Home பெண்கள் உடல் கட்டுப்பாடு புதிதாக உடற்பயிற்சி தொடங்குபவர்கள் ஆரம்பத்தில் செய்யும் தவறுகள்

புதிதாக உடற்பயிற்சி தொடங்குபவர்கள் ஆரம்பத்தில் செய்யும் தவறுகள்

26

சிலர் உடற்பயிற்சிக்குள் நுழையும்போதே ‘தினமும் மூன்று வேளை உடற்பயிற்சி செய்ய வேண்டும்’ என்று பெரிய திட்டங்களோடு மிகுந்த ஆர்வமாகச் செயலில் இறங்கி, விரைவில் சோர்ந்துபோய் உடற்பயிற்சியையே கைவிடும் நிலைக்குப் போகிறார்கள். தொடக்கத்தில், இந்த மாதம் இரண்டு கிலோ குறைய வேண்டும். இந்த வாரம் கால் மணி நேரம் நடக்கத் தொடங்க வேண்டும். அடுத்த வாரம் முதல் ஐந்து ஐந்து நிமிடங்களாகக் கூட்ட வேண்டும். என இலக்குகளைச் சிறிதாக்கும்போது அதில் கிடைக்கும் வெற்றி தொடர்ந்து முன்னேற ஊக்கமாக இருக்கும்.

எந்தத் திட்டமும் இல்லாமல் உடற்பயிற்சியில் ஈடுபடாதீர்கள். ஒவ்வொரு உடலும் ஒவ்வொரு மாதிரி. எனவே, உங்களுக்கான உடற்பயிற்சிகள் எதுவெனத் திட்டமிடுங்கள். இது தேவையற்ற உடல்வலியையும் நேர விரையத்தையும், பண விரையத்தையும் தவிர்க்கும்.

உடற்பயிற்சிக்குள் நுழையும் முன் உடலை உடற்பயிற்சிக்கு ஏற்பத் தயார்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம். கைகள், கால்கள், கழுத்து, எலும்பு மூட்டுகள், தோள்பட்டை என உடலின் ஒவ்வொரு பாகத்தையும் வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்து தயார்படுத்திய பிறகே, உடற்பயிற்சியில் இறங்க வேண்டும். இது, தசைப்பிடிப்பு, எலும்பு மூட்டுப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து உடலைக் காத்து உடற்பயிற்சி செய்வதற்கான ஆர்வத்தை மேம்படுத்துகிறது.

உடற்பயிற்சி என்பது அன்றாடம் செய்ய வேண்டியது. அது ஒரு வேலை என்பதைவிட அது ஒரு வாழ்க்கைமுறை என்ற புரிதல் அவசியம். உடல் சோர்வாகிறது, உடல் வலிக்கிறது, நேர மேலாண்மை பாதிக்கப்படுகிறது எனக் காரணங்களை உருவாக்கி உடற்பயிற்சி செய்வதை நிறுத்தத் தூண்டும். உடற்பயிற்சியைக் கைவிடுபவர்களில் பெரும்பாலானோர் இந்த தொடக்கநிலை தடுமாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான். எனவே, விழிப்பாய், பிடிவாதமாய் இருங்கள். எந்தக் காரணத்துக்காகவும் உடற்பயிற்சியைத் தவிர்க்காதீர்கள். ஓரிரு நாட்கள் தவறினாலும் மறுநாள் உடற்பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருங்கள்.