பதில்
ஒரு வீட்டில் சந்தேகம் முன் வாசலால் வந்தால் சந்தோஷம் பின் வாசலால் போய்விடும். ஆம்! இன்று சந்தேகம் என்ற மன வியாதி சமூகத்தில் நிலவி வரும் ஒரு விஷ கிருமி. அது ஊடுருவி உயிரையே கொன்றுவிடும். அதிலும் சந்தேகம், கணவன், மனைவி விடயத்தில் வரவே கூடாது. இன்று பெரும்பாலான தம்பதிகளிடம் நிலவும் விடயமாக இது இருக்கிறது.
ஒரு ஒரு கணவன் மனைவி மீதோ, மனைவி கணவன் மீதோ வீணான சந்தேகங்களை உண்டாக்கி கொள்வது குடும்ப வாழ்விற்கு பெரும் ஆபத்தாக அமையும். இல்லற வாழ்க்கையில் சந்தேகம் என்பது தம்பதியருக்கு இடையில் ஏற்படவே கூடாது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். கணவரிடம் மனைவிக்கோ மனைவியிடம் கணவருக்கோ சந்தேகம் ஏற்பட்டால் அந்த வீட்டில் ஷைத்தான் குடியேறிவிடுவான் என்கின்றனர் சான்றோர்கள்.
இதன் மூலம் பரஸ்பர அன்பு, புரிந்துணர்வு எல்லாமே போய்விடும். பரஸ்பர அன்பு, புரிந்துணர்வு இல்லாத ஒரு குடும்ப வாழ்க்கை, சிறந்த குடும்ப வாழ்க்கையாக இருக்காது. சந்தேகங்கள் உருவாகாமல் இருவரும் நடப்பதும் மிக முக்கியம். எந்த விடயத்தையும் மனம் விட்டு பேசுவதும், ஒளிவு மறைவுகள் இல்லாமல் நடப்பதும் மிக நன்மையாகும்.
இந்த சந்தேகத்தால் இன்று எத்தனை குடும்பங்கள் பிரிந்து நீதிமன்ற வாசல்களில் நிற்கிறது. இதனால் குழந்தைகளின் எதிர்காலமும் மிகவும் பாதிக்கப்படுகிறது. ஒரு மனைவி தன் கணவனுக்கு தெரியாமல் ஒரு காரியத்தை செய்வது கூடாது. கணவனின் அனுமதியோடு எந்த காரியத்தையும் செய்தால் அதில் பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்காது. அதுபோல் ஒரு கணவனும் தன் மனைவிக்கு தெரியாமல் காரியங்கள் செய்வது, நடப்பது கூடாது.
சந்தேகம் என்பது ஒரு வகையான மனநோய். இந்த நோய் காரணமாக பிளவுபட்ட குடும்ப உறவுகள் சிதைந்து போய் கொண்டு இருக்கிறது. இந்த மன நோய்க்கு உள்ளானவர்கள் மற்றவர்களையும் அந்த நோய்க்கு உட்படுத்தி விடுவார்கள்.
இது மற்றவர்களை விட அழகு, பதவி என்று வரும் பொழுது ஏற்ற தாழ்வில் ஏற்படும் மன வியாதி. இந்த சந்தேக வியாதி எப்படிபட்டதென்றால், ஒரு கணவன் தான் மனைவியை சந்தேக கண்கொண்டு பார்க்கும் பொழுது அது அவளது தந்தை, சகோதரன், மகன் என்னும் உறவுகளை கூட கொச்சைப்படுத்தி விடுகிறது. இது அவளை தாழ்வு மனப்பான்மையை கூட உருவாக்க வழிவகுக்கிறது. அதுமட்டும் இல்லை தற்கொலைக்கு கூட இட்டு செல்கிறது.
பெரும்பாலான பெண்கள் (கணவன் அழகாகவோ உயர்ந்த பதவியில் இருந்தாலோ இது அதிகரிக்கும்) தன்னை விட்டு வேறு ஒரு பெண்ணை நாடிவிடுவானோ என்ற வீணான அச்சங்கள் காரணமாக இது வருகிறது.
கணவன் மீது அல்லது கணவன் மனைவி மீது சந்தேகப்படுவது வழக்கமாக நடக்கும் விஷயம்தான். ஆனால் இது உடனடியாக தடுக்கப்படாவிட்டால் பெரும் விபரீதத்தை உண்டாக்கும்.
தனது சந்தேகத்தை நேரடியாக தான் வாழ்க்கை துணையிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்பவர்கள் ஒரு ரகம், அதில்லாமல் அவர்களுக்குத் தெரியாமல் துப்பறிந்து பல்வேறு தவறான தகவல்களை சேகரித்து சண்டை போடுபவர்கள் இரண்டாவது ரகம். இதில் ரெண்டுமே தவறுதான். தொடர்ந்து சந்தேகக் கேள்விகள் கேட்பதும் சரி, நம்மை துப்பறிகிறார் என்ற எண்ணமும் சரி துணையின் மீது ஒரு வித அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்திவிடும். கணவரோ, மனைவியோ சந்தேகப்பட்டால் அவர்களுடன் அமர்ந்து பேசி , தங்களது அன்பையும், ஒழுக்கத்தையும் விளக்கி புரிய வைக்க வேண்டியது அவசியம்.
கணவன், மனைவி என்பவர்கள் திருமண பங்காளிகள். ஒரு பங்காளி மற்றொரு பங்காளியிடம் ஒளிவுமறைவு இல்லாமல் நீதமாக நடந்தாலே அந்த வியாபாரம் சிறக்கும். இதுபோலவே கணவன், மனைவி சந்தேகங்களுக்கு இடம் வகுக்காமல் நல்ல பரஸ்பர புரிந்து உணர்வுகளுடன் நடப்பது திருமண வாழ்விற்கு சிறப்பாக அமையும். குடும்ப வாழ்வு இறைவனின் அன்பின் சின்னம். அது இந்த சந்தேகங்களால் உடைந்திடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கணவன் மனைவிக்கு உண்டு.
நம்பிக்கைதான் வாழ்க்கை எனவே வாழ்க்கைத்துணையை நம்புங்கள். அப்புறம் உங்கள் இல்லத்தில் எப்போதும் மகிழ்ச்சி குடிகொள்ளும்.