Home சூடான செய்திகள் வினோத்குமாரின் குடும்பத்தார் ரூ.50 லட்சம் கேட்டு துன்புறுத்தியதால் தான் இறந்தார்: அல்போன்சா

வினோத்குமாரின் குடும்பத்தார் ரூ.50 லட்சம் கேட்டு துன்புறுத்தியதால் தான் இறந்தார்: அல்போன்சா

19

வினோத்குமாரின் குடும்பத்தார் அவரிடம் ரூ.50 லட்சம் கேட்டு தொல்லை கொடுத்ததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று நடிகை அல்போன்சா தெரிவித்துள்ளார்.

விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது மகள் மற்றும் காதலர் வினோத்குமாருடன் நடிகை அல்போன்சா தங்கியிருந்தார். இந்நிலையில் வினோத்குமார் திடீரென மர்மமான முறையில் அல்போன்சா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அல்போன்சா தரப்பில் கூறப்பட்டது. ஆனால் வினோத்குமாரை அல்போன்சாவும், அவரது தம்பி ராபர்ட்டும் சேர்ந்து அடித்துக் கொன்றுவிட்டதாக அவரது தந்தை குற்றம் சாட்டினார். அவரது புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அல்போன்சாவும், ராபர்ட்டும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். விசாரணை நடந்து கொண்டிருக்கையில் அல்போன்சா திடீர் என்று ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார். அவர் ஹைதராபாத்தில் பதுங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் வினோத் குமார் மரணம் குறித்து அல்போன்சா முதன்முதலாக செய்தியாள்களை சந்தித்து பேசினார். இன்று சென்னையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

நான் சினிமாவுக்கு வந்து 6 ஆண்டுகளுக்கு மேலாகிவி்ட்டது. எனது காதலர் வினோத்குமாரின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சகைள் எழுந்தன. அவரது சாவுக்கு நான் காரணமில்லை. தன்னால் சினிமாவில் முன்னுக்கு வரமுடியாதது குறித்து வினோத்குமார் என்னிடம் அடிக்கடி கூறி வருத்தப்பட்டார். தனக்கு பின் நடிக்க வந்தவர்கள் எல்லாம் பெரிய நிலைக்கு வந்துவி்ட்டனர் என்றும், தான் மட்டும் அப்படியே இருப்பதாகவும் கூறி வருத்தப்பட்டார்.

இந்நிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். அது பிரேத பரிசோதனையிலும் உறுதியாகியுள்ளது. நான் யாருக்காகவும் பயந்து எங்கும் ஓடவில்லை. வினோத்குமார் தற்கொலை செய்து கொண்ட அன்று அவரது காரில் இருந்த எனது பாஸ்போர்ட்டை அவரது உறவினர்கள் எரித்துவிட்டனர். அப்படி இருக்கையில் நான் எப்படி வெளிநாடுகளுக்கு தப்பியோட முடியும்.

வினோத்குமாரின் குடும்பத்தினர் அவரிடம் ரூ.50 லட்சம் கேட்டு தொல்லை கொடுத்ததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். எனது மகளின் எதிர்காலத்திற்காக நான் மீண்டும் சினிமாவில் நடிக்கவிருக்கிறேன் என்றார்.