பிரசவத்துக்குப் பிறகான கருத்தடுப்பு பற்றிய விழிப்புணர்வும் அவசியம். ஏனென்றால், புதிதாகக் குழந்தையைப் பெற்றெடுத்த தம்பதியருக்கு குழந்தை பிறந்ததுமே எந்த மாதிரியான கருத்தடை சாதனத்தைப் பயன்படுத்த வேண்டும்; குழந்தை பிறந்ததும் எவ்வளவு சீக்கிரத்தில் இந்த சாதனங்களைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்பது பற்றிய விபரங்கள் அவ்வளவாகத் தெரிவதில்லை.
பிரசவத்துக்குப் பிந்தைய கருத்தடுப்பு மற்றும் தேவை இடைவெளி. குழந்தையைப் பிரசவித்த முதல் 6 மாதகாலத்தில் திட்டமிடப்படாமல், குறுகியகால இடைவெளிக்குள் கருத்தரிப்பு நிகழாமல் தடுப்பதுதான் இதன் நோக்கம்.
குழந்தை பிறந்ததுமே குடும்பக் கட்டுப்பாடு பற்றிய புரிதலும், அதற்கான வாய்ப்பு வசதிகளும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. குழந்தை பிறந்தபிறகு எந்தமாதிரியான கருத்தடை சாதனத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற விபரமும் அவர்களுக்குத் தெரிவதில்லை.
‘‘பிரசவம் ஆனதும் அதைத் தொடர்ந்த 6 மாதங்கள் பிரசவத்துக்குப் பிந்தைய காலம் எனப்படுகிறது. இந்த 6 மாதகாலத்தில் புதிதாகக் குழந்தையைப் பெற்றெடுத்த பெற்றோர் கருத்தடை முறை ஒன்றைப் பயன்படுத்தினால் திட்டமிடப்படாத கருத்தரிப்பைத் தவிர்க்கலாம். குறுகிய இடைவெளிக்குள் கருத்தரிப்பு நிகழ்வதால் ஏற்படக்கூடிய உடல்நலன் தொடர்பான அபாயங்களையும் தவிர்க்க முடியும்.
பிரசவித்த உடனே குறுகிய இடைவெளிக்குள் கருத்தரிப்பதால் தாயின் உடல்நலம் கெட்டு, தாய்க்கு மரணம் ஏற்படக்கூடிய அபாயம் அதிகரிக்கிறது. திட்டமிடப்படாத கருத்தரிப்பின் விளைவுகளை பிரசவத்துக்குப் பிறகு பல மாதங்களுக்கு காணலாம். இதனால் தாய்க்கு மனச்சோர்வும், குழந்தைகளை வளர்ப்பதில் நெருக்கடிகளும் உண்டாகின்றன.
பிரசவத்துக்குப் பிந்தைய கருத்தடுப்பு முறைகள் பற்றிய தகவல்களை கணவனும் மனைவியும் அறிந்து கொள்வதால் அவர்களுடைய உடல்நலம் மேம்படுகிறது.
காப்பர் ‘டி’ என்று சொல்லப்படும் IUD- கள். தாமிரக் கம்பியினாலான இந்த சாதனம் குழந்தை பிறந்ததுமே அல்லது 48 மணி நேரத்துக்குள் பெண்ணின் கருப்பைக்குள் நுழைக்கப்படுகிறது. குழந்தை பிறந்த 4 வாரங்கள் கழித்து கூட, IUD-களை நுழைக்க முடியும். தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு குழந்தையைப் பிரசவித்த 6 வாரங்களில் புரொஜெஸ்ட்டின்- ஒன்லி (Progestin only) ஊசிகளையும், மாத்திரைகளையும் தொடங்கலாம். DMPA ஊசி 3 மாதங்களுக்கு ஒருமுறை போடப்படுகிறது.
ஆனால் புரொஜெஸ்ட்டின் (Progestin) ஒன்லி மாத்திரைகளை தினமும் ஒரு தடவை எடுத்துக் கொள்ள வேண்டும். தாய்ப்பால் புகட்டாத பெண்கள் குழந்தையைப் பிரசவித்த உடனே புரொஜெஸ்ட்டின் – ஒன்லி முறைகளைப் பின்பற்ற வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். C எஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்டின் மாத்திரைகள் இரண்டையும் குழந்தையைப் பெற்றெடுத்தபிறகு, தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்தி 6 மாதங்கள் கழித்து தர வேண்டும்.
தாய்ப்பால் புகட்டினாலும், புகட்டாவிட்டாலும் எல்லாப் பெண்களும் குழந்தையைப் பிரசவித்த பின்னர் காண்டம்களை ஒரு கருத்தடை முறையாகப் பயன்படுத்தத் தொடங்கலாம். குழந்தையைப் பிரசவித்ததும் தாய்ப்பால் புகட்டுவது ஓர் இயற்கையான கருத்தடை முறையாகும். இதை மருத்துவர்கள் LAM என்கின்றனர். எனினும், பிறந்த குழந்தைக்கு 6 மாதங்கள் ஆனதும் தாய்மார்கள் LAM முறையைவிட்டுவிட்டு வேறொரு கருத்தடை முறைக்கு மாற வேண்டும்.
C டியூபல் லிகேஷன் (Tubal ligation) எனப்படும் பெண்களுக்கான கருத்தடை அறுவைசிகிச்சையை பிரசவமான உடனே அல்லது 4 நாட்கள் வரை அல்லது பிரசவித்த 6 வாரங்களுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இது ஒரு நிரந்தரமான கருத்தடை முறை. எனவே, இனிமேல் குழந்தை வேண்டாம் எனத் தீர்மானிக்கும் பெண்கள் மட்டுமே இந்த அறுவை சிகிச்சையை செய்துகொள்ள வேண்டும்.
மேற்கண்ட கருத்தடை முறைகளைப் பற்றி மகப்பேறு மருத்துவர் அல்லது மகளிர் நல மருத்துவரிடம் பிரசவத்துக்கு சில வாரங்களுக்கு முன்பே கலந்தாலோசியுங்கள். அப்போதுதான் பிரசவம் ஆனதும் உங்களுக்குப் பொருத்தமான ஒரு கருத்தடை முறையை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும்.