Home பாலியல் இன்னொரு பெண்ணை `தொடுவது’ சரியா?

இன்னொரு பெண்ணை `தொடுவது’ சரியா?

17

பணியிடங்களில் எதிர் பாலினத்தினரிடம் வார்த்தைகளால், கைகளால் `கேசுவலாக’ எல்லை மீறுவது அதிகரித்து வருகிறது என்கிறது ஓர் ஆய்வு.
அதிகரிக்கும் பணி நெருக்கடி, அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடும் நிலை போன்றவற்றின் காரணமாக வேலையை சுவாரசியமானதாக ஆக்கிக்கொள்ள வழி தேடத் தொடங்கியிருக்கிறார்கள் பெரும்பாலானவர்கள். அதில் ஒன்றுதான் இந்த `கேசுவலான எல்லைமீறல்’.
ஏற்கனவே திருமணமானவர்கள், காதலிப்பவர்கள் கூட சக ஊழியர்களிடம் `தீங்கில்லாத’ கிண்டல், சீண்டல் தவறில்லை என்று கருதுகிறார்கள்.
இதுகுறித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் விவேக் கூறுகையில், “நாம் ஏற்கனவே திருமணமானவர்கள் என்பதாலேயே ஜாலியான சீண்டல்களில் ஈடுபடக் கூடாது என்று நான் கருதவில்லை. நீங்கள் உங்கள் துணைக்கு உண்மையாக இருந்தால் போதும். வேலையிடத்தில் இன்று நெருக்கடி அதிகம் என்பதால் அதற்கு வடிகாலாக இதுமாதிரி ஏதாவது தேவைபடுகிறது. இயல்பான சீண்டலும் கிண்டலும் சூழ்நிலையை ஜாலியாக மாற்றுகின்றன. வாழ்க்கைக்கு அதிஅத்தியாவசியத் தேவையான `மசாலாவை’ அது அளிக்கிறது.”
இப்படி இவர் கூறினாலும், எல்லாவற்றையும் போல இதற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன.
திருமணமானவரான பாடகர் டோச்சி ரைனா, இன்னொரு பெண்ணிடம் மேலோட்டமாகக் கூட எல்லை தாண்டுவது தவறு என்று உறுதியாகக் கூறுகிறார்.
“நான் திருமணமானவன். மனைவியுடனான எனது உறவை மிகவும் புனிதமாகக் கருதுகிறேன். நான் இன்னொரு பெண்ணிடம் எல்லை கடந்தால், என் மனைவி என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைச் சிதைக்கிறேன் என்று அர்த்தம். அது எனது திருமண வாழ்க்கையின் சமநிலையைச் சிதைத்துவிடும். எனவே நான் `கேசுவலாக’க் கூட இரட்டை அர்த்தத்தில் பேச மாட்டேன்” என்று அடித்துக் கூறுகிறார்.
சின்னச் சின்ன சில்மிஷங்களுக்கு ஆதரவாகக் கொடி பிடிக்கிறார் நடிகை பூனம் ஜாவர். `அவை’ இன்றைக்குச் சாதாரணமான விஷயங்கள் என்கிறார்.
“எப்போதுமே ஒரு நல்ல உரையாடலும், இயல்பான சீண்டலும் ஜாலியாக இருக்கும். நீங்கள் திருமணமானவர் என்றால், உங்கள் துணையுடன் நன்றாக பழகியிருப்பீர்கள். நல்ல புரிதல் இருக்கும். எனவே அவர், நீங்கள் பிறருடன் செய்யும் சின்னச் சின்ன சீண்டல் விளையாட்டுகளைக் கண்டு கொள்ள மாட்டார். அதில் ஒன்றும் தீங்கில்லை என்றே நினைப்பார்” என்று கூறுகிறார் பூனம்.
ஆக, இதெல்லாம் அவரவர் பார்வையை பொறுத்தது என்பது புரிகிறது. ஆனால் நம்மூர் பெண்கள் `இயல்பான’ சீண்டல்களை, அதைச் செய்பவர் நன்கு அறிமுகமானவர் என்றாலும் `இயல்பாக’ எடுத்துக்கொள்ளும் மனநிலைக்கு இன்னும் வரவில்லை. எனவே, `எல்லைக் கோட்டை’ தாண்டாமல் இருப்பதே எல்லோருக்கும் நல்லது.