Home ஆண்கள் விந்தணுக்கள் எண்ணிகையை அதிகரிக்க உதவும் உணவுகள்

விந்தணுக்கள் எண்ணிகையை அதிகரிக்க உதவும் உணவுகள்

64

உலகளவில் 7% ஆண்களுக்கு மலட்டுத்தன்மைப் பிரச்சனை உள்ளது என்று கூறப்படுகிறது. ஆண்களுக்கு உண்டாகும் மலட்டுத்தன்மைப் பிரச்சனைகளில் சுமார் 90% பிரச்சனைகள் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவுடன் சம்பந்தப்பட்டவை. ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும் சுற்றுச்சூழல் சார்ந்த காரணிகளும் காரணங்களாக உள்ளன.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில், ஆண்களின் உணவுப்பழக்கம் அவர்களின் இனப்பெருக்கம் சார்ந்த ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம் என்ற உண்மை தெரியவந்துள்ளது. விந்தணுக்களின் எண்ணிக்கையையும் விந்தின் தரத்தையும் அதிகரிக்கின்றன என்று பல்வேறு உணவு வகைகளும் சத்து மருந்துகளும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள் என்று நிரூபிக்கப்பட்ட சில உணவு வகைகள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்:

மீன் (Fish): போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்-இல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், சிவப்பு இறைச்சியை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, வாரம் ஒரு முறை இரண்டு சர்விங் (பரிமாறும் அளவு) மீன் சாப்பிட்டால் விந்தணுக்களின் மொத்த எண்ணிக்கை 60% அதிகரிக்கிறது என்று முடிவை வெளியிட்டது. மீன்களில் உள்ள ஒமேகா-3-கொழுப்பு அமிலங்களே விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எள் (Sesame): எள்ளில் மிக அதிக அளவில் ஃபைட்டோ ஊட்டச்சத்துகள் உள்ளன. குறிப்பாக சீசேமின், சீசேமலின், டோக்கோஃபெரால் போன்ற ஊட்டச்சத்துகள் ஆக்சிஜனேற்ற எதிர்ப்புப் பண்பைக் கொண்டவை மற்றும் பல்வேறு உடல்நலம் சார்ந்த நன்மைகளை வழங்குபவை. ஈரானில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், மலட்டுத்தன்மை உள்ள ஆண்களின் உணவில் மூன்று மாதங்களுக்கு, கூடுதல் சத்துப்பொருளாக எள் சேர்த்து வழங்கப்பட்டால், விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் நகர்வுத்திறனில் ஏற்படும் முன்னேற்றங்களைப் பற்றிய தகவலை வெளியிட்டது. விந்தணுக்கள் சம்பந்தப்பட்ட அம்சங்கள் மேம்படுவதற்குக் காரணம், எள்ளின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்புப் பண்பாகவே இருக்கக்கூடும். ஆண்களில் ஏற்படும் மலட்டுத்தன்மைப் பிரச்சனைக்கு எள் நல்ல பலனளிக்கும் பாதுகாப்பான உணவு என்று பரிந்துரைக்கலாம் என அந்த ஆய்வு தெரிவித்தது.

தக்காளி (Tomato): தக்காளியில் லைக்கொபீன் எனப்படும் கரோட்டினாய்டு உள்ளது. அதுவே தக்காளியின் சிவப்பு நிறத்திற்குக் காரணம். அதுமட்டுமின்றி, அது ஆக்சிஜனேற்ற எதிர்ப்புப் பண்புகளும் கொண்டது. ஓர் ஆய்வில் பங்கேற்ற ஆண்கள் தினமும் 8 மிகி லைக்கொபீன் எடுத்துக்கொண்டனர், விந்தணுக்களின் தரத்தில் முன்னேற்றம் காணப்பட்டு அறியப்படும் வரை, அவர்கள் தொடர்ந்து லைக்கொபீனை எடுத்துக்கொண்டனர். அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை 70% அதிகரித்தது தெரியவந்தது.

இறுதிக் கருத்து (Conclusion)

உங்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது கண்டறியப்பட்டால், இந்தக் குறிப்புகளைப் பின்பற்றுவதோடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதும் உங்கள் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான சரியான உணவுப் பழக்கமும் மிக முக்கியம். நீண்ட காலமாக இந்த மலட்டுத்தன்மைப் பிரச்சனை இருந்தால் உங்கள் மருத்துவரிடம் செல்லவும்.