*இந்தக் காலத்துப் பெண் குழந்தைகள் எட்டு, ஒன்பது வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்கூட்டியே மாதவிலக்கு என்றால் என்ன, அது வந்ததும் என்ன செய்ய வேண்டும், அது பயப்படுகிற விஷயமல்ல என்பதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
*பருவ வயதை எட்டும் போது ஏற்படுகிற இனக் கவர்ச்சி பற்றியும், அது இயல்பான ஒன்றே என்றும் சொல்லிக் கொடுங்கள். அதை ஒரு சீரியஸான விஷயமாக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதை விளக்குங்கள்.
*பருவ வயதை எட்டியதும் உங்கள் மகளுக்கு ஆண்-பெண் உறவு பற்றி விளக்கலாம். அதில் அசிங்கப்படவோ, தயங்கவோ வேண்டியதில்லை. ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்த அறிவுரை அவளுக்கு முக்கியம்.
*படுக்கையில் சிறுநீர் கழித்தல், அளவுக்கதிமாக உடல் வியர்த்தல், மனச்சோர்வு, பசியின்மை, பயம், தூக்கமின்மை, படிப்பில் கவனமின்மை போன்ற அறிகுறிகள் உங்கள் மகளிடம் தென்பட்டால் அலட்சியம் செய்யாதீர்கள். அவள் பாலியல் ரிதியான தாக்குதலுக்கு உட்பட்டிருந் தாலும்கூட இந்த அறிகுறிகள் இருக்கக் கூடும்.
*தவிர்க்க முடியாமல் உங்கள் மகள் அப்படி ஏதேனும் பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகி இருந்தாலும், அவளைத் திட்டாதீர்கள். என்ன நடந்தது, எப்படி நடந்தது எனப் பொறுமையாக விசாரியுங்கள். அடுத்து அவளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்துங்கள்.
*திருமணத்துக்கு முன்பான செக்ஸ் ஏன் தவறானது என்றும், அது எந்தளவுக்குப் பெண்களை பாதிக்கும் என்றும், அதன் பின் விளைவுகள் என்னவென்றும் உங்கள் மகளுக்கு எச்சரிக்க வேண்டும். அதைத் தவிர்த்து ஏன் கூடாது என்பதற்கான விளக்கம் சொல்லி விட்டால் அதுவே அவர்களுக்கு விழிப் புணர்வைத் தரும்.