Home பாலியல் மாதவிடாய் சுழற்சியில் கர்ப்பப்பையில் ஏற்படும் மாற்றங்கள்

மாதவிடாய் சுழற்சியில் கர்ப்பப்பையில் ஏற்படும் மாற்றங்கள்

64

மாதவிடாய் சுழற்சி என்பது பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில், சுழற்சி முறையில் சீரான இடைவெளியில் நடைபெறும் மாற்றங்களைக் குறிக்கும். மாதவிடாய் சுழற்சி பொதுவாக 28 நாள்களுக்கு நடைபெறும். ஆனால், அது இயல்பாகவே பல்வேறு காரணங்களால் 20 முதல் 40 நாள்களுக்குள் நடைபெறும்.

கர்ப்பப்பையில் ஏற்படும் மாற்றங்கள்…

மாதவிடாய் சுழற்சியில் கர்ப்பப்பையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகம். அவை மூன்று கட்டடங்களாக நடைபெறும்.

வளரும் நிலை

இது மாதவிடாய் ரத்தப்போக்கு நின்ற நாள்முதல், சினைமுட்டை வெளிப்படுதல் (Ovulation) நடைபெறும் நாள் வரை நீடிக்கும் (பொதுவாக 4-ம் நாள் முதல் 14-ம் நாள் வரை). அண்டகத்தில் இருந்து (Ovary) வெளிப்படும் ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன், கர்ப்பப்பையின் சுவரை வளர்ச்சியடையச் செய்யும். இந்த ஹார்மோன் கர்ப்பப்பையின் சுவருக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, 1 மி.மீ ஆக இருந்த சுவரை 4 மி.மீ அளவுக்குத் தடிமனாக்கும்.

சுரக்கும் நிலை

இது மாதவிடாய் சுழற்சியின் இறுதி 14 நாள்களுக்கு நீடிக்கும். சினைமுட்டை வெளிப்பட்ட பின்னர், கார்பஸ் லூட்டியம் (Corpus luteum) அண்டகத்தில் உருவாகி, புரோஜெஸ்ட்ரான் என்னும் ஹார்மோனைச் சுரக்கும். இதுவும், சிறிய அளவில் வெளிப்படும் ஈஸ்ட்ரோஜெனும் சேர்ந்து கர்ப்பப்பை சுவரை மேலும் தடிமனாக மாற்றும். இறுதியாக கர்ப்பப்பை சுவரின் மொத்த அளவு 6 மி.மீ. என்ற அளவுக்கு இருக்கும்.

மாதவிடாய் நிலை

கருவுறுதல் நடக்காதபோது அண்டகம் (ovary) ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்திவிடும். ஹார்மோன்கள் இல்லாததால் கர்ப்பப்பை சுவருக்குச் செல்லும் ரத்த ஓட்டம் நிறுத்தப்படும், இதனால் கர்ப்பப்பையின் சுவர் செல்கள் இறந்து அழிவுக்கு உட்படுத்தப்படும். இறந்த கர்ப்பப்பை சுவர் செல்கள், ரத்தம் மற்றும் திசு திரவம் இணைந்து வெளியேறும். இப்படி வெளியேறும் திரவம்தான் `மாதவிடாய்’ எனப்படும்.

இந்த நிலை மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு நடைபெறும்.

இந்தச் சுழற்சி மீண்டும் முதலிலிருந்து தொடங்கும்.