பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலக்கட்டத்தில் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால்தான், குழந்தை எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் ஆரோக்கியமாக வளரும். அதற்கு கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை தவறாமல் அவசியம் சேர்த்து வர வேண்டும். அதிலும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
இங்கு கர்ப்ப காலத்தில் பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறிகள் பற்றி தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காய்கறிகளை கர்ப்பிணிகள் எடுத்து வந்தால், குழந்தையின் வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்து அத்தியாவசிய சத்துக்களையும் பெற முடியும். சரி, இப்போது அந்த காய்கறிகள் என்னவென்று பார்ப்போம…
ப்ராக்கோலி
ப்ராக்கோலியில் கால்சியம், ஃபோலேட் போன்ற குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்திருப்பதால், இதனை கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் வளமாக நிறைந்துள்ளது.
பீட்ரூட்
பீட்ரூட்டானது கர்ப்ப காலத்தில் மட்டுமின்றி, சாதாரண காலங்களில் சாப்பிடக்கூடிய மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று. ஏனெனில் இதில் இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட் மட்டுமல்லாமல் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளில் ஜிங்க் வளமாக நிறைந்துள்ளது. இந்த ஜிங்க் சத்தானது குழந்தையின் உறுப்புக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் பசலைக்கீரை, லெட்யூஸ் மற்றும் வெந்தயக் கீரையில் ஜிங்க், மாங்கனீசு, நார்ச்சத்து மற்றும் இதர வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், இவைகளை கர்ப்பிணிகள் சாப்பிடுவது சிறந்தது.
தக்காளி
தக்காளியில் உள்ள லைகோபைன், புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டவை. எனவே இதனை கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட்டு வந்தால், குழந்தை பிறந்த பின், குழந்தையின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையடையச் செய்யும்.
பச்சை பட்டாணி
கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் முக்கியமான மற்றொன்று தான் பச்சை பட்டாணி. ஏனெனில் இதில் குழந்தையின் மத்திய நரம்பியல் மண்டலம், எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு வேண்டிய வைட்டமின் கே அதிகம் நிறைந்துள்ளது.
முட்டைக்கோஸ்
கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் முட்டைக்கோஸ் ஒன்றாகும். ஏனெனில் இதில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் கே அதிகம் இருப்பதுடன், மக்னீசியம், ஜிங்க் மற்றும் பொட்டாசியம் போன்ற குழந்தையின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன.