ஒவ்வொரு பெண்ணின் குழந்தை பிறப்பு அனுபவமும் தனித்துவமானது, ஒவ்வொருவருக்கும் அது வேறுபடும். பெரும்பாலும் குழந்தை பிறப்பு என்பது ஒரு பெண்ணின் உணர்வு ரீதியான வலிமைக்கும் உடல் திடத்திற்கும் பெரிய சோதனையாக அமைகிறது.
பொதுவாக குழந்தை பிறப்பின்போது நடப்பவை:
கருப்பையின் வாய்ப்பகுதி திறக்கும், மென்மையாகும்
பனிக்குடப்பை கிழியும்
கருப்பை அதிக நெருக்கமாக சுருங்கும்
சில அரிதான சமயங்களில் பிரசவத்தில் எதிர்பாராதபடி நடக்கலாம். வலி நிவாரணத்திற்கான மருந்துகளை மாற்றுவது குறித்து ஆலோசனை பெறலாம், அல்லது உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறவும் பரிந்துரைக்கப்படலாம்.
குழந்தை பிறப்பிற்கான அறிகுறிகள் ( Signs of labour)
36வது வாரம் கடந்துவிட்டாலே ஒரு பெண் சிறு சிறு அறிகுறிகளைக் கூட கவனமாக கண்காணிக்க வேண்டும். குறைப்பிரசவத்த்திற்கான அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
கவனிக்க வேண்டிய அறிகுறிகள் பின்வருமாறு:
வழக்கத்தை விட அடிக்கடி கடுமையான கருப்பைத் தசைச் சுருக்கம் ஏற்படும்
இடைவிடாத பிடிப்பு வலி மற்றும் முதுகு வலி
பழுப்பு நிறம் அல்லது சிவப்பு நிறத்தில் இரத்தம் போன்ற திரவம் வெளியேறுதல்
பனிக்குடம் உடைந்து கொஞ்சம் கொஞ்சமாக நீர் கசியலாம் அல்லது நீர் அதிக அளவில் வெளியேறலாம்
உண்மையான பிரசவ வலி எது, போலியான அறிகுறிகள் எவை என்பதை எப்படி வேறுபடுத்தி அறிந்துகொள்வது (How to discriminate false labour from true labour):
பெரும்பாலான பெண்கள், குறிப்பாக முதல் முறை கர்ப்பம் தரித்திருப்பவர்கள், குழந்தை பிறப்பு தொடங்கும் முன்பே, குழந்தை பிறக்கப்போகிறது என்று தவறாக நினைத்துக்கொள்வார்கள். இதையே போலி பிரசவ அறிகுறிகள் என்கிறோம். கர்ப்பத்தின் இறுதி வாரங்களில், பிராக்ஸ்டன் ஹிக்ஸ் எனும் தசைச் சுருக்கங்கள் ஏற்படுவது பொதுவானது, அப்போது கருப்பை இறுக்கமடைந்து கெட்டியாக மாறுவது போலிருக்கும். வழக்கமாக இது நடக்கும்போது வலி எதுவும் இருக்காது, ஆனால் அசௌகரியமாக இருக்கலாம். அரிதாக சிலருக்கு இந்த தசைச் சுருக்கத்தின்போது வலி ஏற்படலாம்.
உண்மையான பிரசவ அறிகுறிகளை எப்படிக் கண்டுகொள்வது (How to know that one is in true labour?)
உண்மையான பிரசவ வலி தொடங்கும்போது, கருப்பைச் சுருக்கங்கள் மிக அதிகமாகவும், தொடர்ந்தும், குறைந்த இடைவெளியில் வருவதாகவும் இருக்கும். தசைச் சுருக்கம் ஏற்படும் கால இடைவெளியைக் கவனித்து அறிவதன் மூலம், பிராக்ஸ்டன் ஹிக்ஸ் சுருக்கங்களை உண்மையான பிரசவ தசைச் சுருக்கங்களிலிருந்து வேறுபடுத்தி அறிய முடியும். பிராக்ஸ்டன் ஹிக்ஸ் சுருக்கங்கள் ஒரே மாதிரியான முறையில் ஏற்படாது. தசைச் சுருக்கங்கள் பற்றி சந்தேகம் இருந்தால், மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
குழந்தை பிறப்பின் நிலைகள் (Stages of labour)
குழந்தை பிறப்பதில் மூன்று நிலைகள் உள்ளன:
தொடர்ச்சியான தசைச் சுருக்கங்கள் தொடங்குதல்
குழந்தை கீழ் இடுப்புப் பகுதிக்கு நகருதல்
கருப்பை வாய் திறந்து மெலிதாக மாறுதல்
பிரசவம் தொடங்கி எவ்வளவு நேரம் நீடித்து குழந்தை பிறக்கும் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும்.
முதல் கட்டம்: பிரசவ வலி தொடங்குதல் (First Stage: Early Labour)
இந்த முதல் கட்டமாகும், இது நீண்ட நேரம் நீடிப்பது. இது 20 மணிநேரம் வரை நீடிக்கலாம். கருப்பைத் தசைச் சுருக்கங்களின் காரணமாக கருப்பை வாய் திறப்பதில் இந்த நிலை தொடங்குகிறது.
சீக்கிரம் குழந்தை பிறப்பதற்கான அடையாளங்கள் (Signs of early labour)
இந்தக் கட்டத்தில் ஏற்படும் தசைச்சுருக்கங்கள் லேசானது முதல் மிதமானது வரை இருக்கலாம், இவை 30-45 வினாடிகள் இருக்கலாம். இந்தத் தசைச் சுருக்கங்கள், குறுகிய நேரம் நீடிப்பதாகவும், சீரான இடைவெளியில் ஏற்படுவதாக அல்லது சீரற்ற இடைவெளியில் ஏற்படுவதாகவும் இருக்கலாம். பெரும்பாலும் சுருக்கங்கள் கிட்டத்தட்ட 20 நிமிட இடைவெளியில் ஏற்படும். கடைசி 2-6 மணி நேரத்தின்போது மட்டுமே ஒருவருக்கு இந்த தசைச் சுருக்கங்கள் ஏற்படுவது தெரியும்.
இதற்கான அடையாளங்கள்:
தசைப் பிடிப்பு வலிகள்
முதுகுவலி
வயிற்றுப்போக்கு
அடிவயிற்றில் அழுத்தம்
அடிவயிற்றில் சூடான உணர்வு
இரத்தம் கலந்த மியூக்கஸ் கசிதல்
பனிக்குடப்பை கிழிதல் (ஆக்டிவ் லேபரில் இப்படி நடக்க அதிக வாய்ப்புள்ளது)
சீக்கிரம் குழந்தை பிறக்கும் சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும்? (What to do during early labour?)
பலருக்கு உற்சாகமாகவோ, ஒரு விடுதலை கிடைக்கப்போகும் உணர்வோ, என்ன ஆகுமோ என்று தெரியாத ஒரு உணர்வோ அல்லது கலக்கமோ பயமோ இருக்கலாம். இப்படி இருப்பதெல்லாம் சகஜம் தான். இந்த சமயத்தில் அமைதியான மனநிலையில் இருந்து, உங்கள் உடலின் ஆற்றலை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம், அது பிறகு தேவைப்படும்.
உங்கள் தசைச் சுருக்கங்கள் எப்படி எப்போது ஏற்படுகிறது என்பது குறித்தே கவலைப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டாம். 10 நிமிட இடைவெளியில் ஏற்படுகிறதா என்று கவனித்தால் போதும். லேசான உணவை உட்கொள்ளவும், கொழுப்புகள் மற்றும் அமிலத் தன்மை உள்ள உணவுப் பொருள்களைத் தவிர்க்கவும். அதிக நீர் அருந்தவும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கவும். குழந்தை உதைத்தல் அல்லது கருவில் இருக்கும் குழந்தையின் செயல்பாடுகளை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
கடுமையான இரத்தப்போக்கு அல்லது வழக்கத்திற்கு மாறான சிவப்பு திரவங்கள் வெளியேறினால், உடனடியாக மருத்துவரிடம் செல்லவும்.
இரண்டாம் கட்டம்: ஆக்டிவ் லேபர் (Second phase: Active Labour)
இந்தக் கட்டம் வழக்கமாக 2-3. 5 மணி நேரம் நீடிக்கும், இச்சமயத்தில் கருப்பையின் வாய்ப்பகுதி 7 செ. மீ வரை விரிவடையும். பொதுவாக இது மருத்துவமனையில் இருக்கும்போது நடக்கும்.
ஆக்டிவ் லேபரின் அறிகுறிகள் (Signs of active labour):
தசைச் சுருக்கங்கள் அதிகரிக்கும், கடுமையாகவும் அதிக வலி ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம். ஆக்டிவ் லேபர் நீண்ட நேரம் நீடிக்கும், அதிக கடுமையானது, இது ஒரு குறிப்பிட்ட முறையில் நடக்கும் (ஆனால் எப்போதும் சீராகவே நடக்கும் என்று கூற முடியாது)
இந்தக் கட்டத்தில்:
தசைச் சுருக்கத்தின்போது அசௌகரியமும் வலியும் அதிகமாகும்
களைப்பு
முதுகுவலி
இரத்தப்போக்கு
பனிக்குடம் உடைதல் (தானாக உடையாவிட்டால், மருத்துவர் அதனை உடையச் செய்யலாம்)
மருத்துவமனை ஊழியர்கள், உங்கள் தசைச் சுருக்கங்களையும், கருக்குழந்தையையும் கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள், உங்களுக்கு எப்பிட்யூரல் அனஸ்தீஷியா தேவைப்படுமா என்று கவனித்துக்கொண்டே இருப்பார்கள். லேசான, சுத்தமான பானங்களைக் குடிப்பதன் மூலம் உங்கள் தொண்டை வறண்டு போகாதபடி பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். சிறுநீர் கழிக்க வேண்டும், ஏனெனில் கருப்பைப் பகுதியில் உள்ள அழுத்தத்தால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வை நீங்கள் கவனிக்காமல் போக வாய்ப்புள்ளது. அது பிரச்சனையாகிவிடலாம். சில நேரங்களில், எப்பிட்யூரல் அனஸ்தீஷியா கொடுக்கப்படும்போது, குழாய் மூலம் சிறுநீர் வெளியேறும்படி செய்யப்படலாம்.
மூன்றாம் கட்டம் (Third Phase: Transitional (advanced) labour):
குழந்தை பிறப்பில் இது கடுமையான கட்டமாகும். கருப்பை வாய், 7 சென்டிமீட்டரில் இருந்து 10 சென்டிமீட்டருக்கு விரிவடையும். இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால், இது மிக சிறிதளவு நேரமே நீடிக்கும் என்பதே (வழக்கமாக 15 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நீடிக்கலாம்)
இந்தக் கட்டத்தில் (வலி நிவாரணி மருந்துகள் அல்லது குறிப்பிட்ட பகுதிக்கான மரத்துப்போகும் மருந்து கொடுக்காவிட்டால்) தோன்றும் அறிகுறிகள்:
இப்போது சுருக்கங்கள் மிகக் கடுமையாகவும் 60-90 வினாடிகள் நீடிப்பதாகவும் இருக்கும். முன்பே குழந்தை பிறந்துள்ள பெண்களுக்கு பல முறை திடீர் அதிக வலி ஏற்படும்.
இப்படி ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு மாறும்போது, பின்வருபவையும் ஏற்படலாம் (வலிக்கான மருந்து அல்லது எப்பிட்யூரல் அனஸ்தீஷியாவால் மரமரப்பு ஏற்படாவிட்டால்):
சூடான உணர்வு, நடுக்கம், உடல் குளிர்ந்து போவது அல்லது வியர்த்தல்
பெரினியம் (ஆசன வாய்க்கும் பிறப்புறுப்புக்கும் இடையில் உள்ள பகுதி) அல்லது அடி முதுகில் மிக அதிக அழுத்தம் உணரப்படும்
மலக்குடல் மீது அழுத்தம்
களைப்பு
தசைப்பிடிப்பால் கால்கள் நடுங்கலாம்
வாந்தி அல்லது குமட்டல்
உறக்க நிலை
இந்த இடைப்பட்ட கட்டத்தில், மெதுவாகவும் சீராகவும் சுருக்கங்கள் ஏற்படும் இடைவெளிகளிலும் சுவாசிக்க முயற்சி செய்ய வேண்டும்.
கருப்பை வாய் முழுமையாக 10 செ. மீ அளவுக்கு விரிவடைந்ததும், பெண்ணை பிரசவ அறைக்கு மாற்றுவார்கள். இப்போது குழந்தை பிறப்பதற்காக நீங்கள் முக்கித் தள்ள வேண்டும். இப்படி முக்கித் தள்ளுவது, பிறப்புறுப்புப் பாதையை குழந்தை கடந்து வர உதவும். குழந்தை வெளியில் வர வழக்கமாக 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை ஆகலாம். சில நேரங்களில் இன்னும் குறைவான நேரத்திலேயே குழந்தை பிறந்துவிடலாம், அல்லது சில மணி நேரங்களும் ஆகலாம்.
எப்போது முக்கித் தள்ள வேண்டுமென்பதை எப்படி அறிந்துகொள்ளலாம்? (When will you know, it’s time to push?)
முன்பிருந்ததை விட இப்போது, தசைச் சுருக்கங்கள் அடிக்கடி ஏற்படும், இவை 2-5 நிமிட இடைவெளியில் ஏற்படும். இவை கடுமையான வலி ஏற்படுத்துபவையாக அல்லது குறைவான வலி ஏற்படுத்துபவையாக இருக்கலாம். சுருக்கங்கள் ஒழுங்கான சீரான இடைவெளியில் ஏற்படுவதைத் தெளிவாகக் கவனிக்க முடியும்.
இரண்டாவது கட்டத்தைப் போலவே (எப்பிட்யூரல் அனஸ்தீஷியா கொடுக்கப்பட்டால் எதுவும் தெரியாது):
சுருக்கங்கள் ஏற்படும்போது குறைவான வலி இருக்கலாம்
முக்க வேண்டும் போன்ற உணர்வு அதிகரிக்கும்
மலக்குடலில் அழுத்தம் அதிகரிக்கும்
இரத்தப்போக்கு அதிகரிக்கும்
திடீரென்று புதிய ஆற்றல் வரும் அல்லது சோர்வாகும்
குழந்தையின் தலை பிறப்புறுப்பை அடையும்போது, ஈரமானதுபோன்ற, கூச்சமான அல்லது
குத்துவது போன்ற உணர்வுகள் ஏற்படலாம்
முக்கித் தள்ளுவதற்கான உதவிக் குறிப்புகள் (Pushing Tips)
இப்போது முக்கித் தள்ளுவதன் மூலம் குழந்தையை வெளியே வரவழைக்க வேண்டும். அதிக நேரம் முக்கித் தள்ள வேண்டி இருந்தால், அது சங்கடமாகவும் வெறுப்படையச் செய்வதாகவும் இருக்கலாம்.
முதலில் உங்களுக்கு சௌகரியமான அல்லது மருத்துவர் பரிந்துரைக்கும் ஒரு நிலையில் இருக்கவும். ஒவ்வொரு முறை தசைச் சுருக்கம் ஏற்படும்போதும், மூன்று முறை முக்கித் தள்ள முயற்சி செய்யவும் அல்லது உங்கள் உடலில் எப்படித் தோன்றுகிறதோ அதன்படியும் செய்யலாம்.
மலம் கழிக்கும்போது எப்படி செய்வோமோ, அதேபோல முக்கித் தள்ள வேண்டும். எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு பலமாக முக்கித் தள்ளவும், சிறுநீர் அல்லது மலம் வந்துவிடுமோ என்பது பற்றியெல்லாம் கவலை வேண்டாம்.
முக்கித் தள்ளும்போது, உங்கள் கீழ்த்தாடையை மார்பில் வைத்தபடி இருக்க வேண்டும். இப்படிச் செய்வது, முக்கித் தள்ளுவதில் கவனம் செலுத்த உதவும்.
உங்கள் ஆற்றல் முழுவதையும் பயன்படுத்தி முக்கித் தள்ளவும், கட்டுப்பாடின்றி சீரற்ற முறையில் முக்குவதைத் தவிர்க்கவும். உடல் இருக்கை நிலையை மாற்றிக்கொள்ளலாம். மேலும், உடலின் மேல் பகுதியிலிருந்து முக்கித் தள்ளக் கூடாது, ஏனெனில் அப்படிச் செய்தால் முகம் வடிவம் மாறலாம்.
சுருக்கங்கள் ஏற்படும்போது ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, முக்கித் தள்ளுவதற்குத் தயார்படுத்திக் கொள்ளவும்.
தசைச் சுருக்கம் உச்சமாக இருக்கும்போது, ஆழமாக மூச்சை இழுத்து உங்கள் பலம் முழுவதையும் திரட்டி முக்கித் தள்ளவும்.
உங்கள் உடலில் ஏற்படும் உந்துதல்களைப் பின்பற்றுவது நல்லது, உங்களுக்கு முக்க வேண்டும் போலத் தோன்றும்போது முக்கித் தள்ளலாம், குழந்தை வெளியில் வந்துவிடும்.
அருகிலிருக்கும் உதவியாளர் அல்லது மருத்துவ ஊழியரின் உதவியைப் பெறவும்.
குழந்தை அதிக வேகமாக வெளியில் வருவதைத் தடுக்க, அல்லது உங்களுக்கு சற்று ஒய்வு கொடுப்பதற்காக முக்கித் தள்ளுவதை கொஞ்ச நேரம் நிறுத்தும் படி மருத்துவர் கூறலாம்.
அரிதாக சில சமயங்களில், எப்பிசியாட்டமி (பிறப்புறுப்பில் லேசாக அறுவை சிகிச்சைக் கத்தி கொண்டு கிழிப்பது) அல்லது மிக அரிதாக ஃபோர்செப் அல்லது வாக்கூம் முறை பயன்படுத்தப்படலாம்.
குழந்தையின் தலை வெளியே தெரிந்ததும், லேசாக அழுத்துவதன் மூலம் குழந்தை வெளியில் வர உதவுவார்கள். குழந்தை பிறந்ததும், நஞ்சுக்கொடி வெட்டப்படுகிறது. கடைசியாக நஞ்சுக்கொடி வெளியே தள்ளப்படும்.
பிரசவத்திற்கு பிறகு (What to expect post delivery):
Apgar ஸ்கோர்: குழந்தை பிறந்த உடனே, குழந்தையின் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்வதற்காக, 1 முதல் 5 நிமிடங்களுக்குள் Apgar சோதனை செய்யப்படுகிறது. சுவாசம், இதயத்துடிப்பு வீதம், அனிச்சை எதிர்வினைகள், தசை வாகு, மற்றும் தோலின் நிறம் போன்றவற்றைக் கவனித்து அவற்றுக்கு 0, 1 அல்லது 2 என்று ஸ்கோர் கொடுப்பார்கள். இந்த ஸ்கோர்களை எல்லாம் கூட்டினால், அதிகபட்சம் 10 வர வேண்டும்.
வழக்கமாக Apgar ஸ்கோர் 7 முதல் 9 வரை இருந்தால், அது குழந்தை ஆரோக்கியமாக இருப்பதற்கான அடையாளமாகும். 7க்குக் குறைவாக இருந்தால், குழந்தையை ஆரோக்கியமான நிலைக்குக் கொண்டுவர மருத்துவ கவனிப்பு தேவைப்படும்.
1 நிமிடத்தில் இந்த ஸ்கோர் எடுக்கப்படுகையில் குறைவாக இருந்தாலும், பெரும்பாலும் 5 நிமிடம் ஆகும்போது அது கிட்டத்தட்ட இயல்பான அளவுக்கு அதிகரிக்கும். Apgar சோதனை என்பது எதிர்காலத்தில் குழந்தை ஆரோக்கியமாக இருக்குமா என்பது பற்றித் தெரிவிப்பதற்காக செய்யப்படுவதில்லை.
நஞ்சுக்கொடி வெளிவருதல் (Placenta delivery)
இந்த சமயத்தில் லேசான தசைச் சுருக்கங்கள் ஏற்படும், ஒவ்வொரு தசைச் சுருக்கமும் ஒரு நிமிடம் வரை நீடிக்கும். கருப்பை சுருக்கத்தை மேம்படுத்தக்கூடிய ஆக்சிட்டோசின் ஊசி போடுவதன் மூலம் மருத்துவர் இந்தச் செயல்பாட்டை வேகப்படுத்தலாம். பிறகு நஞ்சுக்கொடி முழுவதும் வெளியே வந்துவிட்டதை என்பதை உறுதி செய்ய அதனை ஆய்வு செய்வார்கள். இது வெளிவந்த பிறகு, பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு (லோச்சியா) ஏற்படலாம்.
ஆம்! உங்கள் குழந்தை பிறந்துவிட்டது. . இனி குதூகலம் தான்!
பிரசவ வலியைச் சமாளித்தல் (Managing labour pain)
கிட்டத்தட்ட, எல்லா பெண்களுக்குமே பிரசவ வலி பற்றி அதிக கவலை இருக்கும். பிரசவ வலியை இயற்கை முறையில் அல்லது மருந்துகளின் உதவியுடன் அல்லது இரண்டையும் ஒருங்கிணைந்து பயன்படுத்துவதன் மூலம் சமாளிக்கலாம்.
இயற்கை முறையில் வலியைச் சமாளித்தல் (Natural pain management)
வலி குறைய பின்வருபவற்றை முயற்சி செய்யலாம்:
சுவாசம் மற்றும் ரிலாக்சிங் பயிற்சிகள்
வெதுவெதுப்பான நீரில் குளித்தல் அல்லது தலை குளித்தல்
இசை கேட்பது
மசாஜ்
மருத்துவ உதவியுடன் வலியைச் சமாளித்தல் (Medical pain management)
ஒப்பியாய்டுகள் ஊசி மூலம் செலுத்தப்படலாம் அல்லது முதுகுத்தண்டு வழியாக செலுத்தப்படலாம் அல்லது எப்பிட்யூரல் பகுதிகளாக வழங்கப்படலாம்.
முதுகுத்தண்டில் செலுத்தப்படும் மருந்து அல்லது எப்பிட்யூரல் அனஸ்தீஷியா செலுத்துவதால் குழந்தை பிறக்கும்போது பெண் விழிப்புணர்வுடன் அதைக் கவனிக்க முடியும். இதற்காக முதுகுத்தண்டில் சிறிய டோஸ்களில் மருந்து கொஞ்சம் கொஞ்சமாக செலுத்தப்படும்.
பியூடெண்டல் (பெண் பாலுறுப்பில் மருந்து செலுத்தும்) முறையில், பியூடெண்டல் நரம்புக்கு அருகில் பிறப்புறுப்பு வழியாக வலிக்கான மருந்தை செலுத்துவார்கள்.
பிரசவ அறையில் என்னென்ன இருக்கும்? (What to expect in the delivery room?)
இப்போது, பிரசவ அறை எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம். பெரும்பாலான மருத்துவமனைகளில் பிரசவ அறை வீடு போன்ற உணர்வையே தரும் வகையில் இருக்கும். சௌகரியமான தலையணை போன்றவை இருக்கும். அத்துடன் பல கருவிகளும் எந்திரங்களும் இருக்கும், பயம் வேண்டாம் அவை எல்லாம் ஒரு ஆரோக்கியமான குழந்தையை நீங்கள் பெற்றெடுக்க உதவுவதற்காகவே உள்ளன. இந்தக் கருவிகள் எல்லாவற்றையும் மருத்துவர்கள் எண்ணற்ற முறை பயன்படுத்தியிருப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
பிரசவத்தின் போது பின்வரும் கருவிகள் பயன்படுத்துவார்கள் என்பது பலருக்குத் தெரியும்:
கத்தரிக்கோல்: தொப்புள் கொடியை வெட்டவும் அறுவை சிகிச்சையின்போது பிறப்புறுப்பை அகல விரிக்கவும் (எப்பிசியோட்டமி) பயன்படுகிறது.
ஸ்பெக்யூலம்: இந்த கருவி வழக்கமான பரிசோதனைகள் செய்யும்போது பயன்படுத்தப்படும். கருப்பை வாய்ப் பகுதி விரிவடைந்துள்ளதா என்பதைச் சோதிக்க இது பயன்படுகிறது.
பனிக்குடக் கொக்கி (அம்னியோட்டிக் ஹூக்): இது பிளாஸ்டிக்கால் ஆன நீண்ட கொக்கி ஊசியாகும். பனிக்குடப்பை தானாக உடைந்து திறக்காவிட்டால், பனிக்குட நீரை வெளியேறுவதற்காக இந்தக் கொக்கி ஊசி பயன்படுத்தப்படும். இதைச் செய்யும்போது எவ்வித வலியும் இருக்காது.
ஃபோர்செப்ஸ்: பிரசவத்தின்போது குழந்தையை வெளியே இழுக்க, வாக்கூம் கருவிக்கு பதில் இதையும் பயன்படுத்தலாம்.
தொப்புள் கிளாம்ப்: தொப்புள் கொடியை பிடித்துப் பொருத்துவதற்காக இந்த பிளாஸ்டிக் கிளாம்ப் (கிளிப்) பயன்படுத்தப்படும். தொப்புள் கொடியை வெட்டும்போது, உங்களுக்கோ, குழந்தைக்கோ எவ்வித வலியும் இருக்காது.
வாக்கூம் கருவி: பிளாஸ்டிக் அல்லது உலோகத்தாலான ஒரு கப் குழந்தையின் தலையை நன்கு பிடித்துக்கொள்ளும்படி பொருத்தப்படுகிறது. அதன் பிறகு குழந்தை பிறப்புறுப்பின் வழியாக வெளிவருவதற்கு உதவியாக உறிஞ்சி இழுப்பதன் மூலம் குழந்தை வெளியில் கொண்டு வரப்படுகிறது (உதவியுடன் கூடிய இயற்கைப் பிரசவம்) .
குழந்தை கண்காணிப்புத் திரை: பிரசவத்தின்போது பெண்ணின் வயிற்றில் பட்டை போன்ற ஒன்று பொருத்தப்படும், அதன் மற்றொரு முனை ஒரு திரையுடன் இணைந்திருக்கும், அந்தத் திரையில் குழந்தையின் இதயத்துடிப்பு வீதம் மற்றும் தசைச்சுருக்கத்தினைக் கண்காணிக்கலாம்.
பிரசவத்தின்போது பின்பற்ற வேண்டிய சுவாச முறைகள் (Breathing techniques during labour)
பிரசவத்தின்போது சீரான இடைவெளியில் சுவாசிப்பதால் உங்களுக்கும் குழந்தைக்கும் போதிய ஆக்சிஜன் கிடைக்கும். இந்த முறையான சுவாசப் பயிற்சிகளைச் செய்தால், தசைச்சுருக்கத்தைச் சமாளிக்கவும் உதவுகிறது. உடலைத் தளர்த்திக்கொள்வதும் சுவாசத்தை முறையாக வைத்துக்கொள்வதும், மருத்துவ உதவியுடன் குழந்தை பிறப்பதில் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க உதவுகிறது.
ஒருவர் பதற்றமாக அல்லது பயந்து இருக்கும்போது, சுவாசம் வேகமாகவும் மூச்சு திணறுவது போலவும் இருக்கும். இப்படி பயத்தில் சுவாசிக்கும்போது உடலுக்கும் குழந்தைக்கும் கிடைக்கும் ஆக்சிஜன் அளவு குறைந்துவிடுகிறது. பதற்றத்துடனும் பயத்துடனும் இருப்பதால், உடலின் ஆற்றலும் தீர்த்து களைப்படைந்துவிடுவோம். குழந்தை பிறக்கும்போது, குழந்தை வெளிவரும்போது ஏற்படும் சிரமத்தைச் சமாளிப்பதற்காக உடலில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆற்றலைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இவற்றை முயற்சி செய்யலாம் (Techniques to try):
கண்களை மூடி, சுவாசத்தில் கவனம் செலுத்த வேண்டும், சுவாசம் சீரான இடைவெளியில் நடக்கிறதா என்று பார்க்க வேண்டும். மொத்தத்தில், நீங்கள் வெளிவிடும் மூச்சும் உள்ளிழுக்கும் மூச்சும் ஒரே அளவு ஆழமாக, நீளமாக இருக்க வேண்டும். அடுத்த முறை உள்ளிழுக்கும் முன்பு சிறிய இடைவெளி இருக்க வேண்டும்.
சுவாசத்தை எண்ணுதல்: மூச்சை உள்ளிழுக்கும்போது ஒன்றிலிருந்து மூன்று அல்லது நான்கு வரை அல்லது உங்களுக்கு சௌகரியமான எண்ணிக்கை வரை மெதுவாக எண்ணவும். மூச்சை வெளியே விடும்போதும் அதே போல் எண்ணவும். 3 எண்ணும் வரை மூச்சை இழுத்து, 4 எண்ணும் வரை வெளியில் விடுவது எளிதாக இருக்கும்.
மூச்சை உள்ளிழுக்கும்போது மூக்கின் வழியாக உள்ளிழுத்து, வெளியே விடும்போது வாய் வழியாக விட வேண்டும். தொண்டை வறண்டு போகாமல் இருப்பதற்காக, தசைச்சுருக்கங்கள் ஏற்படும் இடைவெளிகளில் லேசாக சிறிது நீர் அருந்தலாம்.
குழந்தை பிறப்பின் வகைகள் (Types of delivery)
சுகப்பிரசவம்: இதுவே பெரும்பாலும் பொதுவான மற்றும் பாதுகாப்பான குழந்தை பிறப்பு முறையாகும்.
மருத்துவ உதவியுடன் குழந்தை பிறத்தல்: சில சமயம், பிறப்புறுப்புப் பாதையில் இருந்து குழந்தை வெளியே வர உதவியாக குழந்தையின் தலையில் ஒரு உறிஞ்சும் கப் போன்ற கருவியை வைத்து உறிஞ்சுவதன் மூலம் பிரசவத்திற்கு உதவி செய்யப்படும். இம்முறை மருத்துவ உதவியுடன் கூடிய குழந்தை பிறப்பு எனப்படுகிறது. மருத்துவ உதவியுடன் கூடிய குழந்தை பிறப்பில் பொதுவான முறைகளில் சில: எப்பிசியோட்டமி (பிறப்புறுப்பை விரிவடையச் செய்தல்), பனிக்குடத்தை உடைத்து (அம்னியோட்டமி) ஃபோர்செப்ஸ் கருவி மூலம் குழந்தை வெளியே வர உதவுதல்.
அறுவை சிகிச்சை முறை (சிசேரியன் அல்லது சி-செக்ஷன்): சில சமயங்களில் இயற்கை முறையில் சுகப்பிரசவம் முடியாமல் போகலாம். சி-செக்ஷன் என்பது குழந்தையை வெளியே எடுக்கச் செய்யும் அறுவை சிகிச்சையாகும்.
குறிப்பாக பின்வரும் சூழ்நிலைகளில், தாயையும் குழந்தையையும் பாதுகாப்பதற்காக சி-செக்ஷன் அறுவை சிகிச்சை செய்யப்படலாம்:
குழந்தை தலை கீழாகத் திரும்பாமல் இருக்கும்போது
கீழ் இடுப்புப் பகுதி வழியே வெளியே வர முடியாத அளவுக்கு குழந்தை பெரிதாக இருந்தால்
நஞ்சுக்கொடி மற்றும் தொப்புட்கொடி சார்ந்த பிரச்சனைகள் இருந்தால்
குழந்தையின் இதயத்துடிப்பு வீதம் மெதுவாக இருந்தால்
பாதுகாப்பற்ற அளவுக்கு தாயின் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால்
இப்போது பல பெண்கள், பிரசவ வலிக்கு பயந்து சி-செக்ஷன் அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளத் தேர்வு செய்கிறார்கள்.