இன்றைய வாழ்க்கை முறைகள் காரணமாக முன்னைய சமூகத்தினரை விட இன்றைய பிள்ளைகள் சிறு வயதிலேயே புதியவை பலவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். பெண்கள் பருவமடையும் வயது குறைந்து வருவதை பெற்றோர்கள் அவதானித்து இருக்கக் கூடும். உதாரணத்திற்கு தாய் 14 வயதில் முதல் மாதவிடாயை (Menarche) அடைந்தால் மகள் இப்பொழுது 10-12 வயதிலேயே அடைந்து விடுகிறாள்.
1800ன் நடுப்பகுதிகளில் பெண் குழந்தைகளில் முதல் மாதவிடாய் 17 வயதளவில் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் 1960 களில் 12 வயதாகக் குறைந்துவிட்டது. பூப்படைதல் என்பது முதல் முதலாக பெண்ணுறுப்பிலிருந்து குருதிக் கசிவு ஏற்படுவதாகும். அதாவது முதல் முதலாவது மாதவிடாய் ஏற்படும் நிகழ்வாகும். ஆனால் பருவடைதல் என்பது பூப்படைதலுக்கு முன்னோடியான நிகழ்வு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
காலத்திற்கு முந்தி பெண்கள் பருவமடைவது பற்றி ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும். காரணங்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் இப்பெண்களுக்கு பாலுறுப்புகள் சம்பந்தமான புற்றுநோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும். ஆஸ்த்மா வருவதற்கான சாத்தியமும் அதிகமாகும். சமூகரீதியாக அத்தகைய பெண் பிள்ளைகள் தவறான பாலியல் செயற்பாடுகளில் வயதிற்கு முன்னரே ஈடுபடுவதும், போதை பொருட்கள் பாவனையில் சிக்குவதும் அதிகம் என அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன.
வகுப்பறை சிநேகிதர்களாலும் வெளி நபர்களாலும் இவர்கள் அதிகளவில் பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு ஆளாகுகிறார்கள். இதனால் சில குழந்தைகள் உளநெருக்கீடு, மனப்பதற்றம், மனச்சோர்வு போன்ற உளவியல் பாதிப்பிற்கு ஆளாக நேர்வது துர்ப்பாக்கியமே. பருவமடைதலானது மூளை வளர்ச்சி நிறைவுறுவதுடன் தொடர்புடையது. எனவே காலத்திற்கு முந்திப் பருவமடைந்தால் மூளை வளர்ச்சி பூரணமடைவது பாதிப்படையலாம் எனவும் நம்பப்படுகிறது.