ஆண், பெண் என்ற பிரிவெல்லாம் இப்போது போயே போச்சு! ஆணுக்குரிய அனைத்து வேலைகளையும் பெண்கள் செய்கின்றனர். ஆனால் பெண்ணுக்குரிய அனைத்து குணங்களையும் ஆண்கள் பெற்றிருக்கின்றனரா என்றால் அதுதான் இல்லை என்கிறது ஒரு உளவியல் ஆய்வு.
எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையையும் தனக்கு ஏற்றாற்போல் மாற்றிவிடும் பக்குவமும், திறமையும் பெண்களுக்கு மட்டுமே உண்டு. யாரையும் பார்த்த மாத்திரத்தில் அவர்களின் குணங்களை ஓரளவு புரிந்து விடும் ஆற்றலும் அவர்களுக்கு உண்டு. மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வசீகரமும் பெண்களிடம் இருந்தால் இன்னும் சிறப்பு.
அழகும், அறிவும், அடுத்தவர்களை புரிந்து கொள்ளும் குணங்களும், நல்ல பழக்க வழக்கங்களும் உள்ள பெண்களுக்கு எப்போதுமே முன்னேற்றம் என்பது தொட்டு விடும் தூரம்தான். அப்படி வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முன்னேறும் ஸ்மார்ட் பெண்களின் சிறப்புக் குணங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்,
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 18 முதல் 33 வய துக்குரிய பெண்களிடம், ‘எப்படிப்பட்ட ஆண்களைப் பிடிக்கும்’ என்ற கேள்விக்கு நான்கு குணங்களை கொண்ட ஆண்களைப் பிடிக்கும் என்று பதில் கூறினர்.
அவர்கள் கூறிய நான்கு குணங்கள், குழந்தைகள் மீதான விருப்பம், ஆண்மைக்குரிய விஷ யங்கள், உடல் ரீதியான கவர்ச்சி, கருணை உள்ளம் இவையே பெண்கள் ‘டிக்’ செய்த குணங் கள். இயல்பாகவே குழந்தைகளுக்கு பெண்கள் என்றால் மிகவும் விருப்பமான விஷயம். அதே குணம் ஆண்களுக்கும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மேலும் நீண்ட நேரம் ரொமான்ஸ் செய்யும் ஆண்களையும் பெண்களுக்கு பிடித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆர்ப்பாட்டமில்லாத ஆண்களையே பிடிக்குமாம்!
நிர்வாகத் திறன் என்பது பெண்களுக்கு இயல்பாகவே அமைந்துள்ளது. குடும்ப நிர்வாகம், அலுவலக நிர்வாகம் மற்றும் தொழில் நிர்வாகம் என்பது பொறுமை குணத்துடன் செயல்படும் பெண்களுக்கு கடவுள் கொடுத்த வரம் என்றும் சொல்லலாம்.
தலைமைப் பண்புக்குரிய குணங்களான பணிவு, துணிவு, கனிவு என மூன்றும் ஒருங்கே அமைந்துள்ளதால் பெண்கள் தலைமையை பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்றுக் கொள்கின்றன. இதை நீங்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள நிறுவனங்களில் கண்கூடாக பார்க்கலாம்.
பெண்கள் பார்வை என்பது மிகவும் கூர்மையானது என்கிறார்கள் கணவன்மார்கள். அவர்கள் ஒரு வீட்டையோ அல்லது மனிதர்களையோ ஒரு முறை பார்த்தாலே போதும், துல்லியமாக கணித்துவிடுகின்றனர்.
அதேபோல் தங்களுடைய கணவன்மார்களின் தவறுகளை… மனதில் இருக்கும் விஷயங்களை குறிப்புகளால் உணர்ந்து கொள்ளும் திறன் படைத்தவர்கள் பெண்கள். அதனால்தான் கல்யாணமான ஆண்கள், தங்கள் மனைவியிடம் மிகவும் ஜாக்கிரதையுடன் நடந்து கொள்கின்றனர்.
இன்றைய அவசர உலகில் சைக்கிள், டூவீலர், கார் மற்றும் இதர வாகனங்களையும் பெண்கள் இயக்குகின்றனர். இந்த வாகனங்களை ஆண்கள் ஓட்டும்போது அதிக வேகம், போதை, கவனமின்மை போன்ற காரணங்களால் 77 சதவீதம் விபத்துக்கான வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது ஒரு ஆய்வு. ஆனால் பெண்கள் இந்த வாகனங்களை ஓட்டும்போது விபத்து என்பது மிகமிக குறைவு என்பது பெண்களுக்கான போனஸ் குணம் என்கிறது அந்த ஆய்வு.
நிதி நிர்வாகத்திலும் இன்றைய பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். தற்போது வாங்கப்படும் லோன், கிரெடிட் கார்டு மற்றும் பிற நிதி விஷயங்களில் மிகச் சரியாக நடந்து கொள்கின்றனர் பெண்கள். வீட்டுப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களான ஆபரணங்கள் மற்றும் கார் வாங்குவதில் கூட துல்லியமாக கணித்து வாங்குவதில் பெண்கள் கில்லாடிகள்! தொலை நோக்குப் பார்வையில் பெண்களை ஆண்கள் மிஞ்ச முடியாது என்பதே நிதர்சன உண்மை.
இன்றைய நவநாகரீகப் பெண்கள் இணையதளம், ஈமெயில் போன்ற நவீன தொழில் நுட்பத்திலும் சிறந்து விளங்குகின்றனர் என்கிறது ஒரு லண்டன் சர்வே. அதுமட்டுமின்றி, ஷாப்பிங், பயணம் போன்ற அவசியமான விஷயங்களுக்கு மட்டுமே இவற்றை பயன்படுத் துகின்றனர் என்றும் கூறப்படுகிறது.சேமிப்பிலும் சிறந்தவர்களாக விளங்குகின்றனர் பெண்கள். சேமிப்பு குறித்த விஷயங்கள், ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் பெண்கள் முதலீடு வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர் நிதி முதலீட்டாளர்கள்.
உடல் ஆரோக்கியத்திற்கான விஷயங்களிலும் ஆண்களை விட பெண்களே சிறந்து விளங்குகின்றனர் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள். குறிப்பாக பற்கள் விஷயத்தில்… உணவுகளை மட்டுமே பெண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு ஆரோக்கியம் கெடும் வாய்ப்பு குறைவு. மேலும் பெண்கள் எப்போதும் பற்களை சுத்தமாக வைத்திருக்கின்றனர் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.
எப்போதுமே பெண்களுக்கே முன்னெச்சரிக்கை உணர்வு அதிகம். மேலும் எதையும் நன்கு யோசித்து செயல்படும் குணம் கொண்ட பெண்கள் அவசரப்பட மாட்டார்கள் என்பதால், அவர்களுக்கு மன அழுத்தம் என்பதும் குறைவு. இதனால் அவர்கள் அடிக்கடி சின்னச் சின்ன சிக்கல்களில் சிக்கி முழிப்பதில்லை என்பதும் பெண்களுக்கான சிறப்பு.
கல்லூரியில் படிக்கும் பெண்கள், தங்களுடைய ‘டிகிரியில்’ கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். படிக்கும் விதத்திலும் ஆண்களைவிட பெண்கள் வித்தியாசப்படுகின்றனர். ஆண்கள் பெரும்பாலும் தேர்வுக்கு முன்னர் மட்டுமே நள்ளிரவு வரை, அதிகாலை என்று படிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் பெரும்பாலான பெண்கள் அன்றைக்கு வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்களை, அன்று மாலையே படிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.
சரி… எப்படிப்பட்ட ஆண்களைப் பெண்களுக்கு பிடிக்காது?
பெண்களுக்குப் பிடித்தமான விஷயங்களில் மிகவும் முக்கியமானது சுத்தம், சுகாதாரம்.
ஆனால் ஆண்கள் அப்படியில்லை… பல நாட்கள் துவைக்காத ஜட்டி, கெட்ட வாடை வீசும் சாக்ஸ், அலசப்படாத தலை முடி மற்றும் உடை விஷயங்களில் அவ்வளவாக அக்கறை கொள்வதில்லை என்பதே பெண்களின் குற்றச்சாட்டு. இப்படிப்பட்ட ஆண்களை பொதுவாகவே பெண்கள் வெறுக்கின்றனர்.
பொது இடங்களில் கூடும்… பேசும் கூட்டங்களில் பெண்களின் பேச்சு மிகவும் தெள்ளத்தெளிவாக இருப்பதாக கூறுகின்றனர் உளவியல் ஆய்வாளர்கள். பெற்றோர்- ஆசிரியர் கூட்டம், வாடிக்கையாளர் சந்திப்பு என பல தரப்பட்ட இடங்களில் பெண்களின் பேச்சும், செயலும் நாளுக்குநாள் மேம்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது பெண்களின் உடல் நலம் மற்றும் மன உறுதி.
அனைத்து விஷயங்களையும் திறந்த மனதுடன் பேசுகிறேன் என்று கூறிக் கொண்டு, தேவையில்லாத நபரிடம், தேவையில்லாமல் பேசும் பலவீனம் பெண்களுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக புகை, மது, சூது போன்ற கெட்ட விஷயங்களிலும் பெண்களுக்கு நாட்டமில்லாததால் இவர்களுடைய முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இல்லை.
இப்படி கல்வி, விளையாட்டு, தொழில் மற்றும் வேலை என எந்த துறையாக இருந்தாலும் அதில் தனி முத்திரை பதித்து வருகின்றனர் பெண்கள்