மாதவிலக்கு ஏற்படும்போது வருகிற வயிற்று வலியை டிஸ்மெனரியா (dysmenorrhea) என்கிறோம். மாதவிலக்கு நாட்களுக்கு முன்போ, மாதவிலக்கின் இரண்டாவது நாளோ, மாதவிலக்கின் 5 நாட்களுக்குமோ இந்த வலி ஏற்படும்.
படுத்த நிலையில் வயிற்றுப் பகுதிக்கு சூடான ஒத்தடம் கொடுக்கலாம். அடிக்கடி நாப்கின்களை மாற்றியாக வேண்டும். பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கின் போது முதல் 2 நாட்களில் லேசான வலி ஏற்படுகிறது. 10 சதவிகிதப் பெண்களுக்கு அந்த வலி கடுமையாக இருக்கிறது. இவர்களுக்கு இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்படுவதால் மருத்துவம் தேவைப்படுகிறது.
சிலருக்கு இதுபோன்ற வயிற்றுவலியுடன் வாந்தி, மயக்கம் போன்றவையும் காணப்படும். இதனால் அவர்களுக்கு அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்படலாம். சிலருக்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லாமலேயே மாதவிடாயின் போது வயிற்றுவலி (Primary Dysmenorrhea)ஏற்படலாம். இதற்கு மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து அதற்கான மருந்துகளை உட்கொள்ளலாம்.
இளம்பெண்களுக்கு ஏற்படும் பிரைமரி டிஸ்மெனரியாவில் கர்ப்பப்பை உள் சுவரில் இருந்து வெளியேறும் ஹார்மோன் விடுவிக்கப்பட்டு வெளியே வரும்போது வலி உண்டாகும். பிறவியிலேயே கர்ப்பப்பை வளர்ச்சி குறைவு, இரட்டை கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய் உருவாகாமல் இருப்பது மாதிரியான வளர்ச்சிக் குறைபாடு இருக்கும் பெண்கள், பருவமடையும் போது கர்ப்பப்பையில் இருந்து வெளியே வரும் உதிரம் சரியாக வர முடியாமல் கர்ப்பப்பை உள்ளேயே தேங்கும் நிலை ஏற்படலாம்.
இதனால் ஒவ்வொரு மாதவிலக்கின் போதும் அதிகமான வலி ஏற்படலாம். சில இளம்பெண்களுக்கு மாதவிலக்கு வலி வந்தும், உதிரம் வெளியே தெரியாமல் வெள்ளைப்படுதல் போன்ற நிகழ்வும் இருக்கலாம். அது அவர்களுக்கு கர்ப்பப்பை வளர்ச்சி குறைபாடு உள்ளதற்கான அறிகுறியாக இருக்கலாம். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு லேப்ராஸ்கோப்பி மூலமும் ஹைமனக்டமி (Hymenectomy) என்ற அடிவழி சிகிச்சை மூலமும் தீர்வளிக்கலாம்.
வலிக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை சரி செய்தாலே, இந்தப் பிரச்சனை சரியாகும். இளம் சூடான தண்ணீரில் குளிப்பதும், மிதமான உடற்பயிற்சிகளும் கூட வலியைக் குறைக்கும். இவற்றையும் மீறி, மாதவிலக்கின் போதான வலி மிகக் கடுமையாகவும், வாந்தி, குமட்டல், காய்ச்சல் போன்றவை 3 நாட்களுக்கும் மேல் தொடர்ந்தால் அலட்சியப்படுத்தாமல், மருத்துவரைக் கலந்தாலோசிப்பதே பாதுகாப்பானது