பாலிவுட்டின் மோசமான ஹீரோ விருது இம்ரான் கானுக்கும், மோசமான நடிகைக்கான விருது தீபிகா படுகோனேவுக்கும் கிடைத்துள்ளது.
பாலிவுட்டில் மோசமான ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் போன்றவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது கோல்டன் கேலா விருது. 4வது கோல்டன் கேலா விருதுகளைப் பெற்றவர்கள் விவரத்தைப் பார்ப்போம்.
நடிப்புக்கு பேர்போன ஆமீர் கானின் சகோதரி மகன் இம்ரான் கானுக்கு மோசமான நடிகர் விருது கிடைத்துள்ளது. பாலிவுட் நடிகை என்பதைக் காட்டிலும் ஐட்டம் டான்சர் என்று பெயர் வாங்கியுள்ள தீபிகா படுகோனேவுக்கு மோசமான நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. ஷாருக் கானின் கடும் உழைப்பில் வெளிவந்த ரா ஒன் மோசமான படத்திற்கான விருதைப் பெற்றுள்ளது. மோசமான இயக்குனர் விருது ரா ஒன் படத்தை இயக்கியதற்காக அனுபவ் சின்ஹாவுக்கு கிடைத்துள்ளது.
தம்மாரோ தம் மற்றும் ஆரக்ஷான் படங்களில் மோசமாக நடித்ததற்காக மோசமான துணை நடிகர் விருதைப் பெற்றுள்ளார் பிரதீக் பாபர்.
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலையே என்று சொல்வது போன்று இருந்தது மோசமான படத்திற்கான விருதைப் பெற்ற ஷாருக்கானின் பேச்சு.
விருதை வாங்கிய கையோடு பேட்டியளித்த அவர் கூறுகையில்,
இந்த விருது வழங்கும் விழாவிற்கு என்னை அழைத்தில் சந்தோஷம். உண்மையான ரசிகர்களால் நடத்தப்படுவதால் இது ஒரு ஸ்பெஷலான நிகழ்ச்சி. நான் பிற விருது வழங்கும் விழாக்களுக்கு சென்றுள்ளேன். ஆனால் இது ஸ்பெஷல் என்றார்.