Home பெண்கள் அழகு குறிப்பு பிளீச்சிங், ஃபேஷியல் எது பெஸ்ட்?

பிளீச்சிங், ஃபேஷியல் எது பெஸ்ட்?

24

p12b‘பிளீச்சிங், ஃபேஷியல் செய்து கொள்வதால் என்ன பலன், இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?’ என்று, பிரபல நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் அழகுக்கலை நிபுணர் வீணாவிடம் கேட்டோம்.
”வயது என்பது கூடிக்கொண்டேதான் இருக்கும். ஆனால், நம் உடலையும், உள்ளத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால்தான் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும். ஒருவரைப் பார்க்கும்போது அவரது முகத் தோற்றம்தான் எப்போதும் நம் கண் முன் நிற்கும். இப்படி, ஒருவரின் மனதில் பதியும் முகத்தில் மாசு மரு, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருப்பது ஒன்றே இளமையான தோற்றத்துக்கு வழி. முக அழகைக் கூட்டும் பிளீச்சிங், ஃபேஷியல் செய்தால், நம் ஒரிஜினல் அழகைப் பொலிவாகக் காட்டுமே தவிர, வெள்ளையாக மாற்றிவிடும் என நினைப்பது தவறு” என்றவர் ஃபேஷியல், பிளீச்சிங் செய்யும் முறைகளை விளக்கினார்.

பிளீச்சிங்
”பிளீச்சிங் என்பது முழுக்க முழுக்கப் பாதரசம் கலந்த வேதியல் முறையிலான பவுடர்கள் மற்றும் கிரீம்களைக்கொண்டு செய்யப்படுவது.

பிளீச்சிங் செய்ய, முதலில் முகத்தைச் சுத்தமான தண்ணீரால் கழுவி, சருமத்தில் உள்ள அழுக்குகள் எடுக்கப்படும். முகத்துக்கான பிளீச்சிங் பவுடர் மற்றும் ஆக்டிவேட்டர் என்ற கிரீம் சேர்ந்துக் கலந்து, பிரஷ்ஷினால் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவப்படும். 15 நிமிடங்கள் உலர்ந்தவுடன், ஒரு ஸ்பாஞ்சால், ஒற்றி எடுத்துக் கழுவப்படும். பிறகு, சன் ஸ்க்ரீன் லோஷன் தடவப்படும். பிளீச்சிங் செய்வதால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீக்கப்படும். இதனால், அதிகம் எண்ணெய் சுரக்கும் தன்மை கொண்ட முகத்துக்கு மட்டுமே பிளீச்சிங் செய்யப்படுகிறது. உலர் சருமம் கொண்டவர்கள் செய்துகொள்ளும்போது, முகத்தில் உள்ள தசைகள் சீக்கிரத்தில் தொங்க ஆரம்பித்து வயோதிகத் தோற்றத்தைத் தந்துவிடும். எனவே, உலர்ந்த சருமம்கொண்டவர்கள், பிளீச்சிங் செய்துகொள்ளக் கூடாது.
அதே போல், பிளீச்சிங் செய்துகொள்வதற்கு முன்பு சருமத்தில் ஒவ்வாமை இருக்கிறதா என்பதைக் கண்டறிய முதலில் ‘பேட்ச்’ (patch) டெஸ்ட் செய்யப்படும். பரிசோதனையில் ஒவ்வாமை இருந்தால், பிளீச்சிங் செய்யவே கூடாது. பிளீச்சிங் செய்துகொண்டால், மறுநாள் வரை அதிகம் வெயிலில் போகக் கூடாது. பிளீச்சிங் சிகிச்சையை எடுத்துக்கொள்வதால், முகத்தில் உள்ள கருமை, கரும் புள்ளிகள் மறைந்து முகம் பிரகாசமாக ஜொலிக்கும். ஆனால், இது தற்காலிகமானதே. ஓரிரு நாட்களில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விடும். உடனடியாக ஏதேனும் சுப நிகழ்ச்சிக்குச் செல்பவர்கள், மாடலிங் மற்றும் போட்டோ ஷூட் எடுக்கவேண்டியவர்கள் பிளீச்சிங் செய்துகொள்ளலாம். ஆனால், அழற்சியும், முகத்தில் எரிச்சலையும் உண்டாக்கும் என்பதால், அதிகக் கவனம் தேவை. ஆண்கள் ஷேவ் செய்தவுடன் பிளீச்சிங் செய்வதைத் தவிர்த்துவிட வேண்டும். வீட்டிலேயே பிளீச்சிங் செய்துகொள்பவர்கள், தோல் மருத்துவர் மற்றும் அழகுக்கலை நிபுணர்களின் ஆலோசனையோடு செய்வது நலம்.
ஃபேஷியல்
”நீண்ட நாட்கள் முகத்தைப் பொலிவாக வைத்திருக்கவும், தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் ஃபேஷியல் துணைபுரிகிறது. ஃபேஷியல் முறையில், கிளென்சிங் (Cleansing ), எக்ஸ்ஃபோலியேஷன் (Exfoliation), ஸ்டீமிங் (Steaming), டோனிங் (Toning), மாஸ்க் (Mask), மாய்ஸ்ச்சரைஸிங் (Moisturizing) என ஆறு படிநிலைகள் உண்டு.

ஃபேஷியல் செய்துகொள்ள, குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆகும். முதலில் முகத்தில் உள்ள அழுக்குகள் மெதுவாக நீக்கப்படும். பிறகு ‘ஸ்க்ரப்’ பயன்படுத்தி, முகத்தில் உள்ள எண்ணெய்த் துவாரங்களின் வழியாகச் சேரும் அழுக்குகள் அகற்றப்படும். நீராவி பிடித்த பிறகு டோனர் முகத்தில் சேர்க்கப்பட்டு மாஸ்க் போடப்படும். இந்த மாஸ்க்கை, பழவகைகள், வாசனைப் பொருட்கள், மூலிகைகள் என விரும்பிய விதத்தில் போட்டுக்கொள்ளலாம். நன்றாக உலர்ந்ததும் மாஸ்க் எடுக்கப்படும். முகம் வறண்டுபோகாமல் இருக்க, முகத்துக்குத் தேவையான ஈரப்பதம் தரப்படும். எந்தவிதப் பக்கவிளைவுகளும் இல்லை என்பதால், எல்லோரும் ஃபேஷியல் செய்துகொள்ளலாம். இதில் உள்ள முக்கியமான அம்சம், முகத்தில் செய்யப்படும் மசாஜ். இதுதான் முகத்துக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. மேலும் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. தசைகளை மிருதுவாக மாற்றுகிறது. இதனால் முகத்தில் கூடுதல் பொலிவை உணர முடியும். ஒரு மாதம் முதல் 45 நாட்கள் இடைவெளியில் ஃபேஷியல் செய்துகொள்ளலாம்.
பிளீச்சிங் மற்றும் ஃபேஷியல் முறைகளுக்கு இடையில் முக்கிய வித்தியாசமே, உடனடிப் பொலிவு, நீண்ட நாள் பொலிவு என்பதுதான். பொதுவாகவே உடனடியாகப் பலன் தரும் அனைத்துமே ஆபத்துதான். பிளீச்சிங் செய்துகொள்வதைக் காட்டிலும், ஃபேஷியல் செய்துகொள்வதே முகத்துக்கு சிறந்தது!”
பிளீச்சிங் அபாயம்!

”பிளீச்சிங் செய்யப் பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடரில் கலக்கப்படும் பாதரசம் சருமத்தினுள் ஊடுருவிச்சென்று ‘மெலனின்’ என்ற நிறமியைத் தந்து சருமத்தை வெளுக்கச் செய்யும். பாதரசம் சேர்க்கப்பட்ட க்ரீம், லோஷன் போன்ற அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது, சிறுநீரகம் பாதிக்கப்படுவதுடன் சருமத்தில் பாக்டீரியா பூஞ்சைத் தொற்று ஏற்படும். கூடவே, மன அழுத்தமும் ஏற்பட்டு நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகும். நரம்பு மண்டலம், சுவாச மண்டலம், சிறுநீரக மண்டலம் மெல்ல மெல்ல செயல் இழக்கலாம்” என எச்சரிக்கிறார் தோல் சிகிச்சை நிபுணர் மாயா வேதமூர்த்தி.