அதிக நேரம் கண் விழித்து வேலை பார்த்தால், ஆண்களின் தாம்பத்ய உணர்வுக்கு ஆதாரமாக விளங்கும் ஹார்மோன்களின் வளர்ச்சி குறைந்து, ஆண்மைக்கே சவாலாக அமைந்துவிடும்’ என்ற ஓர் அதிர்ச்சி ஆய்வு முடிவை சமீபத்தில் வெளியிட்டுள்ளது அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகம். அதிலும், ‘ஐந்து மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்கும்போது, ஒரு வார காலத்துக்குள்ளாகவே இந்தப் பாதிப்பை உணரலாம்’ என்றும் அதிர வைக்கிறது.
இன்றைய சூழலில், பலருக்கும் இரவு பகலாகவும், பகல் இரவாகவும் மாறியிருக்கிறது. கண் விழித்து வேலை பார்த்துத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்து விடும் பலருக்கு இரவு தூக்கம் என்பது இன்னும் பகல் கனவாகத் தான் இருக்கிறது. அதிலும், இயற்கைக்கு மாறாகக் கண் விழித்து வேலை பார்ப்பதுகூட இந்த விஞ்ஞான உலகில் வித்தியாசமாய்த் தான் பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்குப் பின் மறைந்திருக்கும் மருத்துவ ரீதியான பிரச்னைகள் என்னென்ன என்பது குறித்து அவசர சிகிச்சை சிறப்பு மருத்துவர் சாய் கிஷோரிடம் கேட்டோம்.
”ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கடிகாரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இயற்கையான வழியில் அதனுடைய வேலையைத் தொடர்ந்து செய்யவிடாமல் அதற்கு எதிராக, இரவு கண்விழித்து வேலை செய்பவர்களுக்கு கண்டிப்பாக நிறைய மனம் தொடர்பான பிரச்னைகள் வரும் என்பது உறுதி. கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கும், அவர்கள் சரியாக ஓய்வு எடுக்காதது தான் முக்கியக் காரணம். கண் எரிச்சல், முதுகு வலி, கழுத்து வலி, சயனஸ் போன்ற பிரச்னைகள் எல்லாம் அழையா விருந்தாளியாக வந்து கொண்டே இருக்கும்.
எல்லோருக்கும் சூரிய வெளிச்சம் என்பது ரொம்பவும் அவசியம். அது கிடைக்கிற நேரத்தில் நாம் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தால், வைட்டமின் டி குறைப்பாட்டால் பிரச்னைகள் வரும். தொடர்ந்து கண் விழித்து வேலை பார்ப்பதால் ஏற்படும் அதிகப்படியான மனஅழுத்தம் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கு வழிவகுத்து விடும். மேலும், குழந்தைகள், வீட்டில் இருக்கக்கூடிய நேரத்தில் பெற்றோரில் ஒருவர் மட்டும் வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தால், அதுவே பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்திவிடும். இதனால் குழந்தைகள், பெற்றோர்கள் இல்லாத நிலையை மனதில் நினைத்து ஏங்கும்போது அவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதுடன், தவறான பல வழிகளுக்கும் சென்று விட வாய்ப்புள்ளது.
‘ரொம்ப நேரம் தூங்குற குழந்தை தான், நல்லா வளர்ச்சி அடையும்’ என்று கிராமத்தில் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. சிறு வயதிலிருந்தே, குழந்தைகளைச் சரியான நேரத்தில் தூங்க வைத்து அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
இன்றைய, இளைஞர்கள் கண் விழித்துப் படித்தால் தான் பரீட்சையில் மதிபெண்களை அள்ள முடியும் என்ற தப்புக் கணக்கில் விடிய விடிய படிக்கின்றனர். இதனால், மார்க் அதிகமாகுதோ இல்லையோ, அவர்களுக்கு ஹார்மோன் சம்மந்தமான பிரச்னைகள் வர ஆரம்பித்துவிடுகிறது. அதிலும், குறிப்பாகப் பெண்களுக்கு மாத விடாய் தள்ளிப் போகுவதற்குகூட நிறைய வாய்ப்புண்டு. வைரஸ் நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். சரியான நேரத்துக்குத் தூங்கி எழும் பழக்கம் நோய்களை அண்டவிடாது” என்கிறார்
தூக்கம் தடைபடாமல் இருக்க…
* தூங்கப் போகையில் அதிகளவு உணவு எடுத்துக் கொள்ளக்கூடாது.
* எண்ணெய், கார உணவுகளைத் தவிர்த்து விட வேண்டும். அதற்கு, பதிலாகப் பச்சை காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
* இரவு கண் விழிப்பால், உடற் எடை கூட வாய்ப்புண்டு. இதனைத் தவிர்க்க, தினமும் குறைந்தது அரை மணி நேர உடற்பயிற்சி அவசியம். வார இறுதி நாட்களில் சைக்கிள் ஒட்டுதல், நீச்சல் போன்றவற்றைச் செய்ய வேண்டும்.
* தியானம், யோகா தூக்கத்துக்கு அருமருந்து. மன அழுத்தத்தைத் தடுக்கும் ‘மா’ மருந்து.