ஆரோக்கியமான மனநிலையும், உடல்நிலையும் இருந்தால்தான் வருடம் முழுவதும் உற்சாகத்துடன் வேலை செய்ய முடியும். அந்த வகையில் உடலையும், மனதையும், புத்துணர்ச்சியாக்கும் சில உணவுகளை பரிந்துரைத்துள்ளனர் உணவியல் நிபுணர்கள். இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் மூளை சுறுசுறுப்படைவதோடு கவனிக்கும் திறனையும், விழிப்புணர்வையும் அதிகரிக்கச் செய்யும்.
வைட்டமின் பி காம்ளக்ஸ்
உடல் சோர்வு என்று மருத்துவரிடம் சென்றாலே அவர்கள் பரிந்துரைப்பது வைட்டமின் பி காம்பளக்ஸ் மாத்திரைகளைத்தான். இது உடலோடு மூளையும் செயலையும் உற்சாகப்படுத்தும். எனவே வைட்டமின் பி காம்ளக்ஸ் சத்து நிறைந்த உருளைக் கிழங்கு, பீன்ஸ், புருக்கோலி, காளான், சோயா, பீட்ரூட், வாழைப்பழம், பாதம் மற்றும் முட்டை ஆகிய உணவுகளை அடிக்கடி உண்ணவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
தானியங்கள்
தானியங்கள் உடலை, மூளையையும் சுறுசுறுப்பாக்கும். கோதுமை, ராகி, செந்நிற அரிசி, கம்பு, சோளம் போன்ற உணவுகள் ஆரோக்கியத்திற்கு
ஏற்றவை. அதோடு மூளையை சுறுசுறுப்பாக்கி, கவனிக்கும் திறனை மேம்படுத்துகிறது. மூளையை விழிப்புணர்வோடு வைத்திருக்கும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நினைவுத்திறனை அதிகரிக்கும். இந்த அமிலம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை கட்டுப்படும். எனவே ஒமேகா 3 அமிலம் அதிகமுள்ள ஆலிவ் எண்ணெய், வெள்ளைப் பூண்டு, மீன், முட்டை, அரிசி, பாஸ்தா போன்றவைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. அவற்றை உட்கொள்வதன் மூலம் மூளை சுறுசுறுப்படையும், புத்திக்கூர்மையாகும் என்று உணவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மாவுச்சத்து உணவுகள்
பாலீஸ் செய்யப்படாத அரிசி, ஆப்பிள், வாழைப்பழம், தானியங்கள் போன்றவற்றில் உயர்தர கார்போஹைட்ரேட் உள்ளது. இது ஆரோக்கியத்திற்கும் மூளை வளர்ச்சிக்கும் ஏற்றது. இந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலையும், உள்ளத்தையும் சுறுசுறுப்போடு வைத்திருக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். நினைவாற்றலும், விழிப்புணர்வு சக்தியும் அதிகரிக்கும். எனவே மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க நினைப்பவர்கள் இந்த உணவுகளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ளலாம் என்பது உணவியல் நிபுணர்களின் அறிவுரை.