ஆணுறுப்பில் அரிப்புப் பிரச்சனை வந்தால், நிலைமை மிக தர்மசங்கடமாகிப் போகலாம். அதோடு கூச்சமும் இருந்தால் இன்னும் சிரமமாகிவிடலாம்.
அரிப்புக்கான காரணத்தைப் பொறுத்து, அரிப்புடன் சேர்ந்து இந்த அறிகுறிகளும் இருக்கலாம்:
சிவத்தல்
எரிச்சல் உணர்வு
தடிப்புகள்
வீக்கம்
சீழ் அல்லது பிற திரவம் வெளியேறுதல்
காய்ச்சல்
பிற இனப்பெருக்க உறுப்பு மற்றும் சிறுநீர்ப்பாதைப் பிரச்சனையின் அறிகுறிகள்
இந்தப் பிரச்சனை உங்கள் தினசரி வாழ்க்கையில் மிகுந்த தொந்தரவை ஏற்படுத்தலாம், தர்மசங்கடமாக இருக்கலாம். இதனால் சிறுநீர் கழிப்பதிலும் பிரச்சனை ஏற்படலாம், உங்கள் பாலியல் வாழ்க்கையும் பாதிக்கப்படலாம்.
இதற்கான காரணங்கள் (What are the causes of penile itching?)
இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம், அவற்றில் சில:
ஸ்மெக்மா சேருதல்: ஆணுறுப்பின் தோலுக்கு அடியில் வெண்ணிறப் படிவு உருவாகும், ஆணுறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ளாவிட்டால், அது அதிகமாகச் சேர்ந்துவிடலாம்
சோப்பு, டிடர்ஜெண்ட்டுகள், அழகு சாதனப் பொருள்கள் அல்லது லேட்டக்ஸ் ஆணுறைகள் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது வேதிப்பொருள்களால் ஒவ்வாமை ஏற்பட்டு அதன் எதிர்வினையாக அரிப்பு ஏற்படலாம்
இறுக்கமான உள்ளாடை அணியும்போது உண்டாகும் உராய்வு
சொறி சிரங்கு
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று
கேன்டிடா நோய்த்தொற்று போன்ற பூஞ்சான் நோய்த்தொற்றுகள்
ஆணுறுப்பு மொட்டின் அழற்சி (பெலனைட்டஸ்)
பால்வினை நோய்களாலும் அரிப்பு ஏற்படலாம், உதாரணமாக:
ஆணுறுப்பில் ஏற்படும் அக்கி
கொனோரியா
ட்ரைக்கோமோனியாசிஸ்
பிறப்புறுப்பு மருக்கள்
கிளாமீடியா
அந்தரங்க உறுப்புகளில் பேன்
இதனைக் கண்டறியும் முறை (How is penile itching diagnosed?)
உங்கள் மருத்துவர் பின்வருபவை போன்ற கேள்விகளைக் கேட்கலாம்:
எவ்வளவு நாட்களாக அரிப்பு உள்ளது?
சிறுநீர் கழிக்கும் போது ஏதேனும் பிரச்சனை உள்ளதா?
பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டீர்களா என்பது உட்பட, உங்கள் பாலியல் வாழ்க்கை பற்றிய கேள்விகள்
பால்வினை நோய்கள் அல்லது பிற பிரச்சனைகளைக் கண்டறிய, உங்கள் மருத்துவர் குறிப்பிட்ட சில பரிசோதனைகளைப் பரிந்துரைக்கலாம்.
இதைச் சமாளித்தல் (Management of penile itching)
அரிப்புக்கான காரணத்தின் அடிப்படையில், அரிப்பை நிர்வகிக்க மருத்துவர் சில மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். அவற்றில் சில:
அரிப்புக்குக் காரணமாக இருக்கும் பிரச்சனையைக் கட்டுப்படுத்த, வாய்வழி எடுத்துக்கொள்ளும் மருந்துகள், மேலே பூசும் ஆயின்ட்மென்ட்டுகள்
பிற நடவடிக்கைகளில் சில:
எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய சோப்பு, டிடர்ஜென்ட்டுகள் அல்லது அழகு சாதனத் தயாரிப்புகளை இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
குளிக்கும்போது, ஆணுறுப்பைக் கழுவி, தோலுக்கு அடியில் படிந்திருக்கும் ஸ்மெக்மாவை அகற்றவும்
மிகவும் இறுக்கமான உள்ளாடைகளை அணிவதைத் தவிர்க்கவும்
வழவழப்புப் பொருள்கள் அல்லது லேட்டக்ஸ் ஆணுறைகளுக்கு உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால், உடலுறவின்போது அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
உங்களுக்கு ஆணுறுப்பில் அரிப்பு இருந்தால், மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளவும். சுத்தமான பழக்க வழக்கங்களை வைத்துக்கொள்ளவும், சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர் பரிந்துரைக்கும் நேரங்களில் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அறிவுரையின்படி நடக்கவும்.