Home அந்தரங்கம் ஆண்-பெண் அந்தரங்கம்: திருப்தியான செக்ஸுக்கு ஏற்ற திருமண வயது எது?

ஆண்-பெண் அந்தரங்கம்: திருப்தியான செக்ஸுக்கு ஏற்ற திருமண வயது எது?

61

எது நிஜமான திருமண வயது? ஆணுக்கு ஒரு வயதையும் பெண்ணுக்கு ஒரு வயதையும் அரசாங்கம் சொல்கிறது. ஆனால், அந்த வயதுக்கு முன்பே செக்ஸ் விஷயங்கள் இருவருக்குமே தெரிந்து விடுகின்றன. ஆரோக்கியமான திருமண வாழ்க்கைக்கு சரியான வயது என்று மனநல மருத்துவர்கள் ஏதாவது வயதை நிர்ணயித்திருக்கிறார்களா?

திருமணம் என்பது வெறும் செக்ஸ் சம்பந்தமான விஷயமல்ல. நேற்று வரை, நீ யாரோ நான் யாரோ என்றிருந்த இருவரையும் சேர்த்து வைத்து – இனி, நீவிர் இருவரும் இணைந்தே இருப்பதாகுக, வளங்களைப் பகிர்ந்துகொள்க, உறுதுணையாக இருந்திடுக, உறவுகொள்க, பிள்ளை பெற்றுப் பேணி வளர்த்திடுக – என்று பல உள் விஷயங்களுக்கு சமுதாயம் தரும் அங்கீகாரம் தான் திருமணம் எனும் சடங்கு.

இருவேறு நபர்கள் இணைந்தே இருந்து வளங்களைப் பகிர்ந்து, உறுதுணையாக இருக்க வேண்டுமானால், அதற்குக் கொஞ்சமேனும் மனமுதிர்ச்சியும், சகிப்புத் தன்மையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் தேவை.

இருவரும் உறவுகொள்ள, ஓரளவுக்கு உடல்முதிர்ச்சியும், கொஞ்சமேனும் எதிர் பாலினரின் நடத்தையைப் பற்றிய ஞானமும் வேண்டும்.

இவை எல்லாம் பருவம் அடைந்தவுடனே தானாக உண்டாகும் தகுதிகள் அல்ல. பருவ வயதைக் கடந்த பிறகு மெல்லச் சேகரிக்கும் மேன்மைகள்.

பொதுவாக ஜனத்தொகை குறைவாக இருக்கும் காலங்களில், இனப்பெருக்கத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுவதால், வயதுக்கு வந்த மாத்திரத்திலேயே திருமணம் முடித்து துரிதமாக பிள்ளைப் பிறப்பைத் துவங்குவதென்பது எல்லா கலாசாரங்களிலும் உள்ள நடைமுறையே.

ஆனால், ஜனத்தொகை அதிகமாகி விட்டால், நிலைமையு மாறிவிடுகிறது. நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால் இருக்கும் வளங்களுக்கு போட்டி கூடிவிடுகிறது – பிழைப்பு தேடுவது பெருங்கஷ்டம் ஆகிவிடுகிறது. பிழைத்துக்கொள்ள ஏதேனும் வழிதேடி, அந்த வழியில் ஓரளவு தேர்ச்சி பெற்று, பொருள் ஈட்டும் திறமையை வளர்த்துக் கொண்ட பிறகே திருமணம் என்ற நடைமுறை நிலவுகிறது. ராமனுக்கேகூட வில்லை உடைத்த பிறகுதான் சீதை என்ற கண்டிஷன் இருக்கவில்லையா?

இப்படி, திருமணத்துக்கான தகுதிகள் பலதும் வெவ்வேறு துறைக்கும், நபருக்கும், சூழலுக்கும் வித்தியாசப்படுவதால் – ஒட்டுமொத்த ஜனத்தொகைக்கும் ஒரே வயதைத் தகுதியாகச் சொல்வது சரி வராது. அதனால்தான் மனநல மருத்துவர்களான நாங்கள், ஆரோக்கியமான திருமணத்துக்குச் சரியான வயது என்று எதையும், குறிப்பாக நிச்சயித்து வைக்கவில்லை.