Home ஆரோக்கியம் மாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்

மாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்

22

Captureஇன்றைய தேதியில் மாரடைப்பும் பக்கவாதமும் மோசமான உடல் பாதிப்புகளையும் இறப்பையும் ஏற்படுத்தும் முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. இவை வராமல் இருப்பதற்கு, வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு 8 முக்கிய உத்திகள் கூறப்படுகின்றன. அவற்றைச் சுருக்கமாகப் பார்க்கலாம்:

புகை பிடிக்காதீர்

புகையிலைப் புகையில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் உள்ளன. இதில் பெரும்பாலான வேதிப்பொருட்கள் இதயத்துக்கும் மூளைக்கும் ரத்தத்தைக் கொண்டுசெல்லும் ரத்த நாளங்களையும் இதயத்தையும் பாதிக்கக் கூடியவை. மாரடைப்பும் பக்கவாதமும் வரும் அபாயத்தைக் குறைப்பதற்காக ஒருவர் செய்யக்கூடிய மிகச் சிறந்த செயல், புகைபிடிக்காமல் இருப்பதுதான்.

கொழுப்பைக் கட்டுப்படுத்துங்கள்

கொழுப்பு நிறைந்த உணவு, ரத்தத்தில் கொழுப்பையும் கொலஸ்டிராலையும் அதிகரிக்கச் செய்து, நாளம் கடினமாதலை (அதாவது நாளங்களில் கொழுப்பு படிதல்) உருவாக்குகிறது. மருந்துகள் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவை கட்டுப்படுத்தினாலும், ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுடன் தொடர் உடற்பயிற்சியும் இணைந்தால் மட்டுமே, அது உடலுக்குப் பாதுகாப்பு அரணை உருவாக்கித் தரும்.

அன்றாடம் உடற்பயிற்சி

வழக்கமாக உடற்பயிற்சி செய்தால், உடல் உருவத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அது மட்டுமல்லாமல் உட்கார்ந்தே வேலை செய்பவர்களைவிட மாரடைப்பு வரக்கூடிய அபாயம், உடற்பயிற்சி செய்பவர்களுக்குப் பாதியளவே இருக்கிறது.

வழக்கமாக உடற்பயிற்சி செய்வது இதயநோய், புற்றுநோய் உள்ளிட்ட எல்லாப் பிரச்சினைகளிலிருந்து மட்டுமல்லாமல், மரணத்தின் அபாயத்தையும் குறைக்கிறது. அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்வதன்மூலம், நம்மைவிட 10 20 வயது இளமையான உடற்பயிற்சி செய்யாதவரோடு ஒப்பிடக்கூடிய அளவுக்கு உடல் தகுதித் திறன் அளவை அடைய முடியும்.

ஆரோக்கியமான உடல் எடை

உடல் அதிக எடையுடன் இருப்பது ரத்த மிகை அழுத்தம், இதயநாள நோய் அல்லது நீரிழிவு வரும் சாத்தியத்தை அதிகரிக்கிறது. உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலமாக உடல் எடையைக் குறைக்க முடியும்போது, கூடவே ரத்த அழுத்தத்தைக் குறைத்து, கொலஸ்டிரால் அளவுகள் மேம்பட்டு, மாரடைப்பு அல்லது பக்கவாதம் வரும் அபாயமும் குறையும் வாய்ப்பு உண்டு.

நார்ச்சத்துள்ள உணவு

தானியங்கள், பயறுகள் (பருப்புகள், உலர்ந்த பட்டாணிகள், அவரை வகைகள்), பழங்கள், காய்கறிகள், ஆகியவற்றில் இரண்டு வகையான உணவு நார்ச்சத்துகள் உள்ளன ஒன்று கரையாதது, மற்றொன்று கரையக்கூடியது. கரையாத நார்ச்சத்து பெரும்பாலும் முழு தானியங்களில் உள்ளது. இவை மலச்சிக்கலையும், குடல் அழற்சியால் உணவுப் பாதையில் தோன்றும் பைவடிவக்கட்டிகள் (டைவர்டி குளோசிஸ்) உருவாவதையும் தடுக்க உதவுகிறது. அத்துடன் கூடுமானவரை குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது. ஓட்ஸ், உலர்ந்த பயறுகள், அவரைகள், (ஆப்பிள், ஆரஞ்சு, பம்ளிமாஸ் போன்ற) பழங்கள் போன்றவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது ரத்தக் கொலஸ்டிரால் அளவை குறைக்க உதவும். மேலும், அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்த உணவை உண்பது, உடல்பருமன் ஆவதைக் குறைப்பதற்கான சாத்தியத்துடன் தொடர்புடையது.

ஆன்டி ஆக்சிடண்டு உணவு

உடல் செல்களில் ஏற்படும் ஆக்ஸிஜன் சேதம் (ஆக்ஸிடேஷன்), மூப்படையும் பாதிப்புகளையும் சில நோய்கள் தோன்றுவதற்கும் ஓரளவுக்குக் காரணமாக இருக்கிறது. நாளங்களில் உள்ள செல்கள் மிக எளிதாகக் கொழுப்புகளையும் எல்.டி.எல் (கெட்ட) கொலஸ்டிராலையும் உறிஞ்சச் செய்யும் இயல்பான வேதி செயல்பாடே ஆக்ஸிடேஷன். ஆக்ஸிஜன் சேதம் நாளங்களில் கொழுப்புப் படிவு ஏற்படுவதை விரைவுபடுத்தி, அதன் விளைவாக உடலில் உருவாகும் ஆன்டி ஆக்சிடண்டுகளும் (ஆக்ஸிஜன் இணைவு எதிர்ப்பி) சில வகை உணவில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடண்டுகளும் இந்தச் சேதத்தை ஓரளவுக்குத் தடுக்கின்றன.

ரத்த அழுத்தத்தைக் கண்காணியுங்கள்

மாரடைப்போ பக்கவாதமோ ஏற்படுவதற்கு முக்கியமான அபாயக் காரணி, ரத்த மிகை அழுத்தம். அதனால் ரத்த அழுத்தத்தைக் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது அடிக்கடி சோதித்துப் பார்ப்பது நல்லது. இது மருத்துவ நிலை, உடல்நிலை, குடும்பத்தின் மருத்துவ வரலாறு போன்றவற்றையும் பிற அபாயக் காரணிகளைப் பொறுத்தும் அமையும். ஒருவருக்கு ஏற்கெனவே ரத்த மிகை அழுத்தம் இருந்தால், ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே சோதித்துக் கொள்ளலாம். ரத்த அழுத்தத்தை அளக்க உதவும் ரத்த அழுத்தமானி, மருத்துவப் பொருட்கள் விற்கும் கடைகளில் அல்லது மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

மன அழுத்தக் கட்டுப்பாடு

ஒருவருக்கு இதயநாள நோய் உருவாவதில், உளவியல் ரீதியான அழுத்தம் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைச் சோதிப்பதற்கு மிகக் குறைவான ஆய்வுகளே இருக்கின்றன. பிரச்சினையின் ஒரு பரிமாணம் என்னவென்றால், மனஅழுத்தத்தை அளப்பதும் வரையறுப்பதும் கடினமான விஷயம். ஒருவருக்கு மனஅழுத்தத்தை விளைவிக்கும் ஒன்று, மற்றவருக்கு உற்சாகமூட்டுவதாக அமையலாம்.

இது குறித்து மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றாலும், இதயநாள நோய் உருவாவதில் மனஅழுத்தம் ஒரு முக்கியக் காரணியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பல்வேறு இதயநோய் மறுவாழ்வுத் திட்டங்களில், மனஅழுத்தத்தை நிர்வகிப்பது அல்லது கட்டுக்குள் வைத்திருப்பது ஒரு முக்கியமான கருவியாகப் பயன்படுத்தப்படுவதைக் கவனிக்க வேண்டும்.