Home உறவு-காதல் பெண்களிடம் பேச கூச்சப்படுகிறீர்களா? இப்டி டிரை பண்ணுங்க

பெண்களிடம் பேச கூச்சப்படுகிறீர்களா? இப்டி டிரை பண்ணுங்க

41

இருபத்தெட்டு வயது ஆண் நான். எனக்குப் பெண்களிடம் பேசுவதற்கும் பழகுவதற்கும் கூச்சமாக இருக்கிறது. அவர்கள் என்னிடம் பேசினால் என்னால் இயல்பாகப் பேச இயலவில்லை. வெட்கப்படுகிறேன். இதனால் நான் வேலை பார்க்கும் இடத்தில் என்னைக் கேலி செய்கிறார்கள். எனக்கு ஏன் இப்படியொரு பிரச்னை இருக்கிறது? இதற்குத் தீர்வு என்ன?

நீங்கள் கேட்ட முதல் கேள்விக்கான பதில் – உங்களுக்கு இப்படியொரு பிரச்னை வரக்காரணம், உங்கள் வளர்ப்பு முறையாக இருக்கலாம்.

வீட்டில், பள்ளிக்கூடத்தில், அக்கம்பக்கத்தில், உறவுமுறையில் என்று பெண்களுடன் சகஜமாகப் பேசிப் பழகும் சந்தர்ப்பங்கள் இல்லாமலேயே வளர்ந்தீர்களோ? சந்தர்ப்பம் இருந்தும் வீட்டுப் பெரிசுகள், “பொம்பளைங்ககிட்ட பேசினீயோ…“ என்று ரொம்பவே கட்டுப்படுத்தி வைத்தார்களோ? காரணம் எதுவாக இருந்தாலும் கவலை வேண்டாம். இதற்கு ஒன்றல்ல, பல தீர்வுகள் உள்ளன.

உங்களுக்கு இதனால் எந்தப் பெரிய இழப்பும் இல்லாதபட்சத்தில் நீங்கள் இப்படியே இருந்து விடலாம். ஸோ வாட்? உலகத்தில் எல்லா ஆண்களுமே பெண்களிடம் சகஜமாகப் பேசியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றுமில்லையே!

எனக்குத் தெரிந்த பல போ் இப்படிப் பேசாமடந்தர்களாக இருந்தும், கடைசியில் தங்கள் மனைவியிடம் மட்டும் நெருங்கிப் பேசி, பழகி சந்தோஷமாகவே இருக்கிறார்கள். அதனால் பிறர் செய்யும் கேலியைப் பொருட்படுத்தாமல் நீங்கள் நீங்களாகவே இருக்கலாம்.

பிறரைத் திருப்திபடுத்துவதற்காக இல்லை – உங்களுக்கே உங்கள் குணத்தை மாற்றிக் கொண்டால் தேவலை என்று தோன்றினால், ஓ யெஸ்! நிச்சயம் உங்கள் குணத்தை மாற்ற முடியும் – நீங்கள் முயன்றால். அலுவலகம், பேருந்து என்று எந்த சந்தர்ப்பத்தில் பெண்களைப் பார்த்தாலும் அவர்களை எதிர்பாலினராக மட்டுமே பார்ப்பதை நிறுத்திவிட்டு – அவர்களும் மனிதர்கள்தான் என்ற கண்ணோட்டத்துடன் அணுகுங்கள்.

பாலினத்தின் பாதிப்பு குறைந்துவிட்டால், ஆண்களிடம் பேசுவது போலவே பெண்களிடமும் உங்களால் சகஜமாகப் பேசிப் பழக முடியும்.

முயற்சி செய்யுங்கள். முதல் சில முறைகள் சொதப்பினாலும், பழகப் பழக எல்லாம் எளிதாகிவிடும். இல்லாவிட்டால், இருக்கவே இருக்கிறோம் மனநல மருத்துவர்கள் – ஒருவரைக் கலந்தாலோசித்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் உங்கள் ப்ராப்ளம் போயே போச்சு!