Home ஆரோக்கியம் மழைக்கால நோய்களில் இருந்து தப்பிக்கும் வழி

மழைக்கால நோய்களில் இருந்து தப்பிக்கும் வழி

24

1_2132891fஇன்னும் மழை தொடர வாய்ப்பு இருக்கிறது. இப்போது தான் கவனமாக இருக்க வேண்டும். நோய்களுக்கு கொண்டாட்டமான காலம் இதுதான்.

சாதாரணமான சளிக் காய்ச்சலில் இருந்து உயிரை காவு வாங்கும் டெங்கு காய்ச்சல் வரை வந்து போகும். நோய்க்கிருமிகள் குதூகலமாக வளர இந்த ஈரப்பதம் பொருத்தமாக இருக்கும். கொசுக்களும், ஈக்களும் போட்டி போட்டு தங்கள் குடும்பங்களை பெருக்கிக் கொள்ளும். மழைக்கால நோய்களில் முன்னணியில் இருப்பவை ஜலதோஷமும், இருமலும்தான். இன்ப்ளுயன்சா என்ற வைரஸ் கிருமிதான் இதற்கு காரணம். ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், பாதுகாப்பற்ற குடிநீர் போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம், இது வராமல் தவிர்க்கலாம்.

மீறியும் வந்தால் மூச்சுப் பயிற்சி, ஆவி பிடிப்பது போன்றவற்றை செய்து விரட்டலாம். ஜலதோஷத்திற்கு அடுத்த படியாக நுரையீரல் பிரச்சினை மழைக்காலங்களில் அதிகமாக இருக்கும். குளிர்ந்த காற்றை தொடர்ந்து சுவாசிப்பதால் இது ஏற்படும். நெஞ்சில் சளி கட்டிக் கொள்ளும். முதியவர்களையும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லா குழந்தைகளையும் அதிக அளவு பாதிக்கும்.

சைனஸ் பிரச்சினையும் தொற்றிக்கொள்ளும். எல்லா இடங்களிலும் மழைநீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் செழிப்பாக வளரும். அவற்றின் மூலம் பரவும் மலேரியா, டெங்கு போன்றவை உயிரை பறிக்கக் கூடியவை. அதனால் கொசுக்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ‘மெட்ராஸ்-ஐ’ என்ற கண் வீக்க நோயும் இந்த மழைக்காலங்களில் தான் அதிகம் பரவும். குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் வயிற்றுப் போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதை தவிர்க்க வெளி உணவுகளை தவிர்த்து மூன்று வேளையும், புதிதாக சமைத்த உணவை மட்டுமே உண்ண வேண்டும். அலுவலகம் செல்பவர்கள், 5 மணி நேரத்திற்குள் சமைத்த உணவை சாப்பிட்டுவிட வேண்டும். பழங்கள் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். அதற்காக தெருவோரங்களில் நறுக்கி விற்கப்படும் சாலட்டுகள் நல்லதல்ல. அதில் நோய் தொற்று ஏற்படலாம். கவனமாக இருப்பதே, மழைக்கால நோய்களில் இருந்து தப்பிக்கும் வழி.