓட்டல் ஒன்றில் அவர் வேலை செய்து, அதில் கிடைத்த வருமானத்தில் மகள்கள் இருவரையும் ஒருசில வருடங்கள் படிக்க வைத்தார். அதன் பின்பு அவருக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால், தாயில்லாத சிறுமியின் படிப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. அவளை அந்த பகுதியில் உள்ள பிரபல மனிதர் ஒருவர் வீட்டில் வேலைக்கு சேர்த்துவிட்டு, தனது மகளை மட்டும் பள்ளிக்கு அனுப்பினார்.
அவள் வேலை செய்து வந்த வீடு பாதுகாப்பானதாக இருந்தது. அதனால் நிம்மதியாக வேலை பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்தாள். கல்யாண பருவத்தையும் அடைந்தாள்.
இந்த நிலையில் சித்தி ஒருநாள் அவளை தேடி வந்தார். வீட்டு உரிமையாளரிடம், ‘இவளுக்கு வேறு நல்ல வேலை கிடைத்து விட்டது. அங்கு கொண்டு போய் சேர்க்கப் போகிறேன்’ என்று கூறி சற்று தூரத்தில் உள்ள பெருநகரத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு தனி வீடு ஒன்றில் தனியார் துறை உயர் அதிகாரி ஒருவர் தனிமையில் வசித்து வந்தார். அங்கு போய் அவளை விட்டுவிட்டு, ‘இனி இந்த வீட்டில்தான் உனக்கு வேலை. இங்கு அதிக சம்பளம் கிடைக்கும். உனக்கு வேலையும் அதிகம் இருக்காது. அதனால் நீ இங்கு சந்தோஷமாக இருக்கலாம்’ என்றார்.
அவள் குழம்பினாள். முடியாது என்று கூறினால், ‘நீ இப்படியே எங்கேயாவது போய்விடு. வீட்டுக்கு திரும்பி வந்துவிடாதே என்று சித்தி சொன்னாலும் சொல்வார்’ என பயந்தாள்.
கடவுள் மீது பாரத்தை போட்டுக் கொண்டு கண்ணீரோடு அவள் அந்த அதிகாரியின் வீட்டில் வேலை செய்ய சம்மதித்தாள். அவர் நடுத்தர வயதைத் தாண்டியவர். அவரிடம், ‘என் மகளை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு சித்தி சென்றுவிட்டார்.
அந்த நபர், அவள் மீது அதிக பாசங்காட்டினார். வேலைக்காரி போன்று நடத்தாமல் வெளி இடங்களுக்கும் அவளை தன்னோடு அழைத்துச் சென்றார். அவரது அணுகுமுறை அவளுக்குள் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்ப, திடீரென்று ஒருநாள் சித்தி அவளை தேடி வந்தார்.
அவளை தனிமையில் அழைத்துச் சென்று, ‘இவர் மாதம் இரண்டு லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கிறார். உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். உன்னைவிட வயது அதிகம் என்றாலும் எந்த குறையும் இன்றி உன்னை பார்த்துக் கொள்வார்’ என்றார்.
அவளுக்கு அழுகை வந்தது. ‘என்னைவிட இவர் முப்பது வயது அதிகம் கொண்டவர். இவரை என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது’ என்றாள். ‘அப்படியானால் நீ இங்கிருந்து எங்கேயாவது போய்விடு. எக்காரணத்தைக்கொண்டும் என்னை தேடிவந்துவிடாதே. எக்கேடும் கெட்டுப்போ..’ என்று ஆத்திரத்துடன் கூறிவிட்டு, அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார்.
அவள் கண்ணீரோடு அந்த அதிகாரியின் கால்களை பிடித்துக்கொண்டு ‘என்னை மன்னித்துவிடுங்கள். என் தந்தை போன்று இருக்கும் உங்களை திருமணம் செய்துகொண்டு என்னால் நிம்மதியாக வாழ முடியாது’ என்று கதற, அப்போதுதான் அவர், ‘உனது சித்தி உன்னை எனக்கு திருமணம் செய்துவைப்பதாகக்கூறி, சில லட்சங்கள் வாங்கியிருக்கிறார். நீ என்னை திருமணம் செய்துகொள்ள சம்மதித்திருப்பதாகவும் கூறினார். நான் கொடுத்த பணத்தில் அவரது மகளுக்கு ஊரில் திருமணம் பேசி முடித்திருக்கிறார். உன்னையும், என்னையும் உன் சித்தி ஏமாற்றி விட்டார். ஆனாலும் நான் உன்னை தொந்தரவு செய்யமாட்டேன். நீ சொல்லும் இடத்திற்கு உன்னை கொண்டுபோய் விட்டுவிடுகிறேன்’ என்று கூறியுள்ளார்.
அவள், தான் ஏற்கனவே வேலை பார்த்த வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடும்படி கூற, அங்கு கொண்டுபோய் விட்டவர், அனைத்து உண்மைகளையும் அவர்களிடம் கூறிவிட்டு கிளம்பியிருக்கிறார்.
இப்படியும் ஒரு சில சித்திகள் இருப்பதை ஆதரவற்ற பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.