Home குழந்தை நலம் உங்கள் குழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள்… தோற்றால் தட்டிக்கொடுங்க

உங்கள் குழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள்… தோற்றால் தட்டிக்கொடுங்க

19

Captureபெற்றோருக்கு பக்குவமான பத்து டிப்ஸ் :

பொதுவாக 3 வயதுக்குமேல் ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். 6 வயதுக்குமேல் அதன் குணம், செயல்பாடுகளில் புதுப்புது மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். அதனால், குழந்தையை சரியாக ஹேண்டில் செய்வது அவசியமாகிறது.

* ஒரு குழந்தைக்கு முதன் முதலில் கிடைக்க வேண்டியது முழுமையான அன்பு. குழந்தை கேட்கும் பொருளை வாங்கி கொடுத்தால்தான் அன்பு என்று கிடையாது. குழந்தையை மடியில் அமர வைத்து நல்ல கதைகள் சொல்வது முழுமையான அன்பை அதற்கு கிடைக்கச் செய்யும். இப்படிப்பட்ட பெற்றோரிடம் குழந்தைகள் மிக நெருக்கமாகி விடும்.

* அடுத்ததாக குழந்தைக்கு நாம் கொடுக்க வேண்டியது நல்ல ஆரோக்கியம். குழந்தை பிறந்தது முதல் அதன் எடையை சரியாக ‘மெய்ன்டெய்ன்’ செய்து வரவேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை அதன் எடையை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் திணித்து குண்டு குழந்தைகளாக மாற்றிவிடக் கூடாது.

* மூன்று வயது முதல் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். நகத்தை வெட்டுவது, தலையை சுத்தமாக பேணுவது, உள்ளாடைகள் மற்றும் உடல் அந்தரங்க உறுப்புகளை எப்படி ஆரோக்கியமாக பராமரிப்பது என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். 18 வயது ஆகும்வரை ஒரே டாக்டரிடம் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும்.

* பணத்தின் மதிப்பை சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். நம் குழந்தையுடன் படிக்கும் சக பெரிய இடத்து பிள்ளைகளிடம் பணம் அதிக அளவில் புழங்குகிறது என்பதற்காக நம் குழந்தைக்கும் பணத்தை அள்ளி செலவிடக்கூடாது. வீட்டின் சூழ்நிலையை பக்குவமாக புரிய வைத்து, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. ‘பாக்கெட் மணி’ கொடுத்தால், அந்த பணத்திலும் சேமிக்கும் பழக்கத்தை குழந்தையிடம் உருவாக்க வேண்டும்.

* குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதும் முக்கியமானது. குழந்தை என்ன பேசுகிறது என்பதை பெற்றோர் பொறுமையாக அமர்ந்து கேட்க வேண்டும். ஸ்கூல் டீச்சர், பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி குழந்தைகள் சொல்வதையும் ஆர்வமாக கேட்க வேண்டும்.

* குழந்தையை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கக்கூடாது. அவ்வப்போது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். தினமும் ‘வாக்கிங்’ அழைத்துச் செல்வதும் அவசியம்.

* குழந்தைகள் முதன் முதலாக தோல்வியை சந்திக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். தோல்வி என்பது வெற்றியின் அடிப்படை என்பதை பக்குவமாக புரிய வைக்க வேண்டும். இதற்காக, அம்மா, அப்பா இருவரும் ஏதாவது ஒரு விளையாட்டு விளையாடி யாரேனும் ஒருவர் தோற்பதுபோல் நடித்து, ‘இதெல்லாம் சகஜம். தோல்வியை கண்டு துவளாமல் இருந்தால் அடுத்து வெற்றிதான்’ என்பதை உணர்த்த வேண்டும். முக்கியமாக, எதையும் ‘டேக் இட் ஈஸி’யாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை குழந்தையின் மனதில் பதிய வைக்க வேண்டும்.

* பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும். உன்னால் எதுவும் முடியும் என்று சொல்லி சொல்லி வளர்த்தால் குழந்தையிடம் தன்னம்பிக்கை தானாக வளர்ந்துவிடும். பிரச்சினை எப்படி வந்தது? ஏன் வந்தது? அதற்கு என்ன தீர்வு? – இந்த மூன்று விஷயங்களையும் தைரியமாக அணுக குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

* குழந்தை மற்றவர்களிடம் பழகும்போது, அவர்கள் எப்படி தன்னிடம் பழகுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். எதிர் பாலினர் தன்னிடம் பேசும்போது, அவர்களது பேச்சு, பார்வை, தொடுதல் போன்றவற்றை ஒரு குழந்தை புரிந்துகொள்ளும் பக்குவத்தை பெறுவதும் அவசியம். மற்றவர்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிவது என்பதை சொல்லிக்கொடுக்கவும் தவறிவிடக்கூடாது.

* கண்டிப்பு என்பதை குழந்தையிடம் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். ஒரு பெற்றோர் தங்களது குழந்தையை அதிகம் கண்டித்தால், அவர்கள் குழந்தையிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஒரு குழந்தை அதன் சக்திக்கு தகுந்தவாறுதான் சிந்திக்கும். அதனால், எந்த சூழ்நிலையிலும் குழந்தையை கட்டாயப்படுத்தக் கூடாது. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடவும் கூடாது.

மொத்தத்தில், அறிவு, அன்பு, உணவு – இந்த மூன்றையும் உங்கள் குழந்தைக்கு எப்பவும் கொடுக்க தயாராக இருங்கள். உங்கள் குழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள். தோற்றால் தட்டிக்கொடுங்கள்.