“டேய்… சிங்கிளா இருக்குறது தான் கெத்து, பிகரு உஷார் பண்ணிட்டா நீ பெரிய இவனா.. போடா….” என்று கும்பலில் உதார் விட்டாலும். பிறகு தனியே வந்து, “மச்சான், நேத்து பஸ்ல ஒரு பொண்ண பாத்தேன் டா, லவ்வ சொல்ல ஒரு ஐடியா குடு…” என்று கூறுபவரும் அவராக தான் இருப்பார். காதல் என்பது அனைவர் மத்தியிலும் எழும் ஓர் உணர்ச்சி தான்.
ஆனால், சிலருக்கு அது சீனா பூட்டு போல உடனே திறந்து விடுகிறது. சிலருக்கு சுவிஸ் பேங் லாக்கர் போல பெரும் குழப்பமாக அமைந்துவிடுகிறது, எல்லாம் அவன் செயல். “ச்சே, இந்த வருஷமும் நாம சிங்கிளா தான் இருக்கப் போறோமா..” என்று வருந்தும் நபரா நீங்கள்? கவலைய விடுங்க. நீங்கள் இந்த வருடம் செய்ய வேண்டியவை சிலவன இருக்கின்றன….
திரைக்கடல் ஓடுதல்
தங்களுடன் படத்திற்கு என்றால் ஓகே சொல்லும் கண்மணிகள், நண்பர்களுடன் என்றால் தடை உத்தரவு போட்டுவிடுவார்கள். திருமணத்திற்கு முன்னர், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் திரைப்படம் பார்க்க சென்றவர்கள், திருமணத்திற்கு பிறகு கோவில் குளத்திற்கு தான் சென்றுக் கொண்டிருப்பார்கள். ஆனால், சிங்கிள் சிங்கமான நீங்கள் எத்தனை படத்திற்கு வேண்டுமானாலும் போய் வரலாம்.
புத்தகப் பூச்சி
மேலும், புத்தகப் பூச்சிகளாக இருப்பவர்கள் இந்த வருடமும் குறைந்தது 10 – 20 புத்தகங்களோடு உறவாடலாம். மூளைக்கு நல்ல தீனியாக இது அமையும். இன்னும் நல்ல முதிர்ச்சி அடைய இந்த வருடம் உங்களுக்கு வழிவகுக்கும்.
நாடோடி
ஊர் சுற்ற விரும்பும் நபராக நீங்கள் இருந்தால், இந்த வருடமும் நண்பர்களுடன் சுதந்திரமாக ஊர் சுற்றிவிட்டு வரலாம். நீங்கள் நினைத்த நேரத்தில், விரும்பும் இடத்திற்கு நள்ளிரவு கூட பயணத்தை துவக்கலாம். நாடோடி மன்னனாக திகழ வாழ்த்துக்கள்!!!
நெட்டிசன் சிட்டிசன்
நெட்டில் மட்டுமே அதிக நேரத்தை செலவழிக்கும் சிட்டிசன்கள் இன்றைய நாட்களில் ஏராளம். அவர்கள் இந்த வருடமும் பல நிகழ்வுகளை கலாய்த்து மீம்ஸ் போடலாம், நள்ளிரவு வரை முகநூல், வாட்ஸ்அப் என்று அரட்டை அடிக்கலாம். காதலி அல்லது மனைவி இருந்தால், அவர்கள் உங்களது Last Seen-ஐ கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.. சுதந்திரமாக நெட்டில் உலாவ முடியாது. எனவே, இந்த வருடத்தையும் சந்தோஷமாக கொண்டாடுங்கள்.
குடிமகனே!
காதலில் விழுந்தவர்களும், திருமணம் முடித்தவர்களும், ஒவ்வொரு முறையும் நண்பர்களுடன் பார்ட்டி அல்லது மது அருந்த ஒப்புதல் வாங்கப்படும் அவஸ்தை அவர்களுக்கு மட்டுமே தெரியும். உங்களுக்கு அந்த கவலை இல்லை. (குறிப்பு: குடி வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு!!!)
குறிப்பு
சிங்கிளாக இருப்பதன் கொடுமை ஆண்கள் வர்க்கம் அறிந்தது தான். ஆயினும், விடா முயற்சி விஸ்வரூப வெற்றியை தரும் என்பதை இந்த தருணத்தில் கூறிக் கொண்டு விடைப்பெருகிறோம்!