1. காய்ச்சல் என்பது வியாதி அல்ல, உடலில் ஏற்பட்ட ஓர் உபாதைக்கு எதிராக உடல் மேற்கொள்ளும் போர். நம் உடலுக்குள் நுழைந்த வைரஸ் அல்லது பாக்டீரியாவை கொன்றொழிக்கும் பொருட்டு ஏற்படுவதுதான் உடற்சூடு. உபாதைக்கான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கு மருந்து எடுத்துக் கொள்ளும்போது காய்ச்சல் விடைபெறும்.
2. பாரசிட்டமால் கொடுத்தாலே காய்ச்சல் சரியாகிறது என்றால், அது உடல்வலி மற்றும் சோர்வினால் ஏற்பட்ட காய்ச்சலாக இருக்கலாம். மருந்து கொடுக்கும் இடைவெளி, குறைந்தபட்சம் 4 மணி நேரமேனும் இருக்க வேண்டும். காய்ச்சலால் உடல் தகித்தால், ‘ஸ்பான்ச் பாத்’ முறையில், ஈரத்துணியை வைத்து உடலை தலை முதல் பாதம் வரை, சூடு தணியும் வரை ஒத்தி எடுப்பது நலம். 48 மணி நேரத்திற்குப் பிறகும் காய்ச்சல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை காண்பது நலம்.
3. சளியினால் காய்ச்சல் என்றால், எடுத்தவுடன் ஆன்ட்டிப் பயாடிக் மருந்துகளை நாடுவது நல்லதல்ல; மருத்துவர் தரும் வழக்கமான சளி மருந்தே போதும். அவ்வப்போது வெந்நீர் மற்றும் குளிர்ச்சி அல்லாத பொருட்களைத் தருவது போதும்.
4. சுக்கு, மிளகு, சேர்ந்த கஷாயமும், துளசி, ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி போன்ற இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, நீரை வடிகட்டி, கொஞ்சம் ஆறியப் பிறகு சிறிது தேன் கலந்து, காலை, மாலை என இருவேளைகள் மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குக் கொடுக்கலாம்.
5. குடிக்கும் நீரைத் தூய்மைப்படுத்தி காய்ச்சிக் கொடுப்பதாலும், சுகாதாரம் இல்லாத உணவுப்பொருட்களைத் தவிர்ப்பதன் மூலமும் டைபாய்ட் மற்றும் சில வைரஸ் காய்ச்சலை தவிர்க்கலாம்
6. போதிய நீரை அவ்வப்போது குடிக்க வைத்து, அடிக்கடிச் சிறுநீர் கழித்தால் நோய்க்கிருமிகள் உடலை விட்டு வெளியேறும். ‘நோய் நாடி நோய் முதல் நாடி’ என்ற திருக்குறளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நோயின் மூலகூறுக்குச் சிகிச்சை செய்வதே நலம்
7. பழம், பழச்சாறு போன்றவைகளை உணவுக்கு முன்பு குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு முன்னராவது கொடுக்க வேண்டும். அல்லது உணவிற்கு பின்பு இரண்டு மணிநேரமேனும் கழித்துக் கொடுப்பது, அதன் பூரண சக்தியை உடலுக்குத் தரும்.
8. கொசு மருந்துகளையும் கொசுவர்த்திகளையும் தவிர்த்து வேப்பிலைப்புகை, பூண்டு, கற்பூரம், கொசு வலை அடித்தல், வீட்டினை, சுற்றுப்புறத்தைத் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் போன்ற இயற்கை வழிமுறைகளையும் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றலாம்
9. காய்ச்சலில் குழந்தைகள் இருந்தால், மருந்துக் கொடுத்து அவர்களைத் தனிமைப்படுத்திக் கொண்டே இருக்காதீர்கள், அந்த நேரத்தில் நீங்கள் அவர்களுடன் உரையாடிக் கொண்டும் அல்லது உங்கள் அருகாமையைக் கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும் .
10. குழந்தையின் உடல்நலத்திற்கும் மனநலனிற்கும், ஆரோக்கியமான உணவு, சுத்தமான குடிநீர், நல்ல வெளிச்சம், நல்ல காற்று, ஆடிப்பாடி விளையாடுவது என்று குழந்தைகளின் உடல்நலத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுங்கள்