விந்துப்பை நீர்க்கட்டிகள் என்றால் என்ன? (What are spermatoceles?)
விந்தகங்களுக்கு அருகில் வளரும், கட்டி போன்ற, திரவம் நிரம்பிய, வலியற்ற திரள்களே விந்துப்பை நீர்க்கட்டிகளாகும். இவற்றை ஸ்பெர்மாட்டிக் சிஸ்ட் அல்லது எப்பிடைடமல் சிஸ்ட் என்றும் அழைக்கின்றனர். இத்தகைய கட்டிகள் விந்தகங்களுக்கு மேலும் பின்புறமும் இருக்கும், ஆனால் இவை விந்தகத்திலிருந்து தனித்திருக்கும். இந்த கட்டிகளின் அளவு வேறுபடும், வழக்கமாக இவை புற்றுநோயல்லாத கட்டிகளாகும்.
காரணங்கள் (Causes)
விந்துப்பை நீர்க்கட்டிகள் ஏற்படக் காரணம் என்ன என்பது இன்னும் துல்லியமாகத் தெரியவில்லை. பொதுவாக இவை 20 முதல் 50 வயது வரையுள்ள ஆண்களுக்கு அதிகம் உண்டாகின்றன. அது விந்து நாளத்தில் (விந்தகங்களில் இருந்து விந்தணுக்களைக் கொண்டு செல்லும் குழாய்கள்) அடைப்பு ஏற்படுவதால் விந்துப்பை நீர்க்கட்டிகள் உண்டாவதாகக் கருதப்படுகிறது. நோய்த்தொற்றுகளும் அழற்சி சார்ந்த செயல்பாடுகளும் இந்த அடைப்புகள் உண்டாவதில் பங்குவகிப்பதாகக் கருதப்படுகிறது.
அறிகுறிகள் (Symptoms)
பெரும்பாலும் அறிகுறிகள் எதுவும் இருப்பதில்லை, அப்படி இருந்தால் விந்தகங்களில் பின்வரும் அறிகுறிகள் தென்படலாம்:
விந்தகத்தின் மேல் மற்றும் பின் பகுதியில் கட்டி போன்று உண்டாவது
கனமாக இருப்பதுபோன்ற உணர்வு
லேசான வலி
நோய் கண்டறிதல் (Diagnosis)
உங்கள் மருத்துவர் உடற்பரிசோதனை மூலம் விந்துப்பை நீர்க்கட்டிகளைக் கண்டறியலாம். சில சமயம், நீங்களே விந்தகத்தைப் பரிசோதனை செய்துபார்க்கும் போது அவை தனியாகத் தெரியலாம்.
உங்கள் மருத்துவர் ஒளி உண்டாக்கும் கருவியைக் கொண்டு, விந்துப்பை நீர்க்கட்டிகள் வழியே ஒளியைப் பாய்ச்சுவார், அதன் மூலம் கட்டிகளின் தன்மை தெரியும்.
அல்ட்ராசவுண்ட் சோதனை பரிந்துரைக்கப்படலாம். இச்சோதனையில் ஒலி அலைகள் செலுத்தப்பட்டு, அதன் மூலம் நீர்க்கட்டிகள் படமெடுக்கப்படும்.
சிகிச்சை (Treatment)
பெரும்பாலும் இந்த நீர்க்கட்டிகள் வலியற்றவை, இவற்றுக்கு சிகிச்சை தேவையில்லை. அறிகுறிகள் பொறுக்க முடியாத அளவு இருந்தால், பின்வரும் சிகிச்சைகள் உள்ளன:
மருந்து:
வீக்கத்திற்கும், பிற அறிகுறிகளைத் தணிக்கவும் வலி நிவாரண மருத்துவம் அல்லது மருந்துகள் கொடுக்கப்படலாம்.
அறுவை சிகிச்சை:
ஸ்பெர்மெட்டோசீலோசெக்டமி: விந்துப்பை நீர்க்கட்டிகள் அறிகுறிகளுடன் காணப்பட்டால், இந்த சிகிச்சை கொடுக்கப்படலாம். இனப்பெருக்கப் பாதையைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, எப்பிடைடமல் திசுவிலிருந்து நீர்க்கட்டிகளை அகற்றுவதே இந்த அறுவை சிகிச்சையின் நோக்கமாகும். அது மயக்க மருந்து கொடுத்து செய்யப்படும் புறநோயாளிகள் செயல்முறையாகும். சில சமயம் எப்பிடைடமஸ் பகுதியியளவோ முழுமையாகவோ அகற்றப்படலாம்.
சில அரிதான சூழ்நிலைகளில், ஆஸ்பிரேஷன் மற்றும் ஸ்கெலரோதெரபி பயன்படுத்தப்படலாம்:
ஆஸ்பிரேஷன்: சுகாதாரமான சூழ்நிலையில், ஒரு ஊசி மூலம் விந்துப்பை நீர்க்கட்டிகள் குத்தித் துளையிடப்பட்டு அதில் உள்ளிருக்கும் எல்லாம் வெளியே எடுக்கப்படும்.
ஸ்கெலெரோதெரபி: முறையான கவனிப்புடன், எரிச்சல் உண்டாக்கும் மருந்து ஒன்று ஊசி மூலம் விந்துப்பை நீர்க்கட்டிகளுக்குள் செலுத்தப்படுகிறது. இந்தச் செயல்முறையின் விளைவாக, பெரிதான விந்து நாளங்கள் மூடுகின்றன, இதனால் மீண்டும் திரவம் சேர்வதற்கான வாய்ப்பும் குறைகிறது.
தடுத்தல் (Prevention)
இதனைத் தடுப்பதற்கென வழிகள் எதுவும் இல்லை. மாதம் ஒருமுறை விந்தகங்க்களை சுயபரிசோதனை செய்துகொள்வது இப்பிரச்சனையை முன்கூட்டியே கண்டறியவும் சிகிச்சை அளிக்கவும் உதவும்.
சிக்கல்கள் (Complications)
விந்துப்பை நீர்க்கட்டிகளால் பிற பெரிய சிக்கல்கள் உண்டாவது மிக அரிது. எனினும், விந்துப்பை நீர்க்கட்டிகள் இருப்பதால் புற்றுநோய்க் கட்டிகள், வெரிக்கோசீல், விரைப்பை இரத்தக்கட்டு, விரைச்சிரை முறுக்கம் போன்றவை இருப்பது தெரியாமல் போகலாம்.
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
உங்கள் விந்தகங்களின் அளவு அல்லது இயல்பான தன்மையில் ஏதேனும் வழக்கத்திற்கு மாறான மாற்றத்தைக் கவனித்தால் அல்லது விந்தகங்களில் அல்லது விந்தகப் பகுதியைச் சுற்றிலும் கட்டி போன்று ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்திக்கவும்.