Home ஆரோக்கியம் ஆண்களையும் அச்சுறுத்தும் ‘மார்பகப் புற்றுநோய்’

ஆண்களையும் அச்சுறுத்தும் ‘மார்பகப் புற்றுநோய்’

59

‘மார்பகப் புற்றுநோய்’ என்றதும் அது பெண்களுக்குத்தான் ஏற்படும் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அரிது என்றாலும், ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் அபாயம் இருக்கிறது.

அறியாமையாலும், அதன் அறிகுறிகள் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குவதாலும் ஆண்கள் இந்நோயை ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்ளாமல் போய்விடுகிறார்கள். அது அவர்களின் உயிரைப் பறிக்கும் அபாயம் வரை சென்றுவிடுகிறது.

பொதுவாக பெண்களை அதிகமாகப் பாதிக்கக்கூடிய புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. ஆனால், ஆண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோயின் அளவு இரண்டு சதவீதமே.

அதிலும் 35 வயதுக்குக் கீழுள்ள ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது மிகவும் அரிது, ஆனால் குடும்பத்தில் யாராவது ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் அந்த குடும்ப ஆண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.

‘‘டெஸ்ட்டோஸ்டீரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு சீரின்மையால் ஏற்படும் ‘ஜின்கோமாஸ்டிகா’ எனப்படும் மார்பகம் பெரிதாகும் பிரச்சினையால் அவதிப்படும் ஆண்கள், மார்பில் கட்டி எதுவும் தென்படுகிறதா, மார்புக் காம்பில் ரத்தக் கசிவு ஏதும் ஏற்படுகிறதா என்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். காரணம், அவை மார்பகப் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்’’ என்று எச்சரிக்கை விளக்கை ஏற்றுகின்றனர் மருத்துவர்கள்.

மார்புப் பகுதியில் ஏற்படும் எந்த மாற்றத்தைப் பற்றியும் ஆண்கள் அதிகம் கவலைப்படுவதில்லை, அதுவே ஆபத்துக்கு வித்திட்டு விடுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர். மார்பில் ஏற்படும் புற்று பாதிப்பு, விரைவாக உடலின் பிற பகுதிகளுக்கும் பரவிவிடுகிறது எனத் தெரிவிக்கிறார்கள்.

‘‘ஆனால் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயைவிட, ஆண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய், சிகிச்சைக்கு நல்ல பலன் கொடுக்கிறது. குறிப்பாக, ஹார்மோன்தெரபி நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஆண்கள் தங்கள் மார்பில் கட்டி போல எதுவும் தென்பட்டால் அதுகுறித்துத் தங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் பேசத் தயங்கவோ, மருத்துவரை நாட யோசிக்கவோ கூடாது’’ என்று பிளாஸ்டிக் மற்றும் காஸ்மெட்டிக் அறுவைசிகிச்சை நிபுணர் வினோத் அறிவுறுத்துகிறார்.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர், நோயின் மூன்றாம் நிலை அல்லது நான்காம் நிலையில்தான் அதற்கான சிறப்பு மருத்துவரை நாடிவருகிறார்களாம். அதனால், அவர்கள் குணமாகும் சதவீதமும் 14 முதல் 49 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கிறது என்று எடுத்துச்சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

முன்பைப் போல, புற்றுநோயை ஒரு மரண ஓலையாகக் கருதவேண்டியதில்லை என்பதுதான், அதிலிருந்து மீண்டவர்கள், புற்றுநோய் மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.

ஆண்களே, கவனம்!