Home பாலியல் முதன்முறையாக உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கான அறிவுரைகள்

முதன்முறையாக உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கான அறிவுரைகள்

48

ஒவ்வொருவருக்கும் தங்கள் முதல் உடலுறவு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரு கற்பனை இருக்கும். முதன்முறை உடலுறவு பற்றிய தவறான பல கருத்துகளும் பல்வேறு அச்சங்களும் உள்ளன. பாலுறவு பற்றி ஒருவருக்கு உள்ள அறிவு, அவரது பின்புலம், துணைவருக்கு அதுபற்றி உள்ள அறிவு மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து, அது ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாகவும் இருக்கலாம் அல்லது சில நேரங்களில் வேதனையான ஒன்றாகவும் இருக்கலாம். சில சமூகங்களில் உடலுறவு என்பது அனுமதிக்கப்படாத பாவச்செயல் போன்று கருதப்படுவதால், பெண்கள் அதைப் பற்றி போதுமான அறிவைப் பெறுவது கடினமாக உள்ளது. திரைப்படங்கள் மற்றும் ரொமான்டிக் நாவல்கள் மூலமாக அவர்களுக்கு யதார்த்தமான தகவல்கள் கிடைப்பதில்லை. பெரும்பாலும் கற்பனை அல்லது மிகைப்படுத்திய தகவல்தான் கிடைக்கிறது.

உங்களின் முதல் உடலுறவு அனுபவத்தை கசப்பான ஒன்றாக அல்லாமல் மகிழ்ச்சிகரமான ஒன்றாக எப்படி மாற்றுவது என்பது பற்றி இப்போது பார்க்கலாம்:

தயார்படுத்திக்கொள்ளுதல் (Preparation)

முதல் முறையாக உடலுறவில் ஈடுபடும்போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் அதற்குத் தயாராக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். பெண்களுக்கு, உடலுறவு என்பது தங்களின் உடல் ஏக்கத்தைப்  பூர்த்திசெய்வதற்கான ஒரு வழிமுறை என்பதைவிட மேலான ஒன்றாகும். முதல் முறையும் ஒவ்வொரு முறையும் உடலுறவை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க, அவர்களுக்கு தங்கள் துணைவரிடமிருந்து நிறைய உணர்ச்சிரீதியான நிலைத்தன்மையும் ஆதரவும் தேவைப்படுகிறது.

ஒரு பெண்ணிற்கு, முதன்முறை உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் வழக்கமான வலியைச் சமாளிப்பதற்குப் போதுமான மனநிலை மற்றும் வயது முதிர்ச்சி இருக்க வேண்டும். சரியான துணைவரைக் கொண்டிருப்பதே அவர்களின் அச்சங்களைத் தவிர்த்து, பாலுறவை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதற்கான மன வலிமையைத் தரும். இது பெரும்பாலும் துணைவரைப் பொறுத்தே இருக்கிறது. துணைவர் மென்மையானவராகவும், தனது இன்பத்தை மட்டுமே முக்கியமாகக் கருதாமல், இருவருக்கும் இன்பம் கிடைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து புரிதலுடன் செயல்படுபவராக இருக்கவேண்டும். வாசனை மெழுகுவர்த்திகள், மங்கலான வெளிச்சம், சவுகரியமான படுக்கை போன்றவற்றைக் கொண்டு ரொமான்டிக் மனநிலையை வரவழைக்க வேண்டும் அது உடலுறவில் ஈடுபடும் இருவரின் மனநிலையையும் சிறப்பாக மாற்ற உதவும்.

பால்வினை நோய்கள் ஏற்படாமல் பாதுகாத்தல், கர்ப்பமடையாமல் தவிர்த்தல் ஆகியவற்றையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். எதிர்பாராத கர்ப்பத்தைத் தவிர்க்க, ஆணுறைகள் அல்லது உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தவும்.

வலி நிறைந்ததா? (Painful?)

பெண்களுக்கு, முதல் முறை உடலுறவில் ஈடுபடும்போது சிறிது வலி இருக்கக்கூடும், சிலருக்கு வலி ஏற்படுவதில்லை. உண்மையான வலியைவிட, அதைப் பற்றிய மிகைப்படுத்திய மூடநம்பிக்கைகளே அவர்களுக்கு அதிக பயத்தை ஏற்படுத்துகிறது. இந்த தவறான கருத்துகள் அவர்கள் மனதில் பதிந்துவிடுவதால், மனதளவில் அவர்கள் அனுபவித்து மகிழ விரும்பினாலும், உடல் அதற்கு இணங்க மறுத்து சிறிய ஸ்பரிசத்திலேயே உணர்ச்சிவசப்பட்டு உடலுறவில் ஈடுபடுவது மேலும் சிரமமாகிறது.

நீங்கள் தயாராகும் வரை, சவுகரியமாகும் வரை காத்திருந்து உடலுறவைப் பொறுமையாக கையாள்கிற புரிதலுள்ள ஒரு துணைவரின் பங்கு மிகவும் முக்கியமானது. போதுமான அளவு ஃபோர்ப்ளே செய்வது நீங்கள் ரிலாக்சாக உதவியாக இருக்கும், இதனால் முதல் முறை ஆணுறுப்பை நுழைக்கும்போது வலி குறைவாக இருக்கும். ஏனெனில் பிறப்புறுப்பு வறண்டிருப்பதே பொதுவாக வலிக்குக் காரணம்.

இந்த வலியானது, லேசாக விரலை நுழைக்கும்போது ஏற்படும் வலியைப் போன்றே இருக்கும். எனினும், பாலுறவின்போது அதிக வலி ஏற்பட்டால் அல்லது முதல் உடலுறவிற்குப் பிறகு சில நாட்களுக்கு வலி தொடர்ந்தால், உடனடியாக மருத்துவரைச் சந்தித்து முழுமையாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது முக்கியம், ஏனெனில் அந்த அதிக வலி என்பது வேறு ஏதேனும் பெரிய பிரச்சனையின் அடையாளமாகக் கூட இருக்கலாம்.

இரத்தப்போக்கு – எது சகஜம்? (Bleeding – what is normal?)

முதல் முறை உடலுறவில் ஈடுபடும்போது எல்லா பெண்களுக்கும் இரத்தக்கசிவு ஏற்படும் என்பது சரியான கருத்தல்ல. கன்னிச்சவ்வு கிழிவதால் பெண்களுக்கு இரத்தக்கசிவு ஏற்படுகிறது. எனினும் விளையாட்டுகளில் தீவிரமாக ஈடுபடுதல், சைக்கில் ஓட்டுதல், நீந்துதல் போன்ற பல விதமான இயல்பான நடவடிக்கைகளால் கூட இந்தக் கன்னிச்சவ்வு கிழியலாம், சில பெண்களுக்கு பிறப்பில் இருந்தே இந்த கன்னிச்சவ்வு இருப்பதில்லை. முதல் முறை உடலுறவின்போது வெளிர் சிவப்பு நிறத்தில், சிறிதளவு இரத்தம் வருவது சகஜம். அப்படி வரவில்லை என்றாலும் அது ஒரு பிரச்சனை இல்லை. இருப்பினும் உங்களின் முதல் உடலுறவிற்குப் பின்பு நீண்ட நேரம் இரத்தக்கசிவு தொடர்ந்தால் உங்கள் பிறப்புறுப்பு சுவர்களில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம், அவை நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கலாம். எனவே நீங்கள் உடனடியாக உங்கள் மருத்துவரைச் சந்திக்கவேண்டும். சில சமயங்களில், உங்கள் இரத்தக்கசிவு அடர் நிறத்தில் இருந்தால், அது கருப்பை வாய் அல்லது கருப்பையின் உட்பகுதியிலிருந்து வரலாம். அப்படி இருப்பின் உடனடியாக மருத்துவர் மூலம் ஆய்வுசெய்யப்பட வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் தங்கள் முதல் அனுபவம் தனித்துவமானது. வெற்றி அல்லது தோல்வி எதுவாக இருந்தாலும் அதற்கு தம்பதியர் இருவருமே பொறுப்பு. உங்கள் கற்பனைகளை உண்மையானதாக மாற்றி, முழு அனுபவத்தையும் என்றும் மறக்க முடியாத இனிய நினைவாக மாற்றுவதைத் தடுக்க எதுவும் இல்லை! மகிழ்ச்சி!