ஹோம் மேக்கர் எனப்படும் இல்லத்தரசிகளை விட அலுவலகத்திற்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சுய சம்பாத்யம், அலுவலக நட்பு வட்டாரங்கள் என்பதையும் தாண்டி ஆரோக்கியம் அதிகரிக்கிறதாம்.
இது தொடர்பாக அக்ரோன் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேராசிரியர் அட்ரியான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.
வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் பெண்கள், வேலையை விட்டவர்கள், பகுதிநேரமாக வேலை பார்ப்பவர்களை விட முழுநேரமும் வேலைக்குப் போகும் பெண்களின் ஆரோக்கியம் நல்ல முறையில் இருந்ததாம். வீட்டில் இருக்கும் பெண்களை விட அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் காணப்பட்டனராம்.
குழந்தை பிறந்து 6 மாதத்தில் வேலைக்குத் திரும்பும் இளம் தாய்மார்கள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கின்றனராம். இந்த பெண்கள் 40 வயதாகும்போது அவர்களின் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சினையும் இன்றி சுறுசுறுப்பாக இருக்கின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்.
வீட்டிலும், அலுவலகத்திலும் ஏற்படும் பிரச்சினைகளை சமாளித்து ஆரோக்கியத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர் பெண்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.