பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது இயல்பானதொரு நிகழ்வு. அது பெண்ணுறுப்பில் உள்ள திசுக்களை ஆரோக்கியமாகவும், பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவும்.
மாதவிடாய் முடிந்து சில நாள்கள் வரை குறைவாகவும், சுழற்சியின் நடுவில் சிறிது அதிகமாகவும், அடர்த்தியாகவும் வெள்ளை வெளியேறுவது இயல்பானது. சமயங்களில் இது பழுப்பு அல்லது சிவப்பு நிறத்திலும் இருக்கலாம். சினைப்பையில் இருந்து முட்டை வெளியேறும்போது (Ovulation process) சிறிய அளவில் ஏற்படும் ரத்தக்கசிவு இதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஆனால், வெள்ளைப்படுதலில் அதிகப்படியான நிற வேறுபாடு, துர்நாற்றம் இருந்தாலோ, அதிகப்படியான வயிற்றுவலி, பிறப்புறுப்பில் எரிச்சல், வலி ஆகியவை நேர்ந்தாலோ, பாக்டீரியா அல்லது பூஞ்சைத் தொற்று அதற்குக் காரணமாக இருக்கலாம்.
மாதவிடாய் முடிந்த (Menopause) பெண்களுக்கு இதுபோல சிவப்பு கலந்து வெள்ளை ஏதேனும் வெளியேறினால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். அது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அல்லது கர்ப்பப்பை புற்றுநோயின் அறிகுறியாகக்கூட இருக்கலாம்.