இன்றைய பெண்களில் பலர் வேலைக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும்கூட அவர்களில் பலர் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது.
அவ்வாறு வேலைக்கு செல்லும்போது குழந்தையை இன்னொருவர் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறார்கள். வேலைக்கு சென்று 8 முதல் 10 மணி நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு திரும்பி வந்தவுடன், குழந்தைக்கு அவசரம் அவசரமாக தாய்ப்பால் கொடுக்கிறார்கள்.
இதற்கிடையில், தொடர்ந்து பல மணி நேரம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதால், அவர்களது மார்பில் பால் கட்டிவிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனால் மார்பில் வலி எடுத்து அவதிக்குள்ளாகும் நிலையும் உள்ளது. மேலும், தாய்ப்பால் சுரப்பு குறைந்து போகும் ஆபத்து இருக்கிறது.
இதுபோன்ற சிக்கலில் உள்ள வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், தாய்ப்பாலை மிகவும் சுத்தமான பாத்திரத்தில் பிழிந்தெடுத்து சேகரித்து, அதை இறுக்கமாக மூடி விடுங்கள். பின்னர் அதை, பிரிட்ஜில் வைத்து விடுங்கள். பிரிட்ஜில் தாய்ப்பாலை 6 முதல் 8 மணி நேரம் வரையே வைத்து பாதுகாப்பதுதான் உகந்தது. பிரிட்ஜ் வசதி இல்லாதவர்கள் தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தினுள் தாய்ப்பால் கொண்ட பாத்திரத்தை வைக்கலாம்.
வீட்டில் குழந்தையை வைத்திருப்பவர்கள், பாதுகாப்பாக எடுத்து வைத்த தாய்ப்பாலை சுத்தமான கரண்டி மூலம் குழந்தைக்கு பசி எடுக்கும்போது ஊட்டிவிடலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.
தாய்ப்பாலுக்கு மிஞ்சிய சத்தான உணவு எதுவும் கிடையாது. வேலைக்கு செல்கிறேன் என்கிற ஒரே காரணத்துக்காக குழந்தைக்கு அதை கொடுக்காமல் தவிர்ப்பது தவறல்லவா?
அதனால் தாய்மார்களே… எந்த சூழ்நிலையிலும் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறந்து விடாதீர்கள்.