பெண்களுக்கு எந்த வயதிலும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன்கள் சமநிலையின்மையின் அறிகுறிகள் பற்றியும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் பார்க்கலாம்.
* பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில், சீரான ரத்தப்போக்கு இருக்காது. முதல் இரண்டு நாள்களிலேயே ரத்தப்போக்கு நின்றுவிடுவது அல்லது மாதவிடாய்க் காலம் முடிந்தும் அதிகமான ரத்தப்போக்கு வெளியேறுவது போன்ற அறிகுறிகள் இருக்கும்.
* திருமணமான பெண்களுக்கு, ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம். கருத்தரிப்பதில் சிக்கல், கருவில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியில் குறைபாடு போன்ற பிரச்னைகள் ஏற்படும். முப்பது வயதைக் கடந்தவர்களுக்கு இதன் அறிகுறியாக உடல் பருமன் ஏற்படும். இதை, ஆரம்பக் காலத்திலேயே கண்டறிந்து, தகுந்த சிகிச்சை பெறுவது அவசியம்.
* ஹார்மோன் குறைபாட்டால், பெண்களுக்கு பெரும்பாலும் ஏற்படும் நோய் – தைராய்டு! இந்த நோயில், இரண்டு வகைகள் உண்டு – ஹைபர்தைராய்டு (Hyperthyroidism) மற்றும் ஹைபோதைராய்டு (Hypothyroidism). ஆனால், பெண்களுக்குப் பொதுவாக ஏற்படுவது தைராய்டு சுரப்பிக் குறைபாட்டால் ஏற்படும் ஹைபோதைராய்டு. ஆரம்பக் காலத்திலேயே, தகுந்த மாத்திரைகள் மூலம் இதைச் சரிசெய்துவிட முடியும்.
* ஹார்மோன் குறைபாட்டால் பெண்களுக்கு ஏற்படும் மற்றொரு நோய் பிசிஓடி என்கிற பாலிசிஸ்டிக் ஓவரி நோய் (Polycystic Ovarian Disease). இந்த நோயின் தாக்கத்தால், முகத்திலும் கைகளிலும் முடி வளர்வது, மனநிலை மாற்றங்கள், மன உளைச்சல், முடி உதிர்வது, எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும்.
* பச்சைக் காய்கறிகளை அதிகமாக உண்பதும் பீட்சா, பர்கர் பதப்படுத்திய குளிர்பானங்கள், துரித உணவுகள் போன்ற உணவுகளைத் தவிர்ப்பதும் இன்றைய காலகட்டத்தில் ஹார்மோன் சமநிலையின்மையில் இருந்து ஓரளவு காக்கும்.