Home பாலியல் மாதவிலக்குக்கு முன்பான நோய்க் குறித் தொகுதி

மாதவிலக்குக்கு முன்பான நோய்க் குறித் தொகுதி

22

பெண்களுக்கு மாதத்தின் எல்லா நாட்களும் ஒரே மாதிரியான மனநிலை இருப்பதில்லை. குடும்பத்திலோ, வேலையிடத்திலோ பெரிய பிரச்னைகள் இருக்காது. ஆனாலும் மனதில் இனம்புரியாத பதற்றம், எரிச்சல், கோபம், சோர்வு போன்றவை தென்படும்.

இந்த திடீர் மன மாற்றங்களின் பின்னணியில் ‘ப்ரீ மென்ஸ்டுரல் சின்ட்ரோம்’ எனப்படுகிற மாதவிலக்குக்கு முன்பான நோய்க் குறித் தொகுதிப் பிரச்னை காரணமாக இருக்கலாம். ஆங்கிலத்தில் சுருக்கமாக பி.எம்.எஸ் எனச் சொல்கிற இதன் பிற அறிகுறிகள், சிகிச்சைகள் வராமல் தவிர்க்கும் வழிமுறைகள் என சகலத்தையும் பற்றிப் பேசுகிறார் பொது மருத்துவர் நிவேதிதா.

‘‘ப்ரீ மென்ஸ்டுரல் சின்ட்ரோம் ”உண்டாக முக்கிய காரணம் ஹார்மோன் கோளாறுகள். செரட்டோனின் என்கிற ஹார்மோனுக்கு எதிராக பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களே இதற்குக் காரணம். நமது மூளையில் அதிகம் காணப்படுகிற செரட்டோனின், மனச்சோர்வு நோயுடனும், மனநல அறிகுறிகளுடனும் இணைந்து காணப்படுகிறது. அதனால்தான் சில பெண்களுக்கு மாதவிலக்கு வருவதற்கு சில நாட்கள் முன்பு, மனச்சோர்வு அதிகரிக்கிறது.

சோகம், சிடுசிடுப்புத் தன்மை, பதற்றம், மன அழுத்தம், எதிலும் கவனம் செலுத்த முடியாமை, சோர்வு, மறதி, உணவுக்கு ஏங்குதல் என மனத்தளவில் மட்டுமின்றி, இந்த பி.எம்.எஸ் பாதிப்பானது உடல் அளவிலும் மாற்றங்களைக் காட்டும். அதாவது, உடலில் நீர்த் தேக்கம், எடை அதிகரிப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், மார்பகங்களில் வலி, கை, கால்களில் வீக்கம் மற்றும் வலி, மயக்கம், வாந்தி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், தலைவலி, வயிற்றுவலி, பின்முதுகுவலி, சரும நோய்கள் போன்றவையும் இருக்கலாம்.

ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு வருவதற்கு முன், இந்த அறிகுறிகளில் எல்லாவற்றையும் அல்லது சிலதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது சிறந்தது. அவரது ஆலோசனையுடன், வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களைப் பின்பற்றுதவன் மூலம் குணமடையலாம். தவிர, எடையை ஒரே சீராக வைத்திருக்கவும். குறைந்த அளவுகளில் 5 வேளைகளாக உண்ணவும்.உணவில் உப்பின் அளவைக் குறைக்கவும் (அதன் மூலம் நீர்த்தேக்கம் குறையும்).

காபியை தவிர்க்கவும். இது சிடுசிடுப்புத் தன்மை மற்றும் மார்பக வலியைப் போக்கும். கால்சியம் உள்ள உணவுகள் அவசியம். கொழுப்பு நீக்கிய பால் குடிக்கலாம். கால்சியம் உணவுகள் ஒத்துக் கொள்ளாத போது, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சப்ளிமென்ட்டுகள் எடுத்துக் கொள்ளலாம்.நடைப் பயிற்சி, மிதமான ஓட்டம், கருவிகள் தேவைப்படாத உடற் பயிற்சிகள் போன்றவற்றை வாரத்தில் 3 – 4 நாட்களுக்குச் செய்யலாம்.மாதவிலக்குக்கு முன் ஏற்படும் இந்த அறிகுறிகளைக் குறித்து வையுங்கள். அவை குறுகிய காலத்திற்கு மட்டுமே தென்படுகின்றனவா, பொறுத்துக் கொள்ளும் அளவுக்கு இருக்கின்றனவா எனப் பாருங்கள்.

இந்த நோயைக் கண்டறிய பரிசோதனைகள் ஏதும் கிடையாது. எனவே, நீங்கள் குறித்து வைக்கிற தகவல்களின் பேரில்தான் இதை மருத்துவர் உறுதி செய்ய வேண்டும்.உங்களுக்கு ஏற்படுகிற உடல், மனமாற்றங்கள் அன்றாட வேலைகளையே செய்யவிடாத அளவுக்குத் தீவிரமாக இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பாருங்கள்.மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பாரசிட்டமால் மாத்திரையுடன் மெஃபனமிக் ஆசிட் மாத்திரையும் எடுத்துக் கொள்வதன் மூலம் வயிற்று, இடுப்பு மற்றும் மார்பக வலிகளில் இருந்து நிவாரணம் பெறலாம்…’’ என்கிறார் பொது மருத்துவர் நிவேதிதா.