ஒவ்வொரு பிரசவ காலமும் புத்தம் புதிய பொறுப்புக்களை ஒரு பெண்ணுக்கு கொடுக்கும். ஒரு தாய் தமது உடல் நலத்தில் விழிப்பாக இருந்து அதிக கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும்.
அதனால் மட்டுமே கருவில் இருக்கும் குழந்தைக்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்கும். மேலும் மற்ற பிரசவ பிரச்சனைகளிலிருந்து தம்மை காக்கவும் உதவும்…
ஒரு பெண் தான் கருத்தரிப்பது பற்றி அறிந்ததும், ஒரு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனைப் பெற வேண்டும். அவர்களிடம் இருந்து கர்ப்பக்காலங்களில் தாம் உட்கொள்ளவேண்டிய உணவு மற்றும் மேற்கொள்ளவேண்டிய உடற்பயிற்சி போன்றவற்றை அறிந்து கொள்ளவேண்டும்.
உணவு: கர்ப்பகாலங்களில் ஒரு பெண் உண்ணும் உணவு இரு உயிர்களுக்கு சென்றடைகிறது . ஆதலால் ஒரு தாய் தமக்கும், கருவில் இருக்கும் சிசுவிற்கும் எந்த ஒரு பாதிப்பும் வராத உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். உதாரணத்திற்கு, a. ஒருநாளில் ஐந்து முறை பழங்கள் மற்றும் காய்கறிகள் உண்பது நல்லது . b. தேவையான அளவு கார்போஹைட்ரெட்ஸ் (carbohydrates) கொண்ட உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். c. நார்ச்சத்து அதிகம் கொண்ட முழு தானியங்களை காலையில் அல்லது மாலை வேளையில் உண்ணலாம். d. புரதச்சத்து அதிகமுள்ள மீன், முட்டை, கறி, பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். e. தேவையான அளவு இரும்பு சத்து மற்றும் கால்சியம் கொண்ட உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். f. போலிக் ஆசிட் (Folic Acid) அதிகமுள்ள உணவுப்பொருட்கள் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம், ஆகையால் போலிக் ஆசிட் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அரை வேக்காட்டில் பரிமாறப்படும் உணவுப் பொருட்களை தவிர்க்கவேண்டும்.
நல்ல தூக்கம்: ஊட்டச்சத்து உள்ள உணவை உண்பது மட்டும் இல்லாமல் நல்ல தூக்கமும் தாய் மற்றும் சேய் இருவரின் நலனை அதிகரிக்கும்.தாயின் நல்ல ஓய்வு வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இரவில் சராசரியாக 7-8 மணி நேரம் ஆழ்ந்து உறங்க வேண்டும். மதிய நேரங்களில் ஒரு குட்டி தூக்கம் அவசியம். தினம் தூங்குவதற்கான அட்டவணை மாறாமல் இருப்பது நல்ல தூக்கத்தை மேம்படுத்தும். தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவது சரியான வழி இல்லை. கர்ப்பிணி பெண்கள் பொதுவாக இடது பக்கம் உறங்குவதையே மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். உறங்குவதற்கு முன் ஒரு சிறிய நடை பயிற்சி மேற்கொள்வது நல்லது.
எடை அதிகரிப்பு: பிரசவத்திற்கு முன் ஒரு பெண் தனது வயதிற்கும், உயரத்திற்கும் ஏற்ற சரியான எடை உள்ளவரென்றால், பிரசவ காலத்தில் 12-15 கிலோ அதிகமாக இருக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும். இரட்டை குழந்தை பெறுபவருக்கு இஃது மாறுபடும்.
உடற்பயிற்சி: கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஏற்ற சில உடற்பயிற்சிகள் உள்ளன. ஆனால் அது நடைபயிற்சியா, நீச்சல் பயிற்சியா அல்லது மற்ற உடல் பயிற்சியா என்பதை மருத்துவர் தான் முடிவு செய்வார். பிரசவக்காலத்தில் உடற்பயிற்சி மிகவும் முக்கியம். அவற்றால் ஏற்படும் நன்மைகள் இதோ, உடலின் ஆற்றலை மேம்படுத்தும் முதுகு வழியை குறைக்கும் ஆற்றலை மேம்படுத்தும் தூக்கத்தை முறையாக்கும் தசைகளின் வலிமையை அதிகரிக்கும்
நல்ல பழக்கங்கள்: கர்ப்ப காலத்தில் புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும் முற்றிலும் தவிர்ப்பது நல்லது. கர்ப்ப காலத்தில் இத்தகைய பழக்கங்களால் குழந்தையின் மனம் மற்றும் உடல் வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகிறது.கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
மகிழ்ச்சியாய் இருங்கள்: உடல் தளர்வாக காணப்படும் நேரத்தில் மகிழ்ச்சி தரும் ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட்டு உடல் தளர்ச்சியை மனதிற்கு கொண்டு போகாமல் இருக்கச் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். கர்ப்ப காலத்தில் பெண்கள் உடலையும் , குழந்தையின் வளர்ச்சியையும் ஆரோக்கியத்துடன் காப்பது அவசியம். மனதளவில் தன்னம்பிக்கையோடு இருப்பது எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியம். உங்கள் வீட்டின் புது வரவை எண்ணி மகிழ்ச்சியாய் இருங்கள்..