பெற்றோரான உங்கள் மீது அதிக அக்கறை காட்டாமல் குழந்தை மற்றவர் மீது பிரியமாக உள்ளதா?
– குழந்தைகள் நிறைய நேரத்தை தனிமையில் கழிக்கிறார்களா?
– பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தம்பதியர் இருவரும் வேலைக்கு செல்கிறீர்களா?
– துணைவரின் பிரிவால் குழந்தையை வளர்க்க சிரமப்படுகிறீர்களா?
இப்படிப்பட்ட பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று இருந்தால்கூட, தொடர்ந்து படியுங்கள். இது உங்களுக்கான விஷயம்தான்!
பெற்றோரின் விவாகரத்து பிரிவால் தாயால் மட்டும் வளர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் தனிமைப்படும் சூழ்நிலை உருவாகிறது. தனிமையானது குழந்தைகளின் மனோநிலையில் விபரீத மாற்றங்களை உருவாக்குகிறது.
‘தாங்கள் சம்பாதிப்பதே குழந்தைகளுக்குத்தான்’ என்று ஓய்வின்றி உழைக்கும் பெற்றோர்கள் இன்று பெருகிவிட்டார்கள். உழைப்பதில் பெரும் பகுதியை குழந்தைகளுக்காக சேமித்து வைக்கிறார்கள். அப்படி சேமிப்பில் செலுத்தும் கவனத்தை குழந்தைகள் மீது செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. அதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. கணவன்– மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் பிள்ளைகள் தனிமையில் தவிக்கவிடப்படலாம். மற்றொரு வகையில் பெற்றோர் விவாகரத்து பெறுவதால் தாய் அல்லது தந்தை யாராவது ஒருவரது கண்காணிப்பில் குழந்தைகள் வளர்வதாலும் குழந்தைகள் தனிமைக்கு தள்ளப்படலாம்.
இவை தவிர, புதிய பள்ளிக்கு மாற்றுதல், வீடு மற்றும் இடம் மாறுவதால் ஏற்படும் உறவு இழப்புகள் கூட குழந்தைகளை தனிமைப்படுத்தும். குழந்தைகளுக்கு பிடித்த செல்லப்பிராணிகள் அல்லது உறவுகளின் பிரிவு–மரணம், பொருட் களை இழத்தல் ஆகியவற்றாலும் அவர்கள் மனதளவில் தனிமைப்படுவார்கள். வெட்கம், கவலை, தன்னம்பிக்கைக் குறைவு போன்றவைகளால் மற்றவர்களால் புறக்கணிக்கப்படும்
போதும் தனிமை விரும்பிகளாய் மாறலாம்.
வாழ்வின் யதார்த்தங்களை புரிந்து கொள்ளத் தெரியாத சின்னஞ்சிறு குழந்தைகள் தனிமையில் தவிக்க விடப்படும்போது எதிர்கொள்ளும் இன்னல்கள் பல. அதை அவர்களால் சொல்ல முடியாது. தனிமையின் தாக்கம் ஏற்படுத்தும் சோகங்களும், விளைவுகளும் கொடியவை. அது அவர்களின் எதிர்காலத்தை வெகுவாக பாதிக்கும்.