Home ஆண்கள் விறைப்பின்மைப் பிரச்சனைக்கு ஆணுறுப்பில் ஊசி செலுத்துதல்

விறைப்பின்மைப் பிரச்சனைக்கு ஆணுறுப்பில் ஊசி செலுத்துதல்

69

விறைப்பின்மைப் பிரச்சனை உள்ள ஆண்களுக்கு இன்ட்ராகேவர்னோசல் இன்ஜெக்ஷன் தெரப்பி (ஆண்குறியில் ஊசி செலுத்தும் சிகிச்சை என்றும் அழைக்கப்படும்) எனும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், சிறிதளவு மருந்து கார்ப்பஸ் கார்வேர்நோசம் திசுவிற்குள் (ஆண்குறியின் விறைப்புக்குக் காரணமாக இருக்கும் ஸ்பாஞ்சு போன்ற திசு) ஊசி மூலம் செலுத்தப்படும். இந்த மருந்துகள், மென்மையான தசைகளைத் தளர்த்தும் தன்மையுடைய மருந்துகளாகும். இவை இரத்தக் குழாய்களில் இருக்கும் மென்மையான தசைகளைத் தளர்த்திவிடுவதன் மூலம், ஆண்குறிக்குச் செல்லும் இரத்தத்தின் அளவை அதிகரிக்கின்றன, இதனால் ஆண்குறி விறைப்பது எளிதாகிறது.

இந்த ஊசியில், ப்ரோஸ்டாகிளான்டின் E1, பாப்பவெரின் மற்றும் ஃபேன்டோலமைன் போன்ற வேதிப்பொருள்கள் இருக்கும். இதில் பாப்பவெரினும் ஃபேன்டோலமைனும் முந்தைய தலைமுறை மருந்துகளாகும், ப்ரோஸ்டாகிளான்டின் E1 என்பது மட்டுமே FDA அங்கீகரித்துள்ள மருந்தாகும். சில சமயம், இந்த மருந்தின் இரண்டு (பைமிக்ஸ்) மற்றும் மூன்று வகைகள் (ட்ரைமிக்ஸ் அல்லது ட்ரிப்பில் P தெரப்பி) சேர்த்துப் பயன்படுத்தப்படுவதுண்டு.

இந்தச் சிகிச்சை யாருக்கு நல்லது? (Who are the men for whom penile injection is recommended?)

1980களில் இந்தப் பிரச்சனைக்கு ஆண்குறியின் குறிப்பிட்ட பகுதியை மாற்றிப்பொருத்தும் சிகிச்சை மட்டுமே தீர்வாக இருந்தது. அக்காலத்தில், சுயமாக இந்த மருந்தை ஊசி மூலம் செலுத்திக்கொள்ளும் முறை மட்டுமே இதற்கு மாற்றாக இருந்தது, எனவே முறை மிகவும் பிரபலமாக இருந்தது. பிறகு (வயாக்ரா போன்ற) உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் கிடைத்தன, அதன் பிறகு ஊசி செலுத்தும் முறையை மக்கள் பரவலாகப் பயன்படுத்தவில்லை. உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளை எடுத்துக்கொள்ள அல்லது பயன்படுத்த முடியாதவர்கள் மட்டுமே ஊசி செலுத்தும் முறையை நாடினர்.

இதைப் பயன்படுத்தும் நபர், அவரே ஆணுறுப்பில் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும், அல்லது அவரது இணையர் போட்டுவிடலாம். ஆண்குறியில் ஊசி போட்டுக்கொள்ள பயப்படுபவர்களுக்கென்று ஆட்டோ-இன்ஜெக்டர் கருவி உள்ளது. உடல் பருமனாக இருக்கும் சிலருக்கு அவர்களது ஆணுறுப்பைப் பார்ப்பது கடினமாக இருக்கலாம். அவர்களுக்கு அவர்களின் இணையர் ஊசி போட்டு உதவலாம்.

ப்ரோஸ்டாகிளான்டின் மருந்தை எடுத்துக்கொண்டால் ஒவ்வாமை எதிர்விளைவுகள் ஏற்படும் நபர்கள், பைமிக்ஸ் (பாப்பவெரின் மற்றும் ஃபென்டோலமைன்) மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

(சிக்கில் செல் நோய், லுக்கீமியா (இரத்தப் புற்றுநோய்) போன்ற) குறிப்பிட்ட சில நோய்கள் உள்ள ஆண்களுக்கு ப்ரியாப்பிசம் (நீடித்த வலியுடன் கூடிய விறைப்பு) எனும் பிரச்சனை வரும் வாய்ப்பு அதிகமுள்ளது.

இரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள், ஊசி போடும் இடத்தில் சிராய்ப்போ இரத்தமோ வராமல் தடுக்க, அவ்விடத்தில் லேசாக அழுத்திவிட்டுக்கொள்ள வேண்டும். மோனோஅமைன் ஆக்சிடேஸ் குழுவைச் சேர்ந்த முந்தைய தலைமுறை மன இறுக்க எதிர்ப்பு மருந்துகளை (ஆன்டிடிப்ரசன்ட்) எடுத்துக்கொள்பவர்கள், இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளக்கூடாது.

பெய்ரோனி நோய் உள்ள ஆண்கள் ஊசி போட்டுக்கொள்ளும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், ஏனெனில் ஊசி போடும்போது ஆணுறுப்பின்மீது வடுக்கள் உண்டாகலாம்.

எப்படி ஊசி போடப்படும்? (How is the penile injection taken?)

சிறிய ஊசியைக் கொண்ட சிறிய, நீளம் குறைவான (1 மிலி) சிரஞ்சி பயன்படுத்தப்படும். ஆணுறுப்பின் அடிப்பகுதி முதல் ஆணுறுப்புத் தண்டின் மூன்றில் இரண்டு பாகம் வரையுள்ள பகுதியில் எங்கு வேண்டுமானாலும் இந்த ஊசி போட்டுக்கொள்ளலாம். ஆனால் ஆணுறுப்பின் மேல் பகுதியில் கடிகார முள் 2 மணி அல்லது 10 மணி எனக் காட்டும் திசையமைப்பில், ஆணுறுப்பு முனை மற்றும் சிறுநீர்க்குழாயிலிருந்து தூரமாகப் போட வேண்டும்.

ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடத்தில் ஊசி போட வேண்டும், ஒரே பகுதியில் மீண்டும் மீண்டும் காயப்படுவதைத் தவிர்க்க, ஒவ்வொரு முறையும் ஒரு பக்கத்தில் என மாற்றி மாற்றிப் போட்டுக்கொள்ள வேண்டும்.

இது எந்த அளவுக்குப் பலனளிக்கும்? (How effective is penile injection therapy?)

எல்லாக் காரணங்களால் ஏற்படும் விறைப்பின்மைப் பிரச்சனைக்கும் இந்த ஆண்குறியில் ஊசி போடும் சிகிச்சை வழங்கப்படுகிறது. புணர்ச்சிப் பரவசநிலை அல்லது விந்து வெளியேறுதல் ஆகியவற்றை இது எவ்விதத்திலும் பாதிப்பதில்லை. நீண்ட காலமாகப் பயன்படுத்துபவர்களுக்கு இது சௌகரியமான செயலாகிவிடலாம்.

இந்த ஊசி செலுத்தும் முறையின் மூலம் விறைப்பை அடைவதில் வெற்றி வாய்ப்பு 70 முதல் 94% வரையுள்ளது. விறைப்பை அடைவதில் வெற்றிபெற, ஒவ்வொருவருக்கும் செலுத்த வேண்டிய மருந்தளவு கணிசமாக வேறுபடுகிறது.

இதன் பலன் உடனடியாகத் தெரியக்கூடியது. ஊசி போட்ட 5-20 நிமிடங்களில் விறைப்பு தொடங்குகிறது.

(வயாக்ரா போன்ற) PDE5 தடைமருந்துகளாலும் பலன் கிடைக்காதவர்களுக்கும் இந்த சிகிச்சை பலனளித்துள்ளது.

சிறுநீர்த்திறப்பில் செலுத்தப்படும் அல்ப்ரோஸ்டாடில் (MUSE தெரப்பி) சிகிச்சையைக் காட்டிலும் இதையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

நரம்பியல் காரணங்களால் விறைப்பின்மைப் பிரச்சனை (உதாரணமாக, புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு நரம்பில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் விறைப்பின்மைப் பிரச்சனை ஏற்படலாம்) உள்ள நபர்களுக்கு ஆண்குறியில் ஊசிபோட்டுக்கொள்ளும் இம்முறை பலனளிப்பதாகத் தெரியவந்துள்ளது. ஏனெனில் இம்முறை பலனளிக்க, நரம்புகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

இந்த சிகிச்சை முறையில் உள்ள ஆபத்துகள் (What are the risks with penile injection therapy?)

இதில் சாத்தியமுள்ள சில பாதகமான விளைவுகள்:

ஆணுறுப்பில் வலி அல்லது எரிச்சல்: இந்த சிகிச்சை எடுத்துக்கொண்ட ஆண்களில் சுமார் 30% பேருக்கு, ஊசி போட்ட இடத்தில் அல்லது ஆணுறுப்பில் வலி உண்டாகியுள்ளது. இந்த வலியைத் தணிக்க மசாஜ் செய்யலாம். அப்போதும் வலி குறையாவிட்டால், மருத்துவரிடம் செல்லவும்.
சிராய்ப்பு இரத்தம் கட்டுதல்: ஊசி போடும்போது கவனமாக இல்லாவிட்டால், மேற்பரப்பில் இருக்கக்கூடிய இரத்த நாளம் சேதமடைந்து சிராய்ப்போ இரத்தக்கட்டோ ஏற்படலாம். அப்படி நேர்ந்தால், ஊசி போட்ட இடத்தில் லேசாக அழுத்தி விடுவதன் மூலம் மேலும் இரத்தம் வராமல் தடுக்கலாம். சிராய்ப்போ இரத்தக்கட்டோ ஏற்பட்டால் அது சிறிது நேரத்தில் தானாக சரியாகிவிடும்.
ப்ரியாப்பிசம்: இந்த சிகிச்சையைப் பயன்படுத்தும் ஆண்களில் சுமார் 2% பேருக்கு, நீடித்த வலியுடன் கூடிய விறைப்பு ஏற்படுகிறது, பைமிக்ஸ் மருந்துகளைப் பயன்படுத்துபவர்களை விட ட்ரைமிக்ஸ் மருந்துகளைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மூன்று மணிநேரத்திற்கும் மேலாக விறைப்பு நீடித்தால், உங்கள் மருத்துவரையோ சிறுநீரகவியல் மருத்துவரையோ உடனடியாகச் சந்தித்து ஆலோசனை பெறவும்.
ஆண்குறியில் நார்க்கட்டி மற்றும் ஆண்குறி வளைதல்: ஆணுறுப்பின் கார்போரா திசுவின் மீது வடுக்கள் தோன்றலாம். தொடர்ந்து மீண்டும் மீண்டும் இப்படி சிறு அளவில் சேதமடைவதால், நார்க்கட்டிகள் அதிகரித்து பட்டைகள் போல உருவாக்கி, ஆண்குறி வளையலாம் (பெய்ரோனி நோய்). இப்படி வடுக்கள் ஏற்பட்டால், எதிர்காலத்தில் விறைப்பை அடைய அதிக டோஸ் மருந்துகளை ஊசி மூலம் செலுத்திக்கொள்ள வேண்டியிருக்கலாம்.
சிறுநீர்க்குழாய் சேதமடைதல்: ஊசி போடும்போது முறையாக செயல்படாவிட்டால், இப்படி நடக்கலாம்.
ஆண்குறிப் பகுதியில் நோய்த்தொற்று (காவெர்நோசைட்டஸ்): ஊசி போடும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளத் தவறினால் இதுபோன்ற நோய்த்தொற்றுகள் ஏற்படலாம்.