Home அந்தரங்கம் வாழ்க்கைத் துணையை வசியப்படுத்துங்கள்… !

வாழ்க்கைத் துணையை வசியப்படுத்துங்கள்… !

51

இல்லறத்தில் தம்பதியரிடையே நெருக்கம் குறைந்து போனாலோ, சிக்கல் எழுந்தாலோ ஆண்கள் பலரும் மது மற்றும் பிற தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அதையும் தாண்டி பிரச்சினை அதிகரித்தால் விவாகரத்து வரை செல்கின்றனர். கணவரோ, மனைவியோ யாராக இருந்தாலும், பிரச்சினைக்கு யார் காரணமாக இருந்தாலும் இருவருக்குமே பாதிப்பு உண்டு.

இதுபோலத்தான் பிரச்சினையைத் தீர்க்க இருவரில் யார் ஒருவர் முன் வந்தாலும்..விட்டுக்கொடுத்தாலும் அதனால் வரும் இன்பம் இருவருக்குமே கிடைக்கும். இப்படியொரு இன்பம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? மேற்கொண்டு படியுங்கள்.

வசியப்படுத்துங்கள்

உங்களது சொல்லும் செயலும் உங்களவரை வசியப் படுத்தவேண்டும். வசியப் படுத்துதல் என்றால் உடனே ஏதோ மந்திர மையை தலையில் தடவுவது அல்ல. மாறாக, பேச்சால், செயலால், அன்பால் கவர்வதுதான் வசியப்படுத்துவது. உங்கள் துணையை அதிகமாக நேசிக்கிறீர்கள் என்பதை அவர் புரிந்து கொள்ளச்செய்ய வேண்டும். பிறரை விட உங்களவர்தான் விசேஷமானவர் என நீங்கள் நினைத் திருப்பதாக அவருக்கு உணர்த்த வேண்டும், நீங்கள் எதைச் செய்தாலும் அதில் அவரது பங்களிப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

ரொமான்ஸ் உணர்வுகள்

உங்கள் துணையை நீங்கள் முதன்முதலாக சந்தித்த போது நீங்கள் காட்டிய ரொமான்ஸ் உணர்வை மறுபடி புதுப்பிக்க வேண்டும். அப்போது பிரச்சினைகள் மறைந்து போகும். காதல் உணர்வுகள் மீண்டும் துளிர்க்கும். கணவன் மனைவியிடையே காதல் உணர்வுகளை உண்டாக்குவதற்கு எது தடையாக இருக்கிறதோ அதை முதலில் தூக்கியெறியுங்கள். திருமணமான புதிதில் அவர் கோபித்துக் கொண்டிருந்தால் நீங்கள் வலியச் சென்று கோபத்தைத் தணித்திருப்பீர்களே.. அவர் உங்களை சத்தம்போட்டு திட்டி யிருந்தால் பதிலுக்கு எதிர்த்துப் பேசாமல் தணிந்து போயிருப்பீர்களே.. இதையெல்லாம் நினைத்துப் பாருங்கள். சண்டை எப்படி வரும்?.

சின்ன சின்ன அக்கறை

காதல் உணர்வுகள் எல்லோருக்குமே இயல்பாக உண்டு, அதிலும் யாரிடம் சாதுர்யம் அதிகமிருக்கிறதோ அவர்களிடம் எப்படிப்பட்டவர்களும் விழுந்து விடுகிறார்கள். இந்த சாதுர்யமான காதல் உணர்வுகள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. உங்கள் துணையிடம் சின்னச்சின்ன விஷயங்களில் நீங்கள் காட்டும் அக்கறைதான் உங்களவரின் மனதை எப்போதும் நிறைத்துக் கொண்டிருக்கும்.

எதிர்பாராத முத்தங்கள்

கூட்டுக்குடும்பத்தில் இருப்பவராக இருந்தால் தனியாக மனம் விட்டுப் பேசவோ, சின்னச் சின்ன சேட்டைகள் செய்யவோ வாய்ப்புகளோ, பணிச் சுமைகளால் நேரமும் கிடைக்காது. இந்த நேரத்தில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவர் எதிர்பார்க்காத நிலையில் சின்னச்சின்ன முத்தங்கள், ஸ்பரிசங்கள் என அவரை சீண்டிக்கொண்டே இருக்கலாம். இல்லாவிட்டால், இதுவே அவரது மனதில் என்னை யாரும் கவனிப்பதே கிடையாது என்ற நெருடலையும், தனிமை உணர்வையும் உண்டாக்கிவிடும். இதைத் தவிர்க்க உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அவருக்கு உதவி செய்யுங்கள்.

அலுவலக வேலையாக வெளியூர் சென்றாலும் அடிக்கடி போனில் கூப்பிட்டுப் பேசுவது, கரிசனமாக நடந்துகொள்வது என எப்போதும் அவருடைய நினைவிலேயே நீங்கள் இருப்பதாகக் காட்டுங்கள். அது உங்கள் மீதான காதலை அதிகரிக்கும்.

அழகில் கவனம் தேவை

மனைவி ஏதோ நினைவில் இருக்கும் போது அவரைக் கூப்பிட்டு, அவரிடம் எதை கவனிக்கிறீர்களோ, எது உங்கள் சிந்தனையைக் கவர்கிறதோ அதை அப்படியே வெளிப்படுத்துங்கள். இது நல்ல பலன் கொடுக்கும். அவரது அழகைப் பற்றியோ, உடையைப் பற்றியோ நீங்கள் மேம்போக்காக சொல்லி வையுங்களேன். அன்றைக்கு முழுக்க அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்.

மனம் விட்டுப் பேசுங்கள்

இன்ப துன்பத்தைப் பகிர்ந்துகொள்ள மனம் விட்டுப் பேசுங்கள், அது மட்டுமல்ல, அவருக்குப் பிடித்தமானதையே பேசுங்கள், உங்களவர் ஒரு கருத்தைச்சொன்னால் உடனே அதற்கு எதிர்த்துப் பேசுவதையோ, மறுத்துப் பேசுவதையோ செய்யாதீர்கள். இப்படியெல்லாம் நடந்து கொள்ளும்போது உங்களின் மீதுள்ள அன்பு அதிகரிக்கும்.

பிடித்ததை செய்யுங்கள்

உங்களவருக்குப் பிடித்தமானதை அவர் எதிர்பாராத நேரத்தில் நீங்கள் செய்து அசத்திவிட்டால் அவர் மயங்கி விடுவார். தினமும் மனைவி எழுந்துதான் டீ போட்டுக் கொடுக்கவேண்டும் என்பதை மாற்றி நீங்கள் டீ போட்டுத் தரலாம். சமையல் வேலைகளில் உதவி செய்யலாம். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் விஷயங்களில் மனைவியோடு ஒத்துழைக்கலாம்.

நெருக்கம் அதிகரிக்கும்

இப்படி சின்னச்சின்ன விஷயங்களில் மனைவியுடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறே, கணவனுக்கு எது பிடிக்கும் என்பதைப் பார்த்துப் பார்த்து செய்யும்போது அதில் திருப்தியடைந்து போவதோடு சிக்கல்கள் மறைந்துவிடும். அவருக்குப் பிடிக்காது என்பதை நீங்கள் ஒருமுறை தெரிந்துகொண்டால் மறுமுறை அதை தவிர்த்துவிடலாம். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, மீண்டும் நேசிக்க ஆரம்பிக்கும் போது பிரச்சினைகள் மறைந்துபோகும்.