ஆயுள் குறைந்த அறிவான குழந்தை வேண்டுமா? நீண்ட ஆயுள் உடைய அறிவற்ற குழந்தை வேண்டுமா? இப்படியான மார்கண்டேயர் உருவான கதை உண்டு. `உங்கள் குழந்தை வெற்றியாளனாகவும் பலசாலியாகவும் இருக்க விரும்பினால் குழந்தைப் பேற்றை உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதிக்கு தள்ளிப்போடுங்கள்…’ என்கின்றனர் லண்டன் எகனாமிக்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
வயதான அம்மாக்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், உயரமானவர்களாகவும், அதிகம் படிப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸை சேர்ந்த மக்கள் தொகை ஆய்வு மையத்தின் இயக்குனர் மிக்கோ மிர்ஸ்கிலா தன் சக ஊழியர் கிரண்பார்க்லேயுடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், நடுத்தர வயதுப் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இளவயது தாய்மார்களின் குழந்தைகளை விட ஆரோக்கியமாக, உயரமாக மற்றும் மேதைகளாக இருக்கிறார்கள் என்று கண்டறிந்துள்ளார்.
‘தொழில்மயமான நாடுகளில் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் பெருகி வருவதால், அதிகப்படியான ஊதியம் கிடைக்கிறபோது ஆரோக்கியமான வாழ்க்கையும் அமைகிறது. படிப்பு, வேலை என முக்கிய குறிக்கோள்களை எட்டிய பிறகு வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கும் பெண்கள், 40 ப்ளஸ்களில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். கருத்தரித்தல் தொடர்பான பிரச்னைகள் இருந்த போதிலும், அறிவும் ஆரோக்கியமும் நிறைந்த குழந்தைகளை சமுதாயத்துக்குத் தர முடிகிற காரணத்தால், கூடியவரை பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தை தள்ளிப் போடுவது சரியானது” என்கிறார் மிக்கோ மிர்ஸ்கிலா.
‘1960 முதல் 1991 வரை பிறந்த 15 லட்சம் ஆண் மற்றும் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டதில், 40 வயதுக்கு மேலான பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் அதிக உயரமானவர்களாகவும், அதிக மதிப்பெண்களை பெறுபவர்களாகவும், அதிகம் படித்தவர்களாகவும் இருந்தனர். ஆரோக்கிய உடலைப் பெற்றவர்களாகவும் இருந்தனர்.
மகப்பேறு வயதை நீட்டிப்பது சம்பந்தமாக ஒரு மாறுபட்ட கோணத்தில் முன்னேற்ற ஏற்பாடுகளை கொண்டு செல்வது இப்போதைய உலகில் அவசியமாகிறது. குழந்தைப்பேற்றை எதிர்நோக்கும் பெற்றோர் வயது தள்ளிப்போவதால் ஏற்படும் ஆபத்துகளை அறிந்தவர்களாக இருந்த போதிலும், அதன் சாதகமான விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்’ என்கிறார் மிஸ்கிலா.