Home பெண்கள் உடல் கட்டுப்பாடு தூக்கமும் கண்களை தழுவட்டுமே!

தூக்கமும் கண்களை தழுவட்டுமே!

24

எந்திரமயமான பொருளாதாரத்தை மட்டுமே மையமாகக் கொண்டு

அமைந்துவிட்ட வாழ்க்கைச் சூழலில், எங்கெங்கு காணினும்-போட்டிகள், பொறாமைகள், அருவருக்கத்தக்க சூழ்ச்சிகள். மனித வாழ்க்கை ஒரு நாளில் உள்ள 24 மணிநேரமும் அதிகபட்ச விழிப்புணர்வுடன் இருந்தால்தான் வாழ்க்கைப்போராட்டத்தை சமாளிக்க முடியும் என்ற சூழல். உளவியல் ரீதியாக பல முக்கிய காரணங்கள் இருந்தாலும் உறக்கம் வராததற்கு உடலியல் ரீதியாக சில பிரச்சினைகள் இருக்கலாம்.

மூளை மற்றும் நரம்புகள் தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு, இதயம் தொடர்பான பிரச்சினை இருப்பவர்களுக்கு, உடலில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் உறக்கம் பாதிக்கப்படலாம்.

எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும் உறக்கம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.

ஹார்மோன் பிரச்சினைகளாலும் தூக்கமின்மை ஏற்படும்.

தூக்கத்தில் நடப்பது மற்றும் உளறுதல் தூக்க்தில் பற்களை நறநறவென

கடிப்பது; இவை தவிர இன்சோமினியா எனப்படும் தூக்கமின்மை நோயும் ஒரு சிலருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நோயின் அறிகுறிகள்:சீக்கிரம் விழிப்பு வருதல், அடிக்கடி விழிப்பு வருதல், தூங்கமுடியாமை, காலையில் எழும்போது ஒருவித மந்த நிலை (சுறுசுறுப்புடன் செயல்பட முடியாத நிலை). இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். உறக்கம் என்பது இயற்கையாக உடலும் உள்ளமும் ஓய்வு பெறுவதற்கு அத்தியாவசியமான ஒன்றாகும்.

ஆழ்ந்த நிலையில் தேவையான அளவு தூங்கி எழுந்தால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியும் உத்வேகமும் பெறும். குழந்தைகளுக்கு பொதுவாகவே 15 முதல் 16 மணி நேரம் தினமும் உறக்கம் தேவை. அதுவே இளம் வயதில் 8 முதல் 9 மணி நேரமும் அதற்கடுத்து உள்ளவர்களுக்கு 7 முதல் 8 மணி நேரம் உறக்கம் தேவை. அதாவது பொதுவாக சராசரியாக ஒரு மனிதனுக்கு தினமும் 8 மணி நேரம் உறக்கம் தேவை.

வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை உறக்கத்திற்காக ஒதுக்கினால் ஆரோக்கியமான வாழ்வுக்கு உத்தரவாதம். அது மட்டுமல்ல; தெளிவான
சிந்தனையுடன், முழுமையான அர்ப்பணிப்புடன், முழு உழைப்பையும் நமது வேலைகளில் காட்டமுடியும். உறக்கம் தொடர்பாக எந்தப் பிர்ச்சினை இருந்தாலும், மருத்துவரை அணுகி அவர்தம் ஆலோசனையைப் பெற்று அதன்படி செயல்படுவது மிகச்சிறப்பானது. இருப்பினும் நாமும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் சிறப்பாக வாழலாம். அவற்றுள் சில:

உறக்கத்திற்கு என ஒதுக்கப்படும் நேரத்தை (சராசரியாக தினமும் 8 மணி நேரம் மற்றும் குறித்த நேரத்துக்கு) முழுமையாக முறையாகப் படுத்து, பயன்படுத்த வேண்டும்.

உறங்குவதற்கு முன் மது வகைகளை பயன்படுத்தக்கூடாது. படுக்கைக்கு முன் புகைபிடிப்பதோ இடையில் விழிப்பு வந்தால் புகை பிடிப்பதோ கூடாது.

படுப்பதற்கு முன் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்ளக் கூடாது. மிதமான அளவு உணவு உட்கொண்ட பின் ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரம் கழித்து உறங்குவது நல்லது.

தினமும் உடற் பயிற்சி செய்வதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உறங்குவதற்கு 4 அல்லது 5 மணி நேரம் முன்னதாக உடற்பயிற்சி செய்தால் ஆழ்ந்த உறக்கத்திற்கு வழி கிடைக்கும்.

உறங்கும் நேரத்தில் அதிக அளவு ஒலி-ஒளி இரைச்சல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரவில் குறிப்பிட்ட நேரத்தில் உறங்கி அதிகாலையில் குறித்த நேரத்துக்கு விழித்துக்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தியானம், யோகா போன்ற பயனுள்ள பயிற்சிகளை செய்யலாம். உறங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக மனதுக்கு மகிழ்ச்சி தரும் புத்தகங்களைப் படிப்பது மற்றும் பாடல்களையோ, இசையையோ கேட்பதை வாடிக்கையாகக் கொள்ளலாம். படுக்கைக்குச் செல்லும் முன், கவலைகளை மறந்துவிட்டு உறங்குவதை மட்டுமே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

வாய்ப்புள்ள போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக கண்ணிரண்டையும் விற்று சித்திரம் வாங்குவதைப் போல ஆகிவிடாமலும், உடலும் உள்ளமும் முழு ஓய்வு பெறும் வகையில், ஆழ்ந்த தேவையான உறக்கத்தைப் பெற்று நோய் நொடியின்றி அமைதியாக நாமும் வாழ்ந்து மற்றவர்களும் வாழ வழி விடுவோம்