உடலில் அடிவயிற்றில், சிறுநீர்ப்பைக்குக் கீழே சிறுநீர்க் குழாய் தொடங்கும் இடத்தில் பேரிக்காய் வடிவத்தில் ஒரு சுரப்பி இருக்கிறது. அதற்குப் பெயர் ‘பிராஸ்டேட்’. சிவனின் கழுத்தைச் சுற்றி பாம்பு இருப்பதுபோல், சிறுநீர்ப்பையின் கழுத்தைச் சுற்றி பிராஸ்டேட் இருக்கிறது. பார்ப்பதற்கு ஒரு பெருநெல்லி அளவில்தான் இருக்கும். இதன் நடுவே சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை வெளியேற்றும் குழாய் செல்கிறது.
இது ஆண்களுக்கு மட்டுமே இருக்கிறது. இதுவே இதற்கு உயர்தனிச்சிறப்பு! முழுக்க முழுக்க இது ஒரு பாலியல் சுரப்பி. குழந்தைப் பருவத்தில் ‘அக்கடா’ வெனத் தூங்கிக் கொண்டிருக்கிறது வாலிபத்தில் ‘மெரினா புரட்சி’ போல் விழித்துக் கொள்கிறது. இதில் ஜிங்க் மற்றும் புரத என்சைம் கலந்த திரவம் சுரக்கிறது. வெண்ணெய் போன்ற இத்திரவம் விந்து செல்லுக்கு ஊட்டம் தருகிறது.
வாலிபத்தில் இது இயல்பாகவே இருக்கிறது; வயதாக ஆக வீக்கமடைகிறது. பரம்பரை காரணமாக சிலருக்கு இருபது வயதிலேயே இது வீங்குவதுண்டு; வழக்கத்தில் ஆண்களில் பாதிப்பேருக்கு 50 வயதுக்கு மேல்தான் பெரிதாகிறது. மீதிப்பேருக்கு 80 வயதுக்குள்.
ஆனால், சிலருக்கு மட்டுமே இது பிரச்சினை ஆகிறது. அதற்குப் பெயர் ‘பினைன் பிராஸ்டேடிக் ஹைப்பர்பிளேசியா’ என்பதாகும். முடி நரைப்பதைப்போல, சருமம் சுருங்குவதைப் போல இதுவும் வயோதிகத்தின் ஓர் அடையாளம். மூப்பில் இதற்கு வேலை இல்லை.
என்றாலும், உதவி இல்லாவிட்டாலும் உபத்திரவம் இல்லாமல் இருக்க வேண்டுமல்லவா? வீங்கிக் கொண்டு போகும் பிராஸ்டேட் சிலருக்கு வாழ்நாள் முழுவதும் உபத்திரவம் தருகிற உறுப்பாக மாறுவதுதான் பிரச்சினையே.
மூளையில் பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் எல்.எச். ஹார்மோன் விரைகளில் வினைபுரிந்து, டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோனைச் சுரக்கச் செய்கிறது. பிராஸ்டேட் இதை டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோனாக மாற்றிவிடுகிறது. வயதாகும்போது இதன் அளவு அதிகமாகிறது. இதுதான் பிராஸ்டேட்டுக்கு வினையாகிறது. இது தருகிற ஊக்கத்தால் பிராஸ்டேட் பெரிதாகிறது.
அடுத்த காரணம், ஆண்களுக்கு வயதாகும்போது டெஸ்டோஸ்டீரோன் சுரப்பு குறைந்துவிடும், இதனாலும் பிராஸ்டேட் வீங்கிவிடும்.
வீக்கத்தின் அறிகுறிகள், அடைப்புக்கான அறிகுறிகள் என இரண்டு ரகம் உண்டு. சிறுநீர் சிறுகச் சிறுக அடிக்கடி போவது, திடீரென்று வருவதுபோல் அவசரப்படுத்துவது, நீர்க்கடுப்பு, எரிச்சல் ஆகியவை பிராஸ்டேட் வீக்கத்தின் அறிகுறிகள். சிறுநீர் மெல்லியதாகப் போவது, சிறுநீர் கழிக்கும்போது தடைபடுவது, சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும்போது தயக்கம் ஏற்படுவது,
இரவில் 10 தடவைக்கும் மேலாகச் சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழித்த பின்னரும் இன்னும் சிறுநீர் உள்ளது போல் உணர்வது, மறுபடியும் சிறுநீர் கழிக்க வேண்டும் எனத் தோன்றுவது, சிறுநீர் கழித்த கடைசியில் சொட்டுச் சொட்டாகப் போவது போன்றவை பிராஸ்டேட் அடைப்புக்கான அறிகுறிகள். சிரிக்கும்போதும், முக்கும்போதும்கூட சிலருக்கு சிறுநீர் கசிந்துவிடும். இதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.