சமீபத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் பிப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே. இது 2011ம் ஆண்டு எரிகா மிட்சல் ஜேம்ஸ் என்கிற பெண் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். ஒரு இளம் தொழில் அதிபரும் ஒரு அழகியும் இயற்கையான உறவுகளை தாண்டி விதவிதமான உறவு கொண்டு வாழும் கதை. அந்த நாவல் அதை விலாவாரியாக சொன்னதால், அதுவும் ஒரு பெண் எழுத்தாளர் சொன்னதால் விற்பனையில் சாதனை படைத்தது. 51 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டு 100 மில்லின் புத்தகங்கள் விற்பனையானது. ஒரே புத்தகத்தில் எரிகா உலகப்பெரும் கோடீஸ்வரி ஆனார்.
இப்போது அந்த நாவல் அதே பெயரில் திரைப்படமாகி உள்ளது. சாம் டெய்லர், ஜான்சன் இயக்கி இருக்கிறார்கள், டக்கோட்டா ஜான்சன் தொழிலதிபராகவும், ஜெம்மி டொமன் இளம் பெண்ணாகவும் நடித்திருக்கிறார்கள். 120 நிமிட நீளப் படத்தில் 20 நிமிடம் அந்த மாதிரி காட்சிகள்தான். நீலப் படங்களை கூட அனுமதிக்கும் அமெரிக்காவில் படத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.
அமெரிக்கா, இங்கிலாந்தில் ஏ சான்றிதழுடன் வெளியாகி வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், அரபு நாடுகள், உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகள் படத்திற்கு தடைவிதித்திருக்கிறது. உலகிலேயே அதிக நாடுகளால் தடைசெய்யப்பட்ட படம் என்ற பெயரையும் இப்படம் தட்டியிருக்கிறது. ஹாலிவுட் வழக்கப்படி 90 நாட்களுக்கு பிறகு படம் இணையதளத்தில் கிடைக்கும். அப்போது இணைய தளமே ஹேங்காகும் அளவிற்கு டவுன்லோட் செய்யப்படும் என்கிறார்கள்.