Home சூடான செய்திகள் உஷாரய்யா உஷாரு..

உஷாரய்யா உஷாரு..

43

அவன் எம்.பி.ஏ. படித்த இளைஞன். அதிக மதிப்பெண் வாங்கி கல்லூரியில் சிறந்த மாணவன் என்று பெயரெடுத்தவன். கம்பீரமும், அழகும் நிறைந்தவன். ஓரளவு வசதிபடைத்த குடும்பத்தை சேர்ந்தவன்.

அவனுக்கும்- அவனுடன் படித்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. அந்த பெண் செல்வச் செழிப்புமிக்க பிரபலமான குடும்பத்தை சேர்ந்தவள்.

அவள் காதலை தனது தந்தையிடம் தெரிவித்தாள். முதலில் அவர் எதிர்ப்பு தெரிவித்தாலும், மகள் காதலில் தீவிரமாக இருந்த தால் அவனையே அவளுக்கு திருமணம் செய்துவைக்க சம்மதித்தார். நிச்சயதார்த்தத்திற்கும் நாள் குறித்தார்.

பெண்ணின் தந்தை ஏராளமான தொழில்கள் செய்து வந்தார். பல்வேறு நிறுவனங்களையும் நடத்திவந்தார். அவைகளை பற்றி தனது வருங்கால மருமகன் தெரிந்துகொள்ளவேண்டும் என்று, அவனை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து தன்னுடனே வைத்துக்கொண்டார். முக்கிய நிர்வாகிகளை தினமும் அவன் சந்திக்க ஏற்பாடு செய்தார். அதனால் அவன் மிகுந்த பரபரப்போடு இயங்கவேண்டிய சூழ்நிலை உருவானது.

அவர், வருடத்திற்கு வருடம் தொழில் முன்னேற்றத்திற்கான இலக்கை நிர்ணயிப்பார். அந்த இலக்கை அடைய ஒவ்வொரு தலைமை நிர்வாகிகளையும் விரட்டி விரட்டி வேலைவாங்குவார். தனது வருங்கால மருமகனை அருகில் வைத்துக்கொண்டு அவர் அடுத்த சில ஆண்டுகளுக்கான இலக்குகளை நிர்ணயித்தார். நிறுவனம் ஒவ்வொன்றின் தயாரிப்பு இலக்குகள், விற்பனை இலக்குகள், அடுத்த சில ஆண்டுகளில் புதிதாக தொடங்கவேண்டிய கிளைகளின் பட்டியல்கள் என்று ஒவ்வொன்றையும் தயார்செய்து, அவனுக்கு விளக்கினார். அதில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் பற்றியும், புதிய ஆலோசனைகள் பற்றியும் கேட்டுக்கொண்டே இருந்தார். அவன் புதிதாக ஆலோசனை எதையும் சொல்லாமல் இருந்தால், ‘உங்களுக்கு தொழில் சிந்தனையே இல்லையே! காலேஜ்ல நிறைய மார்க் வாங்கியிருக்கீங்க.. எப்படி வாங்கினீங்க?’ என்று மற்ற நிர்வாகிகள் மத்தியில் வைத்து சூடாக பேசவும் செய்தார். அதனால் தலைமை நிர்வாகிகள் அவனை வேண்டாத விருந்தாளிபோல் பார்த்தனர். அவன் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் குழம்பினான்.

அவன் நிம்மதியை இழந்தான். வேலைச்சுமை அதிகரித்துக்கொண்டே சென்றது. உணவின்றி, தூக்கமின்றி பல நாட்களை அவன் செலவிடநேர்ந்தது. என்றாவது நிம்மதியாக தூங்கலாம் என்று நினைத்து அவன் தூங்கச் சென்றால், நித்திரையில் ஆழ்ந்திருக்கும் நேரம் பார்த்து எழுப்பி, புதிய ப்ராஜெக்ட் பற்றி வருங்கால மாமனார் கேள்விகள் கேட்டார்.

தொழிலதிபரின் மகளை திருமணம் செய்துகொண்டால் கண்டபடி வெளிநாடுகள் பறக்கலாம், இஷ்டத்திற்கு ஊர் சுற்றலாம், செலவு செய்யலாம் என்று அவன் நினைத்ததெல்லாம் தவறானது என்பதை சீக்கிரமே உணர்ந்தான். மனங்குமுறினான். குமுறல்களை எல்லாம் தனது காதலியிடம் கொட்டித்தீர்க்க அவளைத் தேடியபோது, அவள் தனது தோழிகளோடு மலைவாச ஸ்தலங்களில் ‘டூர்’ அடித்துக்கொண்டிருந்தாள். சுற்றுலா போவதாக அவனிடம் தகவல்கூட கூறவில்லை.

தன்னை ஒரு மாதத்திற்கு மேலாக ஜெயில் கைதி போன்று நடத்தும் வருங்கால மாமனார், அவரது மகளை மட்டும் இஷ்டத்திற்கு ஊர்சுற்ற அனுமதித்தது அவனுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. அவளிடம் பேச முயற்சி செய்தான். நீண்ட முயற்சிக்கு பிறகு அவள் தொடர்பில் கிடைத்தாள்.

‘என்னை உன் தந்தை கைதி போன்று அசையவிடாமல் வைத்து, கண்டபடி வேலை வாங்குகிறார். மற்றவர்கள் முன்னால் என்னை குறைசொல்லி மனஉளைச்சல் ஏற்படுத்துகிறார்’ என்று குமுறிக்கொட்டினான்.

அவளோ, ‘இதுக்கே நீங்கள் அலுத்துக்கொண்டால் எப்படி! எதிர்காலத்தில் இவ்வளவு பெரிய நிறுவனத்தை நீங்கள் கட்டிக்காப்பாற்றவேண்டாமா! என் தந்தை எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும். என் அப்பா திட்டினால் வாங்கிக்கொள்ளுங்கள். அப்பா சொல்கிறபடி கேட்டு நடந்துகொள்ளுங்கள்’ என்று கண்டிப்பாக கூறிவிட்டு போன் தொடர்பை துண்டித்துவிட்டாள். அவள், தனது தந்தை சொல்கிறபடி செயல்பட்டுக்கொண்டிருந்தாள்.

‘இந்த பணக்கார குடும்பத்துக்கு வாழ்க்கைப்பட்டால் வாழ்க்கை முழுவதும் போராட்டமாகிவிடும்’ என்று நினைத்த அவன், ‘திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை’ என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு, தனது நண்பனோடு வெளிநாட்டுக்கு கிளம்பிப்போய்விட்டான்.

‘அப்பாடா நிம்மதி. இதைத்தானே எதிர்பார்த்தோம்’ என்று மகிழ்ச்சியை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் தொழிலதிபரும், அவரது மகளும்!

காதலை நைசாக துண்டித்துவிட எப்படி எல்லாம் திட்டம் போட்டு வேலைபார்க்கிறாங்க பார்த்தீங்களா..!