மனிதனின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்துவது முகம் தான். உடலிலும், உள்ளத்திலும் குறை ஏதும் உண்டானால் அதன் வெளிப்பாடும் முகத்தில் தெரியவரும்.
இன்றைய நாகரீக உலகில் முகத்திற்கு அழகு சேர்க்க சந்தையில் விற்கப்படும் பொருட்கள் ஏராளம்.
இப்படிப்பட்ட அழகு சாதன பொருட்களின் பகட்டு விளம்பரங்கள் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்துக் கொண்டு இருக்கிறது என்பதே உண்மை.
இந்த முக அழகு பொருட்கள் உடலுக்கு தீங்குகளை விளைவிக்கக் கூடியவை. இவற்றை வாங்கி உபயோகிப்பதன் மூலம் நாம் பணத்தையும் அழகையும் இழப்பதுதான் மிச்சம்.
ஆனால் இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வேதிப் பொருட்கள் கலப்பின்றி முகத்தையும், உடலையும் ஆரோக்கியம் பெறச் செய்யலாம்.
வறண்ட சருமத்திற்கு
வறண்ட சருமம் கொண்டவர்கள் கடல் உப்பை நீரில் கரைத்து முகத்தில் தேய்த்து இலேசாக மசாஜ் செய்து, பருத்தியினால் ஆன துணி கொண்டு முகத்தைத் துடைத்து, பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் வறண்ட சருமம் பொலிவு பெறும். 15 நாட்கள் இவ்வாறு செய்வது நல்லது.
முகம் பொலிவு பெற
தேன் – 1 ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு – 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் – 2 ஸ்பூன் இவற்றைக் கலந்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகம் பட்டுபோல் ஜொலிக்கும்.
எண்ணெய் பிசுக்கு உள்ள முகத்திற்கு
இன்றைய இளம் வயதினர் அனைவருக்கும் மன உளைச்சலைத் தருவது எண்ணெய் தோய்ந்த முகமும், முகப்பருவும் தான். எவ்வளவுதான் முகப்பவுடர் பூசினாலும் சிறிது நேரத்திலே முகம் எண்ணெய் வடிவது போல் ஆகிவிடும்.
இதற்கு நிரந்தரத் தீர்வு தேன் – 1 ஸ்பூன், முட்டை வெள்ளை கரு. இரண்டையும் ஒன்றாகக் கலந்து முகம் முழுவதும் பூசி சுமார் 20 நிமிடம் காயவைத்து பின் நன்கு குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் எண்ணெய் தோய்ந்த முகம் மாறி, முகம் பளிச்சிடும்.
எலுமிச்சம் பழச்சாறில் பப்பாளிப் பழத் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து முகம் கழுவி வந்தால் முகம் சுருக்கமின்றி பொலிவுபெறும்.
மாதுளம் பழத்தோலை காயவைத்து பொடி செய்து அதனுடன் கடுகு எண்ணெய் கலந்து குழைத்து மேனி எங்கும்பூசி குளித்து வந்தால் தோல் சுருக்கங்கள் மாறும்.