கோபம் என்பது எல்லா குழந்தைகளுக்குமே உள்ள பொதுவான உணர்ச்சி தான். ஆனால் அவற்றை அப்படியே வளரவிட்டால், குழந்தைகள் தாங்கள் நினைக்கும் அத்தனையையும் கோபத்தாலே சாதித்துவிட நினைப்பார்கள்.
அவர்கள் வளர வளர அந்த கோபமும் அவர்களுடன் சேர்ந்தே வளர்ந்துவிடும். இதை பெற்றோர்கள் ஆரம்பத்திலேயே கவனித்து சரி செய்துவிட வேண்டும். இல்லையென்றால், உங்கள் குழந்தை பிற துறுதுறு குழந்தைகளுக்கு மத்தியில் சிடுமூஞ்சி குழந்தையாகவே இருக்கும்.
உங்கள் குழந்தை எந்த மாதிரியான விஷயங்களுக்காக அதிகம் கோபப்படுகிறார்கள் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். பொதுவாக வீட்டின் சுற்றுச்சூழலில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்தால், அந்த சூழலுக்குள் தன்னால் இயல்பாக இயங்க முடியாமல் கோபப்படும்.
கண் முன்னால் இருக்கும் பொருட்களைப் போட்டு உடைக்கும். தன்னுடைய உள்ளுணர்வை எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியாமல், அதைக் கோபத்தின் மூலம் வெளிப்படுத்தும்.
உங்களுடைய கோபத்துக்கு நீங்கள் எப்படி பொறுப்பானவர்களோ, அதேபோல் தான் உங்கள் குழந்தையின் கோபத்துக்கு அவர்கள் தான் பொறுப்பாளிகள். அதனால் அவர்களுடைய கோபத்தை, பிறருக்கு மத்தியில் நீங்கள் ஒருபோதும் நியாயப்படுத்தாதீர்கள். அப்படி செய்வது அவர்களுடைய கோபத்தை நீங்கள் ஊக்கப்படுத்துவது போல் ஆகிவிடும்.
குழந்தைகளால் அவர்களுடைய கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தெரியாது. குழந்தைகளிடம் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்வதும், அவர்களை உற்சாகப்படுத்துவதும் தவறில்லை. அப்போதுதான், குழந்தைகள் உணர்வு ரீதியாக உங்களுடன் ஒன்றியிருப்பார்கள்.
குழந்தைகள் ஆர்வமாக செய்யும் வேலைகளில் அவர்களை நிறையவே பாராட்டுங்கள். பாராட்டுவதிலெல்லாம் கஞ்சத்தனம் வேண்டாம். அப்போது தான் அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை கண்டடைய முடியும். அவர்களும் அப்போது தான் தங்களுடைய திறமைகளை அடையாளம் கண்டுகொள்வார்கள்.
சரியான காரணங்களுக்காக குழந்தைகள் கோபப்பட்டால், உங்கள் ஈகோவைத் தூக்கித் தூரமாக வைத்துவிட்டு, உங்கள் தவறுகளை உணர்ந்து, அவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள். அது நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரமாகக் கருதி, மனதளவில் மகிழ்ச்சியடைவார்கள்.
குழந்தைகள் கோபப்படும் போது, அதிலிருந்து உடனடியாக வெளிவர, பல பெற்றோர்கள் அடிப்பது, திட்டுவது என குழந்தைகளை தண்டிப்பதுண்டு. அவ்வாறு செய்யாமல், அவர்களுக்குப் பிடித்த விஷயங்களின் பக்கமாக அவர்களை திசை திருப்புங்கள்.