Home சூடான செய்திகள் ‘மார்பிங்’ செய்து நடிகைகளின் படங்களை வெளியிடுவது “கற்பழிப்பை விட கொடுமையானது” நடிகை ஹன்சிகா பேட்டி

‘மார்பிங்’ செய்து நடிகைகளின் படங்களை வெளியிடுவது “கற்பழிப்பை விட கொடுமையானது” நடிகை ஹன்சிகா பேட்டி

51

‘மார்பிங் செய்து நடிகைகளின் ஆபாச படங்களை வெளியிடுவது, கற்பழிப்பை விட கொடுமையானது’’ என்று நடிகை ஹன்சிகா கூறினார்.

பேட்டி

வருகிற 8-ந் தேதி, ‘உலக மகளிர் தினம்’ கொண்டாடப் படுவதையொட்டி, ‘தினத்தந்தி’ நிருபருக்கு நடிகை ஹன்சிகா பேட்டி அளித்தார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஹன்சிகா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பெண்ணாக பிறந்ததற்காக பெருமைப்படுகிறீர்களா, வருத்தப்படுகிறீர்களா?

பதில்:- மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பெண்கள் தான் நிறைய மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள். சமுதாயத்தை மாற்றி அமைப்பதில் உறுதியாக நிற்பவர்கள், பெண்கள் தான். பெண்களால் தான் ஒரு உயிரை கொண்டு வர முடியும். அதற்காக, ஒட்டுமொத்த பெண்களும் பெருமைப்படலாம். பெண்ணாக பிறந்ததற்காக வருத்தப்பட எதுவும் இல்லை.

துணிச்சல்

கேள்வி:- ஹன்சிகா துணிச்சல் மிகுந்த பெண்ணா, பயந்த சுபாவமா?

பதில்:- நான், பயந்த சுபாவம் அல்ல. துணிச்சலாக இருக்க வேண்டிய விஷயங்களில் துணிச்சலாகவும், பொறுமையாக இருக்க வேண்டிய விஷயங்களில் பொறுமையாகவும் இருக்கிறேன்.

கேள்வி:- யாரைப் பார்த்து பயப்படுவீர்கள்?

பதில்:- முதுகில் குத்துபவர்களுக்கு பயப்படுவேன். பல்லி மற்றும் கரப்பான் பூச்சிக்கும் பயப்படுவேன்.

பிடித்த பெண்

கேள்வி:- உலகிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த பெண் யார்?

பதில்:- எங்க அம்மா தான். நான், ஒரு பிரபல நடிகையாக இருப்பதற்கு அம்மா தான் காரணம். எங்க அண்ணன் பிரசாந்த் மும்பையில் உள்ள ஒரு மிகப்பெரிய விளம்பர நிறுவனத்தில் அதிகாரியாக இருப்பதற்கும் அம்மா தான் காரணம். எங்கள் இரண்டு பேரையும் சின்ன வயதில் இருந்து கஷ்டப்பட்டு வளர்த்தவர், அம்மாதான். இன்று நாங்கள் ஒரு அந்தஸ்தில் இருப்பதற்கும் அம்மாவே காரணம்.

கேள்வி:- பெண்கள் சமுதாயத்துக்கு நீங்கள் செய்ய நினைப்பது என்ன?

பதில்:- பெண்களுக்கு மரியாதை கிடைக்கிற மாதிரி நடந்து கொள்வதே பெண்கள் சமுதாயத்துக்கு செய்யும் சேவைதான். ஒரு பெண் வீட்டை மட்டும் கவனித்துக் கொள்ளாமல், சமுதாயத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். சமுதாயத்துக்கு தேவையான அன்பையும், அரவணைப்பையும் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று கருதுகிறேன். அது, பெண்களால் மட்டுமே முடியும்.

ஆண்களிடம் பிடித்தது…

கேள்வி:- ஆண்களிடம் உங்களுக்கு பிடித்தது என்ன, பிடிக்காதது என்ன?

பதில்:- பெண்களை மதிக்கும் ஆண்களை பிடிக்கும். பெண்களுக்கு சுதந்திரம் கொடுப்பவர்களை பிடிக்கும். பெண்களை அடிமைகளாக நடத்தும் ஆண்களை பிடிக்காது. ஆண்களின் தன்னம்பிக்கை பிடிக்கும். நம்மால் தான் முடியும் என்ற ஆண்களின் கர்வம் பிடிக்காது.

கேள்வி:- ஒரு பிரபல நடிகையாக இருப்பதில் உள்ள சாதகம்-பாதகம் என்ன?

பதில்:- வாழ்க்கையில் மற்றவர்களுக்கு இல்லாத பெயரும், புகழும் நடிகைகளுக்கு கிடைப்பதை சாதகமாக கருதுகிறேன். நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை சில சமயங்களில் பாதிக்கப்படுவதை பாதகமாக கருதுகிறேன். ஒரு பிரபலம் என்பதால், அதை சகித்துக்கொண்டுதான் போக வேண்டும்.

சின்ன குஷ்பு

கேள்வி:- உங்களை, ‘சின்ன குஷ்பு’ என்று சொல்கிறார்கள். குஷ்புவை போல் நீங்களும் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவீர்களா?

பதில்:- எனக்கு அரசியல் வேண்டாம். சினிமா மட்டுமே போதும். அரசியல் எனக்கு புரியாது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்பு. 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ‘ஜிம்.’ அதன்பிறகு சந்தோஷமாக தூங்குகிறேன். இந்த வாழ்க்கை போதும். அரசியலுக்கு வந்து தான் சேவை செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மும்பை அருகில் உள்ள வாடாவில் ஆதரவற்றோருக்கும், முதியோருக்கும் இல்லம் கட்டி வருகிறேன். சினிமாவில் நடித்து கிடைக்கும் சம்பளத்தில் ஆதரவற்றோரையும், முதியோரையும் கவனித்துக் கொள்வது, நிம்மதி அளிக்கிறது.

தண்டனை

கேள்வி:- ‘மார்பிங்’ செய்து நடிகைகளின் ஆபாச படங்களை வெளியிடுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

பதில்:- மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் இது. சினிமாவில் நாங்கள் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. 365 நாட்களும் கஷ்டப்பட்டு உழைத்து, மற்றவர்களை சந்தோஷமாக வைத்து இருக்கிறோம். எங்களை இழிவுபடுத்துவதற்கு எப்படி மனசு வருகிறது என்று புரியவில்லை. இது, கற்பழிப்பை விட கொடுமையானது. எங்கள் மனதை புண்படுத்துகிறவர்களை கடவுள் தான் தண்டிக்க வேண்டும்.

புகார்?

கேள்வி:- இந்த பிரச்சினையில் சிக்கிய நீங்கள் ஏன் காவல் துறையிலும், நடிகர் சங்கத்திலும் புகார் செய்யவில்லை?

பதில்:- அந்த படத்தில் இருப்பது நான் அல்ல என்று எல்லோருக்கும் தெரியும். பின்னர் ஏன் புகார் செய்ய வேண்டும்?’’

இவ்வாறு ஹன்சிகா கூறினார்.