Home குழந்தை நலம் இதயத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடுகள்

இதயத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடுகள்

20

201609130845190939_heart-defects-in-children_secvpfபொதுவாக பெரும்பாலான குழந்தைகள் ஆரோக்கியமான இதயத்துடன் தான் பிறக்கிறார்கள். அவர்களுடைய இதயத்தின் அமைப்பிலோ அல்லது அதன் செயல்பாட்டிலோ எந்தவிதக் குறைபாடும் இருப்பதில்லை.

ஆனால் சில குழந்தைகள் மட்டும் சிதைவுபட்ட அல்லது உருக்குலைந்த இதயத்துடன் பிறக்கின்றன. பிறவிலேயே குழந்தைகளுக்கு இத்தகைய இதயக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான காரணங்கள் இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் சில அடிப்படைக் காரணங்களை மருத்துவ உலகம் பட்டியலிடுகிறது.

மரபு ரீதியாக நமது பண்புகளை நிர்ணயிக்கும் குரோமோசோம்களின் அமைப்பில் இயற்கையாகவே குறைபாடுகள் இருந்தால் பிறக்கும் போதே குழந்தைகளுக்கு உருக்குலைந்த இதயம் உருவாகக்கூடும். தாய்மைப்பேறு அடைந்த சில பெண்கள் கருவுற்ற தொடக்க நிலையில் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி பலவகையான நோய்களுக்கு இலக்காக நேரிடும்.

இந்த வைரஸானது கருவில் வளரும் இதயத்தையும் பாதித்து அதன் அமைப்பையோ அல்லது செயல்பாட்டையோ சிதைத்துவிடும். எனவே பெண்கள் கருவுற்ற தொடக்க நிலையில், வைரஸ்களால் ஏற்படும் பலவகையான தொற்றுநோய்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வது மிகவும் அவசியம். கருவின் ஆரம்பத்தில் கர்ப்பிணிப் பெண்கள், ரூபெல்லா (RUBELLA) என்ற ஜெர்மன் தட்டம்மை நோய்க்கு ஆளானால் கருவானது பலவகைகளில் பாதிக்கப்படும். அதோடு இந்த நோய் இதயத்தையும் உருக்குலைத்துவிடுகிறது.

இந்நோயை தாய்மைப் பருவ தட்டம்மை என்றும் சொல்வதுண்டு. பரம்பரை காரணமாகவும் பிறவிலேயே இதயக்குறைபாட்டு நோய்களோடு குழந்தைகள் பிறக்கலாம். ஒரு குடும்பத்தில் பெற்றோரோ அல்லது அவர்களின் முன்னோர்களோ இதயக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்தால் அந்தக் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் ஆராக்கியமான குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளையிட இதயக் குறைபாட்டு நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.

கர்ப்பக் காலத்தில் தாய்மார்கள் அறியாமல் செய்யும் சில தவறுகள்கூட இதற்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. கருவுற்ற தொடக்கக்காலங்களில் தாய்மார்கள் சாதாரண உடல் பிரச்சனைகளுக்காக மருத்துவர்களின் தக்க அறிவுரையும், பரிந்துரையும் இல்லாமல் தாங்களாகவே பலவகையான மருந்துகளை எடுத்துக் கொள்வார்கள். இந்த மாத்திரைகளைக் கட்டுப்பாடின்றி பயன்படுத்தும்போது அது கருவில் உள்ள குழந்தையின் இதயத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது.

கர்ப்பக் காலத்தில் பெண்கள் அளவுக்கு அதிகமாக எக்ஸ்ரே (X-Ray) கதிர்வீச்சுக்கு ஆளானாலும் கருவில் உள்ள குழந்தையின் இதயத்தில் உருக்குலைவு ஏற்படுகிறது. நம் நாட்டில் 100: 1 என்ற விகிதத்தின் அடிப்படையில் இதயத்தில் பிறவிக் குறைபாடுகளோடு குழந்தைகள் பிறக்கின்றன. இவ்வாறு இதயக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினர் தங்கள் முதலாண்டு நிறைவைக் காண்பதற்கு முன்னரே இறந்துவிடுகிறார்கள்.