பெண்களுக்கு ஏற்படும் நோய்களில் ஒன்று வெள்ளைப்படுதல், இதனை வெட்டை என்றும் சொல்வார்கள்.
பல பெண்கள் இதை கவனிக்காமலும், வெளியில் சொல்ல கூச்சப்படுவதாலும் பல்வேறு அபாய கட்டங்களை சந்திக்க நேரிடும்.
குறிப்பாக 15 வயது முதல் 45 வயது வரையிலான பெண்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது.
வெள்ளைப்படுதல் என்பது என்ன?
நமது உடலில் பல பகுதிகளில் பிசுபிசுப்புத் தன்மை தேவைப்படுகிறது.
பெண்களின் பிறப்புறுப்பு எப்போதும் ஈரப்பசை மற்றும் வழவழப்புடன் இருக்க வேண்டியதிருக்கிறது. அதற்காக இந்த பிசுபிசுப்பான வெள்ளைத் திரவம் சுரக்கிறது.
இது பிறப்புறுப்பின் தசைப் பகுதியில் இருந்தும், கருப்பையின் வாய் மற்றும் அதன் உட்சுவர்களில் இருந்தும் சிறிதளவு சுரந்து வருகிறது.
இதன் சுரப்பு அதிகமாகி விடும் போது அதனை வெள்ளைப்படுதல் என்று கூறுகிறோம்.
இதன் அறிகுறிகள்
பிறப்புறுப்பில் அதிகளவு வெள்ளைப்படுதல்
வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் நாற்றத்துடன் சளிபோல் வெளியேறுதல்
வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல்
சிறுநீர் மிகுந்த எரிச்சலுடன் வெளியேறுதல்
வெள்ளைப்படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி உண்டாகுதல்
நோய்க்கான காரணங்கள்
பொதுவாக ஒரு சில பெண்களுக்கு பூப்பெய்திய காலம் தொட்டே வெள்ளைப்படுதல் இருக்கும்.
ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண்கள்
அதிக உஷ்ணம், அதீத சிந்தனை, காரம், உப்பு மிகுந்த உணவு
தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு
சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தல்
அதிக மன உளைச்சல், மனபயம், சத்தில்லாத உணவு
இதனை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து மருத்துவரிடம் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெள்ளை நோயைத் தவிர்க்க
உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.
உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுகளைஅதிகம் சாப்பிட வேண்டும்.
நோயை குணப்படுத்தும் மூலிகை மருந்து
கறிவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு எடுத்து சூப் செய்து இரண்டு வாரம் தொடர்ந்து அருந்தி வந்தால், வெள்ளைப்படுதல் குணமாகும்.
வல்லாரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடலாம்.
அருகம்புல்லை எடுத்து சிறு சிறுதுண்டுகளாக நறுக்கி 4 குவளை நீரில் கொதிக்க வைத்து அது நன்கு வற்றி 1 குவளை ஆனவுடன் எடுத்து அதனுடன் மிளகுத்தூள் தேவையான அளவு பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
ஓரிதழ் தாமரை இலைகளை நன்கு நீர்விட்டு அலசி அரைத்து எலுமிச்சம் பழம் அளவு உருண்டை எடுத்து காய்ச்சாத பசும் பால் அல்லது வெள்ளாட்டுப்பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் எளிதில் குணமாகும்.