Home ஆரோக்கியம் தும்மல் அலட்சிய படுத்த வேண்டாம் பல நோய்களுக்கு அதுவே வழி வகுக்கும்

தும்மல் அலட்சிய படுத்த வேண்டாம் பல நோய்களுக்கு அதுவே வழி வகுக்கும்

25

பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான பஸ் நிலையம், சூப்பர் மார்க்கெட், தியேட்டர், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில்,

அருகில் இருப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் சிலர் தும்முவார்கள். இதை பெரும்பாலும் யாரும் கருத்தில் கொள்ளாமல் சாதாரணமாக எண்ணி விட்டுவிடுவார்கள். ஆனால் அடுத்த சில நாட்களில் அருகில் இருந்தவர்களுக்கு, ஜலதோஷம் வந்ததற்கான காரணம் தெரியாமலேயே இருக்கும். பொது இடத்தில் திறந்த வெளியில் தும்முவதால் அதிலிருந்து வெளியேற்றப்படும் கிருமிகள் மற்றவர்களுக்கு ஜலதோஷத்தை உண்டாக்கும் கிருமிகளை பரப்பிவிடும். அது மேலோங்கி காய்ச்சல் வந்து அதுவே விஷமாகி கடும் அவஸ்தைக்கு ஆட்படுத்தும்.

சாதாரணமாக கருதப்பட்ட தும்மல் எவ்வளவு வலிமையானது என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருந்தாலும் அலட்சியமே பல நோய்களுக்கு வழி வகுக்கிறது. இதில் முக்கியமானது காற்றில் பரவும் பன்றிக் காய்ச்சல், இது தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது.மனித உடலில் சாதாரணமாக ஏற்படக்கூடிய உடலியல் மாற்றங்களில் தும்மலும் ஒன்று. காற்று தவிர வேறு எந்த அந்நிய பொருளும் மூக்கில் நுழைந்தால், மூக்கு அதை ஏற்க மறுப்பதால் ஏற்படக்கூடிய செயல்தான் தும்மல்.

நமது நாசித் துவாரத்தில் முடியிழைகள் அதிகளவில் இருக்கின்றன. நாம் உள்ளிழுக்கும் காற்றில் கண்ணுக்கு தெரியாத தூசு, துகள் இருந்தால் அவற்றை வடிகட்டி அனுப்புவதுதான் இவற்றின் வேலை. இங்கு உள்ள ஒரு மென்மையான சவ்வுப் படலம் நிறமற்ற திரவத்தை சுரக்கிறது. அளவுக்கு அதிகமான தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்தால், இந்த சவ்வுப்படலம் தூண்டப்பட்டு, உடனே அவற்றை வெளியே தள்ளும் முயற்சியில் அதிக நீரை சுரக்கிறது. இதன் தூண்டுதலால், நுரையீரல், தொண்டை, வாய் மற்றும் வயிற்று தசைகள் ஒன்று சேர்ந்து சுவாச பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும், வேகமாகவும் மூக்கு வழியே வெளியேற்றுகிறது. அவ்வாறு வெளியேற்றும்போது மூக்கின் வழியே உள்ளே நுழைந்த எந்த அந்நிய பொருளும் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் தும்மலாக வெளியேற்றப்படும்.

சாதாரண தும்மல் சில நிமிடங்களில் நின்றுவிடும். ஆனால் சிலர் தொடர்ச்சியாக தும்முவார்கள். மூக்கில் அரிப்பு ஏற்பட்டு ஒரு கைத்துண்டு நனைகிற அளவுக்கு கூட மூக்கிலிருந்து நீர் வெளியேறும். இதற்கு ஒவ்வாமை தும்மல் என்கின்றனர். வீட்டில் படியும் தூசு, ஒட்டடை, பஞ்சு, சணல், கயிறு, கம்பளி, சிமெண்ட், சுண்ணாம்பு, உமி போன்றவற்றின் தூசு மூக்கில் பட்டதும் அடுக்கு தும்மல் தொடங்கிவிடும். இதுபோல் குளிர்ந்த காற்று, ஊதுவத்தி, சாம்பிராணி போன்றவற்றின் புகை, பார்த்தீனிய செடியின் முள்ளிழைகள், பூக்களின் மகரந்தங்கள், பூஞ்சைகள் முதலியவை அடுக்கு தும்மலுக்கு வழி வகுக்கும். படுக்கை விரிப்புகள், பாய், தலையணை, மெத்தை ஆகியவற்றில் காணப்படும் பூச்சிகள், வளர்ப்பு பிராணிகளின் உடலிலிருந்து வெளியேறும் முடிகள் காரணமாகவும் இது தூண்டப்படுகிறது.

பொதுவாக, சாதாரண உடலியல் மாற்றத்தால் தும்மும்போது பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் தும்மல் விடும் நபர்களின் அருகில் இருப்பவர்களின் உடல்நிலைக்கு ஏற்றாற்போல் ஜலதோஷம் தொற்றிக் கொள்ளும். அதே சமயம் தும்முபவர்கள் காற்றில் பரவும் கிருமிகள் மூலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அதை சுவாசிக்கும் மற்றவர்களுக்கும் கண்டிப்பாக அந்த நோய் பரவும். இது சங்கிலி தொடர்போன்று பரவி ஏராளமான மனித உயிர் அழிய வழி ஏற்படுத்தும். இதுபோல் அவ்வப்போது நிகழ்வதும் உண்டு. இதை தடுக்க சுகாதார துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.தலைவலி தனக்கு வந்தால்தான் தெரியும் என்பதைப்போல, பரவும் நோயின் அபாயம் தமக்கு வந்த பின் தான் உணர வேண்டுமா? யாருக்கோ, எங்கோ நோய் பரவினால் எனக்கென்ன என்றில்லாமல், தும்மல் வந்தால் அலட்சியம் காட்ட வேண்டாம். தும்மல் வருவதற்கு முன் கைக்குட்டையை பயன்படுத்த தயங்க வேண்டாம்.

தும்மலை தடுக்க…

ஒரு தேக்கரண்டியில் சமையல் உப்பை எடுத்துக்கொண்டு, அதில் எட்டில் ஒரு பங்கு உப்பை 200 மிலி இளம் சூடான தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். இப்போது சுத்தமான துணியை அந்த தண்ணீரில் நனைத்து பிழிந்துகொண்டு, திரி போல சுற்றிக்கொண்டு, ஒவ்வொரு நாசி துளையிலும் விட்டு மூக்கை சுத்தப்படுத்தினால் தும்மல் நிற்கும்.

இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது முகத்தில் சிறு துணியை கட்டிக்கொள்ளலாம். இதனால் தூசுகள் மூக்கின் உள்ளே செல்ல வழி ஏற்படாது. ஏசி அறையில் அமர்ந்து வேலை பார்த்தால், மாஸ்க் பயன்படுத்தலாம். இதனால் குளிர்ந்த காற்று மூக்கினுன் செல்லாது.